இயல் இசை நாடகம் நடிகர் திலகம் - பாலசுப்ரமணியன் இராதாகிருஷ்ணன்; பக். 230; ரூ. 285; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044-24342810.
1952-இல் வெளியான 'பராசக்தி' முதல் 1999-இல் வெளியான 'பூப்பறிக்க வருகிறோம்' வரை 288 திரைப்படங்கள், கெüரவ வேடங்களில் 17 திரைப்படங்கள் என 305 திரைப்படங்களில் சிவாஜி கணேசன் நடித்துள்ள புள்ளி விவரங்களுடன், பல்வேறு தகவல்களை தொகுத்து, நூலாகப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.
1967-இல் 'ஊட்டி வரை உறவு', 'இரு மலர்கள்' ஆகியனவும், 1970-இல் 'எங்கிருந்தோ வந்தாள்', 'சொர்க்கம்' ஆகியனவும் ஒரே நாளில் வெளியாகி 100 நாள்கள் ஓடின. 1982-இல் சிவாஜியின் 13 திரைப்படங்கள் வெளிவந்தன. வீனஸ் ஸ்டுடியோ தயாரிப்புக் குழுவினர் 'அமரதீபம்' படம் எடுக்கும்பொழுது பண நெருக்கடியில் இருந்தார்கள். அவர்களுக்காக சிவாஜி கணேசன் முன்பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார்; பிறரையும் முன்பணம் வாங்காமல் நடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
ஏழை விவசாயி ஒருவரின் உள்ளக் கிடக்கையை அறிந்து, அவரது வீட்டுக்கு சிவாஜி கணேசன் நேரில் சென்று உணவருந்தி, அந்தக் கிராமத்தையே மகிழ்வித்திருக்கிறார். 'பராசக்தி' படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய வேலூர் நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஆண்டுதோறும் பொங்கலுக்கு நேரில் சென்று பரிசுகள் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்; சிவாஜியின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அந்த மரியாதையை செய்து வருகிறார்கள்; 'தாதா சாகேப் பால்கே விருது' பெற்றபோது, செய்தியாளர் ராஜீவ் மெஹ்ரோத்ராவுக்கு அளித்த நேர்காணலில் சரளமாக ஆங்கிலத்தில் பேசி சிவாஜி அசத்தினார் போன்ற சுவையான தகவல்கள் பல உண்டு. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, கலைப்பயணம் வந்த மேலை நாட்டவருக்கு, 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார் என்பது ஒரு தகவல். திரை ஆர்வலர்களைக் கவரும் நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.