மதராஸ் மண்ணும்-கதைகளும்

மதராஸ் மண்ணும்-கதைகளும்; விநாயக முருகன்; பக். 144; ரூ.180; உயிர்மை பதிப்பகம்; சென்னை-20. 044-48586727
மதராஸ் மண்ணும்-கதைகளும்
Updated on
1 min read

மதராஸ் மண்ணும்-கதைகளும்; விநாயக முருகன்; பக். 144; ரூ.180; உயிர்மை பதிப்பகம்; சென்னை-20. 044-48586727
 சென்னையின் முகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது; ஆனால், அதன் ஆன்மா ஒருபோதும் மாறுவதில்லை. வந்தாரை வாழவைக்கும் நகரம் என்கிற சிறப்பு பெற்ற சென்னையின் ஒவ்வொரு பகுதியின் பின்னணியிலும் ஒரு கதை - வரலாறு இருக்கும். அந்த வகையில் ஓரளவுக்கு நாம் அறிந்த சென்னையின் அறியாத விஷயங்களை 22 கட்டுரைகளில் தந்துள்ளார் நூலாசிரியர்.
 முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுவிக் கட்டும்போது அந்த முயற்சிக்கு உதவி செய்தவர் கன்னிமாரா நூலகம் அமையக் காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஆளுநர் ராபர்ட் போர்க் கன்னிமாரா போன்ற தகவல்கள் வியக்க வைக்கின்றன. திரைப்படங்களிலேயே பெரும்பாலும் பார்க்க முடிந்த பின்னி மில்லுக்கு சென்னையின் வரலாற்றில் இருக்கும் தனித்துவம் குறித்த கட்டுரை உண்மையிலேயே தனித்துவமானது.
 சென்னைக்கும் மதராஸýக்கும் அந்தப் பெயர் வந்ததற்கான காரணங்களை சுவையுடன் விளக்குகிறது "பெயர்களும் காரணங்களும்' கட்டுரை. நூறாண்டுகள் கடந்து இன்றும் நிலைத்து நிற்கும் சென்னையின் "சிவப்பு மாளிகைகள்', பிரிட்டிஷ் ஆட்சிக் கால பொதுப் போக்குவரத்து தொடர்பான கட்டுரைகள் அருமை.
 அன்றைய கோஷா மருத்துவமனை (இன்றைய கஸ்தூர்பா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை) உருவானதில் பிரிட்டனின் பெண் மருத்துவர் மேரி ஆனின் பங்களிப்பு தொடர்பான கட்டுரை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
 வெறுமனே தகவல் தொகுப்புகளாக இல்லாமல் வாசிக்கத் தூண்டும் வகையில் எழுத்து நடை அணிசேர்க்கிறது. சென்னையின் பழைமையான வரலாற்றை அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com