செல்லி மற்றும் பிற கதைகள்

செல்லி மற்றும் பிற கதைகள்
Updated on
1 min read

செல்லி மற்றும் பிற கதைகள் - ஆசு; பக். 488;  ரூ. 500;  தமிழ்வெளி, சென்னை- 122; ✆ 90940 05600.

உடல் உழைப்பை மேற்கொள்வோர் எழுத்தாளர்களாகவும் இருப்பது தமிழில் மிகவும் குறைவே. கடைஞரான ஆ. சுப்பிரமணியன் என்ற ஆசுவின் நான்கு தொகுப்புகளிலுள்ள 46  சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.

ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ நிகழ்வுகள் மனதில் தைப்பதாகக் கடந்து செல்கின்றன. அவற்றையே எழுதுகிற  ஒருவர் சந்திக்கும்போது, கவிதையாகவோ, சிறுகதையாகவோ திரண்டு  இலக்கியமாகி விடுகின்றன.  

மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான 'ஒரு பூவரசு மரக் கட்டிலி'ல் கலைவாணியின் வாழ்வைச் சொல்லிச் செல்கிறது, ஒரு குறியீடாக வரும் கட்டில். அம்மாக்கள் வாழ்ந்த தெருவைப் படித்து முடிக்கும்போது, வீரம்மாள் உள்பட அனைவரையும் இன்னமும் விரிவாகப் பதிவு செய்திருக்கலாமே  என்ற ஏக்கம் தோன்றுகிறது. கிராமங்களில் ஒன்றுமில்லாத ஒன்று எவ்வாறு விசுவரூபம் கொண்டு மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிவிடுகிறது என்பதைக் காட்டுகிறது உயிரறிதல் கதை.

இசை வழியும் உடலின் சித்திரம் சிறுகதையை வேறு வகையில் முயன்று பார்த்திருக்கிறார் ஆசிரியர். பழுப்பு இலையில் காலங்கடந்தும் மணமாகாத ஒரு பெண்ணின் தவிப்பை வீட்டின் முன் அவள் நட்ட ஒரு முருங்கை மரத்துடன், பூவரசுவைப் போலவே, இணைத்துக் காட்டுகிறார்.

தொகுப்பின் பெருங்கதை அல்லது குறுநாவல்தான் செல்லி. செல்லியின் பயணத்துடன் நிறையூர்க்கன்னியின் கதையும் இணைய, தமிழில் மிகவும் குறிப்பிடக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.   அண்மையில் வெளியான கவனிக்கப்பட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com