துலுக்க நாச்சியார்

துலுக்க நாச்சியார்

துலுக்க நாச்சியார்- செ.திவான்; பக். 218;  ரூ. 200; ரெகான்- ரய்யா பதிப்பகம்,  திருநெல்வேலி;  ✆ 90803 30200.

பூலோக வைகுந்தம் என்று புகழப்படும் திருவரங்கம் நாட்டின் பன்னெடுங்கால சரித்திரத்தின் சாட்சியாக விளங்குகிறது. இக்கோயிலின் இரண்டாம் சுற்றான மகேந்திரன் திருச்சுற்றில் அமைந்துள்ள ஸ்ரீ பீபி நாச்சியார் சந்நிதி, அற்புதமான தெய்வீக அன்பின் அடையாளமாகக் காட்சி அளிக்கிறது. தில்லி சுல்தானின் மகளான ஸூரதாணி என்ற இஸ்லாமியச் சிறுமி, அரங்கனின் உத்ஸவ விக்கிரகமான செல்வப்பிள்ளை மீது கொண்ட மையலால் வைணவ சம்பிரதாயத்தினரின் பேரன்புக்கு எவ்வாறு பாத்திரமானாள் என்பதற்கான சான்று இந்தச் சந்நிதி.

இதுகுறித்து நூலாசிரியர் மேற்கொண்ட தீவிரமான ஆராய்ச்சியின் வெளிப்பாடே இந்த அரிய நூல். இந்நூலில் சுட்டிக்காட்டப்படும் பலநூறு மேற்கோள் குறிப்புகள், தேர்ந்த வல்லுநர்களின் கருத்துகள். அவற்றைத்  தேடிக் கண்டறிந்து தொகுத்திருக்கும்  திவானின் ஆய்வுப் புலமையும், கடும் உழைப்பும் நூல் முழுவதும் வெளிப்படுகின்றன.

பிற சமயத்தினரையும் அரவணைக்கும் வைணவத்தின் சிறப்பாக துலுக்க நாச்சியார் சந்நிதியை நூலாசிரியர் காண்கிறார். இதன் வரலாற்றுக் காரணங்கள் என்னவாக இருந்தாலும், ஸூரதாணியின் கதையில் பல  மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருந்தாலும், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டிட இந்த வரலாறு பயன்படும் என்ற அவரது கருத்து அனைவருக்கும் உடன்பாடானதே.

அழகர்கோவில், திருமலை ஆகிய கோயில்களிலுள்ள துலுக்க நாச்சியார் தொடர்பான  விவரங்களும், அவற்றின் பின்னணியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.  உயர்ந்த நோக்கத்துடன் கூடிய இந்த ஆய்வு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள அடிக்குறிப்புகள் தேடல் கொண்ட வாசகர்களுக்கு மிகவும் பயன்படும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com