கம்பனில் திருக்குறள்

கம்பராமாயணம், திருக்குறள் இரண்டையும் ஒரே நேரத்தில் சுவைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் நூலாசிரியர்.
கம்பனில் திருக்குறள்
Published on
Updated on
1 min read

கம்பனில் திருக்குறள்-இ.ப. நடராசன் பக். 224; விலை ரூ. 250; மணிவாசகர் பதிப்பகம், வண்ணாரப்பேட்டை, சென்னை - 600 021. ✆ 93805 30884.

வள்ளுவருக்கோ, கம்பருக்கோ புகழ்ச்சி தேவையில்லை. அவர்கள் செம்மாந்த இலக்கிய கர்த்தாக்கள். அதனால்தான் மகாகவி பாரதியார், 'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப்போல் இளங்கோவைப்போல் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை' என்று வியந்தார்.

அப்படியான கம்பனில் திருக்குறள் செய்திகள் எங்கெல்லாம் பதிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆய்ந்து எழுதப்பட்ட நூல்தான் 'கம்பனில் திருக்குறள்'.

பால காண்டத்தில் பயின்றுள்ள குறட்பாக்கள், அயோத்தியா காண்டத்தில் முதல் இரண்டு படலங்களில் பயின்றுள்ள குறட்பாக்கள், சுந்தர காண்டத்தில் பயின்றுள்ள குறட்பாக்கள், திருக்குறளின் சுவடுகள், கம்பரும் திருவள்ளுவரும், சான்றோர் கவி ஆகிய 6 தலைப்புகளில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்த நூலைப் படிக்குங்கால், கம்பனிலும் திருக்குறளிலும் எவ்வளவு ஆழங்காற்பட்டிருக்கிறார் நூலாசிரியர் என்பது வியப்பைத் தருகிறது. அந்தளவுக்கு கம்பராமாயணப் பாடல்களை எடுத்தாண்டு, திருக்குறள் பதிவுகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

கம்பராமாயணப் பாடல்களில் திருக்குறள் நேரடியாக வந்துள்ள பாடல்கள், திருக்குறள் கருத்துகள் வந்துள்ள பாடல்கள், திருக்குறளில் உள்ள சொற்கள் பயின்று வந்துள்ள பாடல்கள் என்று சிரத்தையுடன் தொகுத்துள்ளார்.

திருக்குறள் அறநூல், காலத்தால் கம்பருக்கு முன்பே அறக்கருத்துகளை அளித்தவர் வள்ளுவர். ஏறக்குறைய கம்பராமாயணமும் அறத்தை வலியுறுத்தும் இதிகாச காப்பியமே. எனவே, திருக்குறளின் அறக்கருத்துகளை கம்பர் எடுத்தாள்வது என்பது இயல்பாக நிகழ்ந்திருக்கும்தான். ஆனால், அதை தக்க பாடல்களுடன் விவரிக்கும்போது, புதிய பரிமாணங்களை, கோணங்களை நம்மால் உணர்ந்தறிய முடியும். கம்பராமாயணம், திருக்குறள் இரண்டையும் ஒரே நேரத்தில் சுவைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com