சரியான குதிரைகளைத் தேர்ந்தெடுங்கள் (மேலாண்மை வழிகள்); ஜி.எஸ்.சிவகுமார்; பக். 256; ரூ. 290; சுவாசம் பதிப்பகம்; சென்னை-127; ✆ 81480 66645.
தனிக்கலையான விற்பனைத் துறையில் வெற்றி பெறுவது குறித்து வெளியான நூல்களின் வரிசையில், இந்த நூலுக்கு தனி இடம் உண்டு. தனது 35 ஆண்டு கால அனுபவங்களிலிருந்து கிடைத்த பாடங்களை, படிப்பினைகளை 100 தலைப்புகளில் அளித்துள்ளார் நூலாசிரியர்.
விற்பனைத் துறையினர் அதிகமாகப் பேச வேண்டும் என்பதுதான் பொது விதி. ஆனால், 'அதிகம் கேளுங்கள், குறைவாகப் பேசுங்கள்' என்று நூலின் ஆசிரியர் கூறுவது புதிதாக
இருந்தாலும், அந்த உத்தி வெற்றியைத் தரும் என உறுதியுடன் சொல்கிறார்.
மேலாண்மையில் மிக முக்கியமான விஷயம் பணியில் புதுமை. அரைத்த மாவையே அரைக்காமல் பணியில் புதுமையைப் புகுத்துவது தனிப்பட்ட முன்னேற்றத்துக்கு மட்டுமன்றி, சார்ந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும்; சிலர் எதற்கெடுத்தாலும் பொறுப்பை மற்றவர் தலையில் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ளப் பார்ப்பார்கள்; ஆனால், செயல்
பாடுகளுக்கு பொறுப்பேற்று, தவறுகள் நிகழ்ந்தாலும் ஒப்புக் கொண்டு மாற்றுவழி என்னவென்று யோசிக்க வேண்டும்; தனக்கு கீழ் பணிபுரிபவர்கள் சிறப்பான பணியைச் செய்தால் அதை வெளிப்படையாகப் புகழுங்கள், அதேவேளையில் பணியாளர்கள் தவறு செய்தால் தனியாகக் கண்டியுங்கள் போன்ற கருத்துகள் வெற்றிச் சூத்திரங்கள்.
ஓர் அணி எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்ப திட்டமிட்டு உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும்; இந்த விற்பனைத் துறை ஆட்டத்துக்கு சரியான குதிரைகள் முக்கியம் என்பது போன்ற பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகள் சுவாரசியமாக உள்ளன. விற்பனைத் துறையில் சாதிக்க விரும்புவோருக்கு நிச்சயம் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.