பாதைகள் உனது பயணங்கள் உனது - பிரேக் த ரூல்ஸ் - ஹேமா, பக். 136; ரூ. 160; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை - 4; ✆ 7550098666.
'நானாக நான்' என்ற தலைப்பில் இணையதளத்தில் வெளியான 24 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
பாலினச் சமத்துவம் என்ற மையக் கருத்தை வைத்துக்கொண்டு, ஒரு பெண்ணாக, மனதின் புழுக்கங்கள், ஆற்றாமைகள், இயலாமைகள், சமூக அவலங்கள், குடும்ப வன்முறைகள் எனப் பல்வேறு விஷயங்களும் எழுத்துகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நூலில் பெரும்பாலான இடங்களில், சமுதாயத்தில் நிகழும் சம்பவங்களை எடுத்துக்கொண்டு ஒன்றுடன் ஒன்றான தொடர்புகளை விவரித்து அவற்றுக்கெல்லாம் எதிர்வினையாற்றுகிறார் நூலாசிரியர்.
திருமணத்துக்குப் பிறகு தங்கள் துறைகளில் சாதித்த பெண்கள் என்றொரு பட்டியலைத் தயாரித்தால்... கொண்டாடக் கூடியதாக இல்லை என்று குறிப்பிடுவதுடன், ஆன்மிக உலகில் எவ்வாறு பெண்கள் புறந்தள்ளப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
'பைத்தியம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?' என்ற கட்டுரையில் மனநலம் உரிய கவனம் பெறாதது பற்றி விவாதிக்கப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் பற்றிப் பேசும்போது, இப்போதும் இத்தகையவர்கள் இருக்கிறார்கள் என்று ஆசிரியர் குட்டியேச்சனை எடுத்துக்காட்டுகிறார்.
'பிரேக் த ரூல்ஸ்' கட்டுரையில் சின்னச் சின்னதாக, ஆனால் பெரிய விஷயங்களை அவதானித்து, பெண்களுக்கு எதிராக உடைக்கப்பட வேண்டியனவற்றைப் பட்டியலிடுகிறார்.
பொருளாதார சுதந்திரத்துக்கும் பெண் விடுதலைக்குமான தொடர்புகள் அலசப்படுவதுடன், புனிதங்களும் புண்ணாக்குகளும் கட்டுரையில் புனிதம் கட்டமைக்கப்படுவதன் காரணமும் விவரிக்கப்படுகிறது.
சர்வ சாதாரணமாக சகித்துக்கொண்டு பெண்களாலேயே கடந்துசெல்லப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் விஷத்தையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கையளிக்கிறது நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.