
அன்னை நல்லதங்காள் வரலாறு - உ.குடியரசி விஜயா; பக்.168; ரூ.200; சந்தியா பதிப்பகம், சென்னை-83; ✆ 98409 52919.
தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டது நல்லதங்காள் கதை. நாடகங்கள் வாயிலாக கிராம மக்களிடையே அதிக அளவில் சென்றடைந்த கதைகளில் இதுவும் ஒன்று. குல தெய்வமாக நல்லதங்காள் கருதப்படுகிறார். ஜமீன்தார் மாளிகையில் நடைபெறும் நிகழ்வாக கதை தொடங்குகிறது. அண்ணன், தங்கை பாசத்தை மையக் கருவாக கொண்டிருந்தாலும், அவர்கள் வாழ்ந்த பகுதியைப் பற்றி குறிப்பிடுகையில், அதன் வளத்தை தெளிவாகக் காட்டுகிறார் நூலாசிரியர்.
நல்லதங்காள்-காசிராஜன் திருமணக் காட்சிகளை விளக்கும் இடங்களில் நூலாசிரியர், தனது தனித்துவத்தைப் பதித்திருக்கிறார். மானாமதுரையில் தலைவிரித்தாடிய பஞ்சம், அதன் தீவிரம் குறித்தும் விரிவாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நல்லதங்காள் தனது பிள்ளைகளுக்கு அண்ணன் நல்லதம்பியின் சிறப்பு தாலாட்டுப் பாடலாகவும், வாழ்ந்து கெட்டவர்கள் குறித்து காசிராஜன் கதைப்பாடலாகவும் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது. அண்ணனைக் காண நல்லதங்காள் தனது 7 பிள்ளைகளுடன் சென்றது முதல் அண்ணனின் மனைவியான மூலி அலங்காரி அவருக்குச் செய்த கொடுமைகளை வாசிக்கும்போது பதற்றம் ஏற்படுகிறது.
நல்லதங்காள் தனது குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, தானும் அதில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது, மூலி அலங்காரி தண்டிக்கப்பட்டது, நல்லதம்பி கத்தியால் குத்திக் கொண்டு உயிர்நீத்தது என கதை சீரான நடையில் எழுதப்பட்டுள்ளது.
நல்லதங்காளுக்கு கோயில் கட்டி இன்றளவும் வழிபாடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்தக் கதை நடைபெற்றதாகக் கூறப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, தரவுகளை சேகரித்து தற்போதைய நிலையை புகைப்படங்களாகவும் பதிவு செய்திருக்கும் நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.