
கூரேச விஜயம் - ஆங்கிலத்தில்: டாக்டர் பி.கே.வாசுதேவன்; தமிழில்: பி.வி.ஓம்பிரகாஷ் நாராயணன்; பக். 506; ரூ.625; திருவடி வெளியீடு, சென்னை -2; ✆ 99419 16491.
கூரத்தாழ்வார் என்பார் ஸ்ரீமத் ராமானுஜரின் ஒப்பில்லா சீடர். குரு பக்தி, குரு-சிஷ்ய உறவின் மகத்துவம் ஆகியவற்றின் வாழும் உதாரணமாகத் திகழ்ந்தவர். வேத, வேதாந்தத்தில் வல்லமை, பன்மொழிப் புலமையுடன் ஞானக் கடலாக விளங்கிய உயர்ந்த பண்டிதர். செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தும், ஞானத்தேடலில் ஈடுபட்டு, பொருளில் பற்றற்று, இல்லறத்திலேயே துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். குருநாதரைக் காக்கும் பொருட்டு தமது இரு கண்களையும் இழந்த பெரும் தியாகி. இந்த உயர்ந்த வைணவ மகானின் வாழ்க்கை குறித்துப் பல்வேறு நூல்களில் பரவிக் கிடக்கும் விவரங்களைத் தேடித் திரட்டி வரலாற்று நூலாக இது எழுதப்பட்டிருக்கிறது.
ஸ்ரீவத்ஸாங்கன் என்ற இயற்பெயர் கொண்ட கூரேசர், தமது குரு ராமானுஜரைவிட 8 வயது மூத்தவர். காஞ்சிபுரத்தையடுத்த கூரம் என்னும் ஊரைச் சேர்ந்த இவரை ஒரு சமயம், ராமானுஜரே 'ஆழ்வான், ஆழ்வான்' என்றழைத்தமையால் கூரத்தாழ்வான் என்றழைக்கப்பட்டார். இவரது வாழ்க்கை தியாகத்தில் தோய்ந்தது.
வேத, வேதாந்த சாரமாக வியாசர் இயற்றிய பிரம்மசூத்திரம் முதலியவற்றைக் கற்றறிய காஷ்மீர பயணம் மேற்கொண்ட ராமானுஜருடன் சென்றார் கூரத்தாழ்வார். காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தில் பத்திரப்படுத்திய மூலச்சுவடிகளை ஒரு முறை படித்தவுடனேயே அவற்றை முற்றிலும் மனனம் செய்து, பிரம்ம சூத்திரத்துக்கு 'ஸ்ரீ பாஷ்யம்" என்னும் உரையெழுத தனது குருநாதருக்கு உறுதுணையாக இருந்து அற்புதம் நிகழ்த்தினார்.
உடையவர் எனப் போற்றப்படும் ராமானுஜரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது கூரத்தாழ்வாரின் வாழ்க்கைச் சரிதம். ஸ்ரீஸ்தவம் உள்ளிட்ட ஐந்து நூல்களான பஞ்சஸ்தவம் என்னும் ஸ்தோத்திர ரத்தினங்கள் கூரேசரின் புலமைக்குச் சான்று. ஞானத்தையும் பக்தியையும் குழைத்து செறிவான பதினைந்து நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
அந்த மகானின் சரிதத்தையும் அவர் இயற்றிய பக்தி, தத்துவ காவியங்களின் சுருக்கமான விளக்கத்தையும் டாக்டர் பி.கே.வாசுதேவன் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை அவரது மகன் தற்போது சிறப்பாகத் தமிழாக்கம் செய்து ஆன்மிகத் தொண்டாற்றியுள்ளார். ஆஸ்திகர்கள் படித்துப் பயன் பெற வேண்டிய புத்தகமாகும்.