இந்திய இலக்கியச் சிற்பிகள் கி.ராஜநாராயணன்- க.பஞ்சாங்கம்; பக்.86; ரூ.50; சாகித்திய அகாதெமி, சென்னை-18; ✆ 044- 2431 1741.
தமிழ் எழுத்தாளர்களில் யாருக்குமே கிடைக்காத அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு வாய்க்கப்பெற்ற கி.ராஜநாராயணன் எழுத்துப் பணியோடு நிற்காமல், விவசாயிகள் நலன், மக்கள் நலன் எனப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர்.
சிறுகதை, நாவல், கட்டுரை, குழந்தை இலக்கியம், கடித இலக்கியம், பத்திரிகை, எழுத்து, அரசியல் என்று பன்முகத் தன்மைகள் கொண்ட கி.ரா. இலக்கிய ஆளுமை வியக்க வைத்தாலும், அவர் பள்ளிப்படிப்பைக் கூட நிறைவு செய்யாதவர். இருப்பினும், அவர் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டாலும், தமிழின் மீது கொண்ட அளப்பரிய பற்றுதல் கொண்டவர்.
அவர் எழுதிய நூல்கள் கிராமத்துப் பின்னணியில் பாமரரும் படிக்கும் வகையில், அழகுற இருக்கும். அவரது தனிச்சிறப்புகளை உள்ளடக்கியதே இந்த நூல்.
குடும்பப் பின்புலமும், சமூக வாழ்வும், வேளாண் சமூகமும் கி.ரா.வும், பெண்களும் கி.ரா.வும், சாதியச் சமூகமும் கி.ரா.வும், கி.ரா.வின் சமயப் பார்வை, கி.ரா.வும் மொழியும், கி.ரா.வின் பார்வையில் பள்ளிக்கூடம், எடுத்துரைப்பின் சிறப்பு, கி.ரா.வும் கடித இலக்கியமும் என்று 9 தலைப்புகளில் அவரது தனித்திறன்களைப் படிக்கப் படிக்க வியப்புற வைக்கிறது.
பிற்சேர்க்கையில், கி.ரா. எழுதிய நூல்கள், அவரைப் பற்றி பிறர் எழுதிய நூல்கள், நேர்காணல்கள் என கி.ரா. தொடர்புடைய நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கி.ரா.வைப் பற்றி அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.