
எலான் மஸ்க்: கனவு நாயகம்-நன்மாறன் திருநாவுக்கரசு, பக்.440; ரூ.500; கிழக்கு பதிப்பகம்; சென்னை-14; ✆ +91 44 - 4200 9603.
இன்றைய இணைய உலகில் தவிர்க்க முடியாத ஆளுமை எலான் மஸ்க். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த அவர், பல்வேறு துறைகளில் தயக்கமின்றி கால்பதித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். 1990 - காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த எலான் மஸ்க், இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் ஒரே நேரத்தில் உயர்கல்வி பயின்றார். அறிவியல் தொழில்
நுட்பத்தை பொருளாதார ரீதியாகக் கொண்டு செல்வதன் மூலம் அதில் வெற்றி பெற முடியும் என்பதை கணித்த எலான் மஸ்க், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.
ஆரம்பத்தில் இணைய வர்த்தகத்தில் இறங்கிய எலான் மஸ்க், அதில் கிடைத்த தோல்விகள் மூலம் தனது ஆளுமைத் திறனை வளர்த்துக் கொண்டு, தற்போது தொழில் துறையில் உயர்ந்து தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார்.
சாகசங்களும், சர்ச்சைகளும் நிறைந்த வாழ்க்கை கொண்ட எலான் மஸ்க், 'ஸ்பேஸ் எக்ஸ்', 'டெஸ்லா', '(எக்ஸ்)' என உலகையே உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறார். வாழ்வில் வெற்றி பெறுவதற்கு திறமை மட்டுமல்ல, விருப்பம், சகிப்புத்தன்மை, மீள்திறன் ஆகியவையும் முக்கியம் என்பதை எலான் மஸ்க் வாழ்க்கைப் பயணம் நமக்கு உணர்த்துகிறது.
எலான் மஸ்க்கின் தொடக்க காலம் முதல் தற்போது வரை அவரின் செயல்பாடுகள், எதிர்காலக் கனவுகள் என நிகழ்கால சாதனை நாயகனின் வாழ்க்கையை நம் முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். எலான் மஸ்க்கின் வாழ்க்கையுடன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாற்றையும் இந்த நூல் விவரிக்கிறது.
எலான் மஸ்க்கின் போராட்டங்கள், சறுக்கல்கள், சாதனைகள் அனைத்தும் தொழில் துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஓர் உத்வேகத்தை அளிக்கும். தொழில் துறையில் கால் பதிக்க விரும்பும் இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.