
வைரமுத்தியம் (2025-பன்னாட்டுக் கருத்தரங்கம்)- தொகுப்பாசிரியர்: மு.வேடியப்பன்; பக். 388; ரூ.500; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆ 99404 46650.
கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், திரையிசைப் பாடல்கள் உள்ளிட்ட படைப்புகள் தொடர்பாக பல்வேறு ஆய்வறிஞர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்கிற குறுகிய வட்டத்துக்குள் வைரமுத்து எனும் படைப்பாளரை சுருக்குவது தவறு. கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப் போர் போன்ற அவரது
படைப்புகள் காலத்தைத் தாண்டி என்றென்றும் நிலைத்திருக்கும் காவியங்கள்.
'ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்' என்ற கதையின் முன்னுரையில், 'இந்தியாவில் காதல் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது காதலர்கள் மீதுதான்' என்று கூறியிருப்பார் வைரமுத்து. இதுபோல கதையிலும் கவிதைகளைத் தூவுவதன் மூலம் கவிதைச் சாயல் கொண்ட நாவலாசிரியர் எனச் சொல்கிறார் ஒரு கட்டுரையில் தமிழச்சி தங்கபாண்டியன்.
வைரமுத்துவின் 'மகா கவிதை' நூல் நிலம், நீர், தீ, காற்று, வெளி எனும் ஐம்பூதங்களை அறிவியல் பூர்வமாக அடையாளப்படுத்துகிறது என்கிறார் ஒரு கட்டுரையில் இரா.அறவேந்தன்.
ஐம்பூதம் எனத் தமிழ் இலக்கியப் பரப்பில் பேசப்பட்ட கருத்தியலை உலக அரங்குக்கு விரித்துச் செல்கிறது 'மகா கவிதை' என ஆய்ந்தறிந்து நிறுவுகிறார் கட்டுரையாளர்.
'ஆயிரம் பாடல்கள்' குறித்த கட்டுரையில், 'ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற சின்னச் சின்ன ஆசை பாடலில் கவிஞர் சொல்கிற எல்லாமே பேராசைகள்தான்' எனும் வரிகள் ரசிக்க வைக்கின்றன.
கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கத் தூண்டும் சிறந்த தொகுப்பு இந்நூல்.