
தென்னாப்பிரிக்கக் காடுகளில்... -இயகோகா சுப்பிரமணியம்; பக்.184; ரூ.200; குமரன் பதிப்பகம், சென்னை-17; ✆ 94440 13999.
தொழிலதிபரான நூலாசிரியர், கோவையைச் சேர்ந்த தனது தொழில் துறை நண்பர்களான சரத் சந்திரன், விஜய் மோகன், விஜய் வெங்கடசாமி ஆகியோருடன் தென்னாப்பிரிக்க வனப் பகுதியில் மேற்கொண்ட பயண அனுபவமே இந்த நூல். 'பிஸி'யான தொழிலதிபர்கள் என்பதோடு, வயதும் எழுபதைக் கடந்தவர்கள் என்றாலும், வனத்தின் மீதான அவர்களின் ஆர்வத்தால் சுற்றுலா சென்றதை 24 கட்டுரைளாக நூலாசிரியர் தொகுத்துள்ளார்.
போட்ஸ்வானா நாட்டின் கலஹாரி பாலைவனப் பகுதியில் இருக்கும் ஒக்கவாங்கோ நதியின் டெல்டா பகுதியில் இருக்கும் கனானா கேம்பில் தங்கியிருந்து, அங்கு நேரில் கண்ட அனுபவங்களின் தொகுப்பான இந்த நூல் தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல், மிக சுவாரஸ்யமான அனுபவங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள், உணவுப் பொருள்கள், திகில் சூழ்ந்த தங்கும் இடங்கள் என்ற நல்ல தொகுப்புகளுடன் அமைந்திருக்கிறது.
வன விலங்குகள், பறவைகள் குறித்து அதிசயிக்கவைக்கும் தகவல்களோடு, அதற்கான படங்கள் இடம்பெற்றுள்ளது நூலுக்கு மெருகூட்டுகிறது.
மசய்மானாவில் எரியூட்டப்படாத சடலங்கள், சூரிய ஒளி படாத வனப் பகுதிகள், விலங்குகள் உண்டு உறங்கும் குகைகள், கரையான்களின் வாழ்நாள், மனித நாகரிகத்தில் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான மது என வியப்பூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட காந்தியடிகள் நாடு திரும்பியதும் மகாத்மா காந்தியாக மாறியதைச் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், அந்த ஆப்பிரிக்க வனப் பகுதிகளின் சிறப்புகளை நம் கண் முன்னே கொண்டு வரும் வகையில் பதிவு செய்துள்ளார்.
அரசியல், சமூகவியல், கலாசாரம், நீர்நிலைகள், வனவிலங்குகள் சரணாலயங்கள் பற்றியெல்லாம் விவரிக்கும்போது, ஆங்கிலேய ஆட்சியின் கொடுமைகளை ஆப்பிரிக்க மக்கள் எவ்வாறு அனுபவித்தனர் என்பதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.