
செவ்விந்தியர்கள் குருதிப் புனலோட்டம்- ஜெகாதா; பக்.187; ரூ.250; சத்யா எண்டர்பிரைசர்ஸ், சென்னை-94. ✆ 044 45074203.
நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் செவ்விந்தியர்களின் இன அழிப்பை பற்றியே இருக்கும் என்று நினைத்துவிட முடியாது. பூர்வக்குடிகளான அவர்களது ஆரம்பம் முதல் வீழ்ச்சி வரையும், உலகிலேயே அதிக இன அழிப்புக்கான ஆளான செவ்விந்தியர்களின் அன்றைய -இன்றைய நிலை, அமெரிக்காவின் தோற்றமும் எழுச்சியும், இன்றைய நிலையையும் என ஒட்டுமொத்தமாக அறிந்துவிடக் கூடிய அளவில் இருக்கிறது.
ஆசியக் கண்டமும், அலாஸ்காவும் ஒரே நிலப்பரப்பாக இருக்கும்போது, ஆசியாவில் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பயணமாகவே குடியேறி, அமெரிக்காவில் வசித்தவர்கள்தான்
செவ்விந்தியர்கள். அவர்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழலின் மீதான கவனம், எதிரிகளைப் பிணைக் கைதிகளாக்கி நரபலியிட்டு மனித மாமிசத்தை உண்ணுதல், கனிமங்களைக் கண்டறிந்து பாதுகாத்தது போன்றவற்றை அலசி, ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர்.
14-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸின் குரூரமான எண்ணத்தின் மறுபக்கம், முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் அடக்குமுறை, செவ்விந்தியர்களின் நிலங்களை விற்றுவிடுமாறு இனத் தலைவர் சியாட்டிலுக்கு
வாஷிங்டன் கூறியதற்கு எழுதப்பட்ட பதில் கடிதத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டிருப்பதும் அது இன்றைக்கும் பாதுகாக்கப்படுதல், அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேறி செவ்விந்தியர்களை இன அழிப்புக்கு உள்ளாக்கி இன்றும் இனவெறியோடு அவர்களை கருப்பினத்தவர்களாக நடத்துதல், கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் செவ்விந்தியர்களின் நிலை, கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே மரணித்தது, தங்கம், ரப்பர், நிலக்கரி போன்ற வளங்களுக்காகவே நாடுகளைத் தேடித் தேடி கண்டுபிடித்துள்ளனர் என்று பக்கத்துக்குப் பக்கம் வரலாற்று தகவல்கள் நிரம்பியுள்ளன.
அமெரிக்காவை முழு கோணத்தில் அறிய விரும்புவோரும், வரலாற்று ஆர்வலர்களும் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.