
மூன்றாவது கதவு; பிருந்தா சேது; பக். 124; ரூ.180; ஹெர் ஸ்டோரீஸ்; சென்னை-83 ✆ 96003 98660.
கவிஞராகவும் கட்டுரையாளராகவும் அறியப்படும் நூலாசிரியரின் முதல் சிறுகதை நூல். 2019-2024இல் அச்சிதழ்களிலும், மின்னிதழிலும் வெளியான கதைகளின் தொகுப்பு.
சிறுகதைகளின் கதாபாத்திரங்களில் வாசகர்கள் தம்மைப் பொருத்திப் பார்க்க வாய்ப்பு கிடைத்தாலோ, கதை நிகழ்வுகள் வாசகர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றாலோ அந்தக் கதைகள் மனதுக்கு நெருக்கமாகும். அந்த வகையில், இந்த நூலில் உள்ள 13 கதைகளில் பெரும்பாலானவை நமது நினைவலைகளைக் கிளறிச் செல்கின்றன.
தோழியைத் திட்டி எழுதிய கடிதம் அவளது கைக்கு கிடைக்கும் முன்னர் அஞ்சலகத்துக்கே சென்று கடிதத்தைத் திரும்பப் பெற படாதபாடு படும் சிறுமியின் கதை 'கடிதம்'. அப்படி என்னதான் அவர்களுக்குள் சண்டை நடந்திருக்கும் என்கிற கேள்வி நம்மை துளைத்துக் கொண்டே இருக்கிறது.
பள்ளிக்குச் சென்ற மகள், உடையில் இருந்த கோலி குண்டு அளவிலான மணியை விழுங்கிவிட்டாள் என்றறிந்ததும் பதறித் தவிக்கும் தாய், மகளின் உடல்நலத்துக்கு ஆபத்து இல்லை என்று நிம்மதியடைகிறார். பின்னொரு நாளில் அந்த மணியை விழுங்கிய நிகழ்வுக்குப் பின்னணியில் நடந்திருக்கும் குறும்பு தெரியவருகையில், அந்தத் தாயைப் போலவே வாசகருக்கும் சிரிப்பைத் தருகிறது 'ஓட்டம்' சிறுகதை.
புதிதாக கார் ஓட்டப் பழகியிருப்பவர்களின் அனுபவத்தை அப்படியே கண்முன் நிறுத்துகிறது 'கீறல்கள்' சிறுகதை. 'கிரீன் விழுந்தது. காரை எடுத்தால், பின்னே சரிந்தது. பின்புறம் காதலியை அள்ளி அணைக்க வந்ததுபோல் மிக நெருக்கமாக ஒரு கார்...' என கதையின் நடையும் ஈர்க்கிறது. சிறந்த கதை வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.