
பேராசிரியர் ம.திருமலையின் அணிந்துரைகளும் மதிப்புரைகளும்; தொகுப்பாசிரியர்: ந.செ.கி.சங்கீத்ராதா; பக். 328; விலை ரூ.300; பென்டகன் எண்டர்பிரைசஸ், கும்மிடிப்பூண்டி - 601 201.
அணிந்துரையும் மதிப்புரையும் ஒரு நூலுக்கு அழகு சேர்ப்பன மட்டுமல்ல; அதன் உள்ளடக்கத்தை அணுவைப்போல அணுகி, மேலும் அந்த நூலை வாசிப்பவரை தூண்டச் செய்வன. நுழைவாயிலாக உள்ளே அழைத்துச் சென்று நூலின் எழுத்துக் கட்டுமானத்தை, அழகியலை, வாழ்வியலை, கலாசாரத்தை, பண்பாட்டை எல்லாம் காட்டுவன.
தான் எழுதிய ஓர் அணிந்துரையில், 'முன்னுரை என்று எழுதினாலும், கதை என்று எழுதினாலும் நோக்கத்தின் ஒருமை சிதையாதிருக்கும்பட்சத்தில், அவை இலக்கிய அந்தஸ்து பெற்றுவிடும்' என்கிறார் ஜெயகாந்தன்.
அணிந்துரை எழுதுவதில் உள்ள சிரமங்களை பேராசிரியர் ம.திருமலை விவரிக்கும்போது, அது அறிவார்ந்த, இடர்ப்பாடுகள் நிறைந்த, அதேநேரம் ஆற்றவேண்டிய பணி என்பதை உணர முடிகிறது. அணிந்துரைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அவரது அணிந்துரையிலேயே அறிவது இந்த நூலின் சிறப்பு.
நூலினை அணுகி, அருகி, ஆழ்ந்து, ஆய்ந்து ஆகச் சிறந்த அணிந்துரைகளை அடையாளம் காட்டியுள்ளார் பேராசிரியர். இந்த நூலில் பேராசிரியர் ம.திருமலை எழுதிய நூல்களுக்கு பேராசிரியர் தமிழண்ணல், மூதறிஞர் சோ.ந.க., எழுத்தாளர் ஜெயகாந்தன், டாக்டர் இராம.பெரியகருப்பன், டாக்டர் தி.சிவசங்கரன், முனைவர்கள் மோகன், மு.மணிவேல், ம.பெ.சீ., பா.மதிவாணன், கவிஞர்கள் வைரமுத்து, கலாப்ரியா, க.இராசேந்திரன் போன்றோர் வழங்கிய 16 அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
இதேபோல், ம.திருமலை மற்றவர்களுக்கு எழுதிய 43 அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
அணிந்துரையோ, மதிப்புரையோ அவை ஒரு கடமைக்காக வழங்கப்படக் கூடாது என்பதை இந்த நூல் மிகச் சிரத்தையுடன் தெளிவுபடுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.