விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள் - செ.திவான்; பக்.224 ; ரூ.220; யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 044-28343385.
விடுதலைப் போரில் இடம்பெற்றிருந்த எண்ணற்ற இஸ்லாமிய தியாகிகளின் வரலாற்றை இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.
கி.பி. 1757 ஜூன் 9-ஆம் தேதி 10 பேர் கொண்ட குழுவில் கான்சாகிப் மருதநாயகம் இருந்தபோது, அவரை 400 பேர் கொண்ட ஆங்கிலேயப் படையினர் சூழ்ந்து கொண்டு தாக்கினர். ஆபத்து நிறைந்த வேளையிலும், தனி ஒருவனாக கடைசிவரையில் அஞ்சாமல் நின்று போரிட்டு வென்றவர் மருதநாயகம் என்கிற கான்சாகிப். '1764 அக்டோபர் 13 அதிகாலை' என்று ஆரம்பிக்கும் மருதநாயகம் கான்சாகிப்பின் பரபரப்பான அந்த கடைசி நாள்கள் கண்கலங்க வைக்கின்றன.
வேலு நாச்சியார் இஸ்லாமிய இளைஞனைப் போல் வேடமணிந்து, படைகளைத் திரட்டி, தன் கணவரின் உயிரைக் குடித்த ஆங்கிலப் படைகளை வீழ்த்தி, மீண்டும் தன் ஆட்சியை நிலைநாட்டினார் என்ற வரலாறும் சிலிர்க்க வைக்கிறது.
'தூக்குமேடை பஞ்சுமெத்தை' என மார்தட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் முஹம்மத் தம்பி, சின்னவரிசை தர்மகுணவான், இபுறாஹிம் சாஹிப், இசுமாயீல் ராவுத்தன் ஆகிய நான்கு முஸ்லிம் தளபதிகள் இடம் பெற்றிருந்தனர். ஊமைத்துரையின் படையில் முஸ்லிம்கள் பங்கேற்பு, திப்புவின் படையில் ஹிந்துக்கள் பங்கேற்பு, ஆங்கிலேயரை எதிர்த்த ஆற்காடு நவாப் சந்தாசாகிப், பூலித்தேவன் படையில் முஸ்லிம்கள், மன்னர் சேதுபதி படையில் முஸ்லிம்கள், தீரன் சின்னமலை காலத்தில் முஸ்லிம்கள், கேரளவர்மா (பழசிராஜா) கால முஸ்லிம்கள், தளவாய் வேலுத்தம்பி படையில் முஸ்லிம்கள் என ஏராளமான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.