இராமநாதபுரம் மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் (சிவகங்கை, விருதுநகர் மாவட்டம்) - சோமலெ; பக்.495;ரூ.550; காவ்யா பதிப்பகம், சென்னை-24; ✆98404 80232.
பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தின் (இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கியது) சமயம், சமூகம், வரலாறு, இலக்கியம், கல்வி, பொருளாதாரம், பழம் பெருமைகள், இயற்கை அமைப்புகள், ஆறுகள், மரங்கள், செடிகள், கொடிகள், மழை நிலவரங்கள், சேதுபதி மன்னர்களின் வரலாறுகள், கம்பன் கழகங்கள், தமிழ்ச் சங்கங்கள் தோன்றிய கதை, பழக்க வழக்கங்கள், ராமேசுவரம் அருகேயுள்ள தீவுகள், வளங்கள் என புள்ளிவிவரங்கள் நூலில் ஏராளம்.
எந்தெந்த மாவட்டங்களில் ராமநாதபுரம் என்ற பெயர் உள்ளது என்றும் அதற்கான காரணங்களும் நூலில் அலசப்பட்டுள்ளது. ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கையில் உள்ள பச்சை மரகதக்கல் நடராஜரின் திருமேனி, பிள்ளையார்பட்டி ஆகியன சிற்றரசர்களின் கலையார்வத்தையும், பாரிவள்ளலின் வரலாற்றையும் தொகுத்திருப்பது சிறப்பு.
ஒவ்வொரு வட்டத்திலும் எந்த சிற்றூரையும் விட்டு விடாமல் அந்தந்த ஊர்களைப் பற்றிய குறிப்புகளும், அதற்கான பெயர்க் காரணங்கள், கோயில்கள், சுற்றுலா சிறப்பு பெற்ற இடங்கள், சமுதாய நிலை, வளர்ச்சித் திட்டங்கள் ஆகியனவற்றை தொன்மையான பாடல்கள் மூலமும் விளக்கியிருப்பது நூலுக்கு மேலும் மெருகூட்டி இருக்கிறது.
1949 செப். 7-இல் ரூ.47 லட்சம் நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கி ராமநாதபுரம் ஜமீனை அன்றைய சென்னை மாகாண அரசு எடுத்துக் கொள்ள முடிவு செய்தது, விவேகானந்தருக்கும், ராமநாதபுரத்துக்கும் உள்ள தொடர்புகள், முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மூன்று மாவட்ட மக்களும், அரசுத் துறையினரும் வைத்திருக்க வேண்டிய கருவூலம் இது.