டூரிங்குக்கு மறுப்பு - ஃபிரடெரிக் எங்கெல்ஸ்

டூரிங்குக்கு மறுப்பு - ஃபிரடெரிக் எங்கெல்ஸ்

டூரிங்குக்கு மறுப்பு - ஃபிரடெரிக் எங்கெல்ஸ் (தமிழில் - மு. சிவலிங்கம்);  பக். 552; ரூ. 600;  பாரதி புத்தகாலயம், சென்னை - 18; ✆ 044- 24332424.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்சிய உள்ளடக்கக் கூறுகளான தத்துவம், அரசியல்,  பொருளாதாரம், சோசலிசத்தை கடுமையாக விமர்சிக்கும் டூரிங்கின் எழுத்துகளால் ஜெர்மன் சமூக  ஜனநாயகக் கட்சியினர் கவரப்பட்டனர். இவருடைய குட்டி முதலாளித்துவக் கருத்துகளுக்கு எதிரான ஒரு கருத்துப் போரை நடத்தும் விதமாக மார்க்ஸ் யோசனையின்பேரில் தொடர்ச்சியாக எங்கெல்ஸ் எழுதிய விமர்சனங்களின் முழுத் தொகுப்புதான் 'டூரிங்குக்கு மறுப்பு'.

முகவுரையில் இயக்கவியலின் தோற்றம் முதல் நவீனப் பொருள் முதல்வாதம் வரை விளக்கப்படுவதுடன், தவிர்க்க முடியாத முதலாளித்துவ உற்பத்தி முறையும் அதன் வீழ்ச்சியும் விவரிக்கப்படுகின்றன.

முதல் பகுதியில் டூரிங்கின் தத்துவக் கோட்பாடுகளை விமர்சிக்கும் எங்கெல்ஸ், சமத்துவம், சுதந்திரம் என்கிற கருத்துகள் வரலாற்றுரீதியாக எவ்வாறு வளர்ச்சி பெற்றுவந்துள்ளன என்றும் விளக்குகிறார். இரண்டாம் பகுதியில் பொருளாதார உற்பத்தி நிலைமைக்கு ஏற்றவாறே அரசியல் அதிகாரம் அமைகிறது என்பதை விரிவான ஆய்வுகளுடன் உறுதி செய்கிறார்.

மூன்றாம் பகுதியில் சோசலிச கட்டமைப்பு பற்றி விரிவாகப் பேசும் எங்கெல்ஸ், டூரிங்கின் பல்வேறு கருத்துகளை வலுவாக  மறுதலிப்பதுடன், அரசு, மனித சுதந்திரம், மதம், குடும்பம், கல்வி, பால் உறவு, காதல், விபசாரம் தொடர்பான அவருடைய கருத்துகளையும் விமர்சிக்கிறார்.

எங்கெல்ஸின் புகழ்பெற்ற 'கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்' நூல், இதிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளே. மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாட்டைப் புரிய வைக்க,  கண்ணோட்டத்தை உருவாக்க உதவுகிற, இன்னமும் உலகெங்கும் பயிலப்படும் நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com