ஆதியும் அந்தமும் - பிரபஞ்சத்தின் வரலாறு; முனைவர் பெ.சசிக்குமார்; பக்: 200; ரூ.230; விஞ்ஞான் பிரச்சார்; நொய்டா; உத்தரப் பிரதேசம்; ✆ 0120 240 4430.
அண்டத்தின் தோற்றம், புவியின் தோற்றுவாய் குறித்து வெளியான நூல்களில் மாறுபட்டு ஓர் எளிய விவரிப்புடன் எழுதப்பட்டு இருக்கும் அறிவியல் நூல் இது.
நூலாசிரியர் இஸ்ரோ விஞ்ஞானி. கட்டுரை வடிவாக நூல் இல்லாமல், கதைகளின் வழியாக வானவியல் பயணம் மேற்கொள்கிறார்.
பள்ளிச் சிறுவனுக்கு கிடைக்கும் கால இயந்திரத்தை வைத்துக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளும் முயற்சியாக இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. சிக்கலான சொல்லாடல்கள் ஏதுமின்றி மிகவும் எளிமையான உதாரணங்கள் மூலமாக வாசகனுக்குள்ளே விஞ்ஞானத்தை கடத்தி இருக்கிறார் நூலாசிரியர். சூரியக் குடும்பத்தைச் சுற்றி இருக்கும் கோள்கள் மட்டுமல்லாது, அதற்கு அப்பால் பெயரிடப்படாத எத்தனையோ கோள்களும், விண்வெளி பொருள்களும் வியாபித்திருப்பதை சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு. விஞ்ஞானத்தை தமிழில் எடுத்துரைப்பது சவாலானது. அதை சாதாரணமாக சாத்தியமாக்கி, வாசகனை வசியப்படுத்திருக்கிறார்.
பூமி விநாடிக்கு 454 மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது என்றால் நாம் ஏன் அதை உணர்வதில்லை? புவி உருண்டை என்றால் உலகின் எல்லா இடங்களும் தட்டையாகவே தோன்றுவது ஏன்? கோள வடிவில் உள்ள பூமியில் இருக்கும் கடல் நீர் ஏன் கீழே வழிவதில்லை? இப்படியாக, அறிவியலின் அடிப்படையில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்திருக்கிறது இந்த நூல். பேரண்டத்தில் ஏதோ ஒரு மூலையில் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்கள், நம் வாழ்வை ஒருபோதும் தீர்மானிப்பது இல்லை என்ற உண்மையை பதிவு செய்துள்ள இந்நூல், அறிவியலை மட்டும் சொல்லவில்லை; கூடவே பகுத்தறிவையும் விதைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.