
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை- ராஜம் கிருஷ்ணன்; பக்.144; ரூ.150; ஸ்ரீசெண்பகா பதிப்பம், சென்னை-17. ✆ 044- 24331510.
நூலாசிரியரின் நூல்கள் 'காலந்தோறும் பெண்', 'காலம்தோறும் பெண்மை' ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ச்சியாக இந்த நூலை எழுதியிருக்கிறார். ஆதித்தாய், விருந்தோம்பல் பண்பாடு, தாய்மையின் வீழ்ச்சி, ஐவரின்தேவி, சீதையின் கதை, கடவுளின் மணவாட்டி, துணை இழப்பும் துறவறமும் உள்ளிட்ட 12 தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் ஆண்-பெண் சமத்துவம் என்ற கூற்றை கேள்விக்குள்ளாக்குகிறது.
ரிக் வேதகாலம் இதிகாச, புராண, சங்க இலக்கிய காலங்களிலும், கஸ்தூர்பா, இந்திரா காந்தி காலத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு மாறுபட்டு வந்துள்ளது என்று தகுந்த மேற்கொள்களுடன் விவரிக்கிறார் நூலாசிரியர்.
மகாபாரதம் ஆதிபர்வத்தில் தீர்க்கதமஸ் என்கிற ரிஷி தனது மனைவியின் மேல் கோபம் கொண்டு, ஒருவனுக்கு ஒருத்தி என வழி செய்து, அதில், 'கணவன்- மனைவி உறவில் ஆணின் ஆதிக்கத்தை மனைவி பொறுத்துதான் ஆக வேண்டும்- இல்லையெனில் சபிக்கப்படுவாள்' என 'கடவுளின் மணவாட்டி' என்ற அத்தியாயத்தில் புராண மேற்கொள் காட்டுகிறார்.
லட்சியத் தம்பதியான காந்தி- கஸ்தூர்பா வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் மூலம் காந்தியாரும் சாதாரண ஆணைப் போலவே நடந்து கொண்டார் என்றும், இந்திரா காந்தி வாழ்வில் நடந்த நிகழ்வுகளிலும்கூட ஆண் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட நேர்ந்தது என்றும் நூலாசிரியர் கூறுகிறார்.
விதவை துறவறம் என்பதும் ஆணாதிக்க வார்த்தைதான். பெண் என்பவள் கருவைச் சுமப்பவள் என்பது மட்டுமே அல்ல; அவர்கள் தங்களை மறுசிந்தனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், குழந்தைபெறும் இயந்திரம் மட்டுமல்ல, ஆடை
ஆபரணங்களை அலங்காரம் செய்து கொள்கிறவள் மட்டுமல்ல- அவர்கள் ஆணைச் சார்ந்திரா வாழ்க்கைக்குத் தயாராக வேண்டும் எனவும் நூலாசிரியர் குரல் கொடுக்கிறார்.
இந்திய சமுதாயத்தில் பெண்மை வளர்ந்துள்ள அல்லது வீழ்ந்துள்ள விதத்தை ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆண்- பெண் இருவரும் வாசிக்க வேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.