
மறக்கப்பட்ட வரலாறு-ஜெ.ராம்கி; பக்.216; ரூ.240; கிழக்கு பதிப்பகம், சென்னை-600014. ✆ 044 42009603.
நாம் பரபரப்புடனும், ஆவலுடனும் தொடர்ந்து ஊடகங்களின் வழியாக கவனித்து வந்த அரசியல் திருப்புமுனை சம்பவங்கள் பல அடுத்தடுத்து வந்த சம்பவங்களால் மறந்திருப்போம். அப்படி மறந்து போன நிகழ்வுகளின் நினைவுக் கிளறல்கள்தான் இந்தத் தொகுப்பு.
நமது மாநிலத்திலும் ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் மட்டுமல்லாது, உலகின் பிற பகுதிகளிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை மீண்டும் நமக்கு நினைவுக்கு கொண்டு வந்து அந்த காலகட்டத்துக்கே அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். சுவாரஸ்யமாகவும் அதே வேலையில் ஒரு மனக் கிளர்ச்சிக்கு ஆளாகும் அளவுக்கு அந்த வரலாற்று நிகழ்வுகளை வாசிக்க நேருகிறது.
நமது ஆட்சியாளர்கள் எடுத்த முடிவுகளே நமது வாழ்வை தீர்மானிக்கும் திசைகாட்டிகளாகும் என்பதால், நாம் இப்போது எதிர்கொண்டு வரும் சமுதாய சவால்களுக்குக் காரணமான முந்தைய நிகழ்வுகளை நம்மால் அடையாளம் காணமுடிகிறது.
அரசியல் சூழ்ச்சிகள், உண்மைகளை மறைத்தல், ஊடகங்கள் தவிர்த்த விஷயங்கள், இறுதிவரை காரணமே தெரியாமல் மறைக்கப்பட்ட சம்பவங்கள் என மொத்தம் 31 வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தில் இருந்து ஆரம்பித்து பிரேமானந்தாவின் கதை, 'காட்' ஒப்பந்தம், கோவை குண்டு வெடிப்பு, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல், ஓவியர் உசைனின் சரஸ்வதி, இப்படியான நிகழ்வுகள் நமது நினைவு அலைகளின் பழைய ரீங்காரங்களையும், தடதடப்புகளையும் மீண்டும் இயக்குகின்றன.
இந்த நூலில் வரும் வரலாற்றுச் சம்பவங்களை நாம் நினைவுக்கு வரும்போது அதைத் தொடர்ந்து வந்த இன்னும் சில வரலாற்றுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால், நன்றாக இருக்குமே என்ற ஒரு பேராசையை இந்த நூல் நம்முள் தோற்றுவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.