செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்

நாடக உத்திகள், தமிழ் இசை பற்றிய குறிப்புகள், குறிப்பாக, நூலாசிரியர் மேற்கொண்டுள்ள கள ஆய்வுகள் பிரமிப்பை ஏற்படுத்துவன.
செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்
Published on
Updated on
1 min read

செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்; சி.இராஜமாணிக்கம்; பக். 464; ரூ.1,200; கலைச்செல்வி மீடியா ஹவுஸ் பி. லிமிடெட், சென்னை- 86. ✆ 90030 15957.

'செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்' என்ற இந்த ஆய்வு நூல் 17 தலைப்புகளில் பல்வேறு களங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பெண்ணைக் காப்பியத் தலைவி ஆக்கிய சிலப்பதிகாரம் 'புரட்சிக் காப்பியம்' என்று புகழப்படுகிறது. அதற்காக மட்டுமா அவ்வாறு புகழப்படுகிறது? இது தமிழின் முதல் காப்பியம், இயல், இசை, நாடகமெனும் முத்தமிழும் கொண்டது, உலக வாழ்வியல் நெறிமுறைகளை அடைந்தது, தமிழரின் கருவூலமாகத் திகழ்வது, ஒற்றுமையை வலியுறுத்துவது, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கிற மாபெரும் உண்மையை பறைசாற்றுவது, வாழ்த்துப் பாடலே இயற்கையை போற்றும் விதமாக அமைந்தது.

அதனால்தான் 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று மகாகவி பாரதி வியந்தார். நூலாசிரியர் குறிப்பிடுவதுபோல, 'மறப்புரட்சியாளர் கண்ணகி நீதி தவறிய பாண்டிய மன்னன் சபையில் சிலம்பை உடைத்தாள். மாணிக்கப்பரல்கள் மன்னனின் முகத்தில் பட்டுத் தெறித்தன. தெறித்தவை மாணிக்கப்பரல்களா? இல்லை. அவை, தமிழச்சியின் கற்பு! அரசனின் அறம்! ஆன்மாவின் ஊழ்! தமிழரின் தன்மானம்! செம்மொழியின் இயல், இசை, நாடகம்! அப்பப்பா, இது ஒரு கருவூலம்!'

தமிழ்நாட்டில் 24,710 பெண்கள் கண்ணகி என்ற பெயர் சூடியிருக்கிறார்கள் என்ற ஆய்வுத் தகவல், கண்ணகி மரபு 2,000 ஆண்டுகளாக இருப்பதை விளக்குகிறது. இளங்கோவடிகளை காளிதாசன், ஷேக்ஸ்பியர், ஹோமர், தந்தே ஆகியோருடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். நாடக உத்திகள், தமிழ் இசை பற்றிய குறிப்புகள், குறிப்பாக, நூலாசிரியர் மேற்கொண்டுள்ள கள ஆய்வுகள் பிரமிப்பை ஏற்படுத்துவன.

சிலப்பதிகாரத்தில் கோவலன் -கண்ணகி பூம்புகாரில் இருந்து பயணித்த 480 கி.மீ. தொலைவு பயணம் செய்து ஆய்வை நிகழ்த்தியுள்ளார். மூன்று சிலம்புகள் காப்பியத்தை வழிநடத்துகின்றன என்பதை அழகாக விவரித்துள்ளார். கோவலன் பிரிந்ததால் 'அம் செஞ்சீறடி அணிசிலம்பு ஒழிய' பின்னர், கோவலன் திரும்பி வந்தபோது, 'சிலம்பு உள கொண்ம்' என்று சிலம்பை வணிகம் செய்யக் கொடுக்கிறாள். இதில் இரண்டு சிலம்பு கண்ணகியுடையது, மூன்றாவது சிலம்பு பாண்டிய அரசியுடையது.

சிலப்பதிகாரச் செய்யுள்களுடன் முதுபெரும் தமிழ் அறிஞர்களின் படங்கள், கண்ணகி கோயில், யாழின் வகைகள், சிலம்பின் வகைகள் உள்ளிட்ட அரிய படங்களுடன் ஆய்வாக ஆவணப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com