
ஆரியபட்டரிலிருந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை ஈர்ப்பு விசை சுருக்கமான வரலாறு - த.வி.வெங்கடேஸ்வரன்; பக்.176; ரூ.250; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி; ✆04259-236030.
பூமியின் ஈர்ப்பு விசை தொடர்பான வரலாற்று பூர்வமான, அறிவியல்பூர்வமான பதிவு இந்நூல். பூமி தட்டையானது என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. ஆனால் இந்த கருதுகோளே அன்றைக்குப் பெரும் சாதனையாக இருந்திருக்கிறது.
ஆரியபட்டர் காலத்தில் பூமி கோளவடிவம் கொண்டதாகக் கருதப்பட்டது. பூமியின் ஈர்ப்பு விசையால் மனிதன், விலங்கு, மரம் ஆகியவை பூமியோடு ஒட்டிக் கொண்டிருப்பதாக ஆரியபட்டர் கூறியிருக்கிறார். அதற்கு பின்னர் வந்த பிரமகுப்தா, பாஸ்கராச்சாரியர் பூமியின் ஈர்ப்பு விசை குறித்த மேம்பட்ட கருத்துகளை முன்வைத்தனர்.
அரிஸ்டாட்டில் கிராவிட்டி, லெவிட்டி என்ற இரு ஈர்ப்புத் தன்மைகள் குறித்து கூறினார். பீரங்கி குண்டுகள் செல்லும் பாதை நேர்கோடு என்று அவர் சொன்னதை டார்ட்டாக்ளியா மறுத்தார்.
கலிலியோ வெவ்வேறு எடை கொண்ட பொருள்கள் மேலிருந்து கீழே விழும்போது ஒரே வேகத்தில் விழும் என்று புவியீர்ப்பு விசை தொடர்பாக புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
சூரியனை கோள்கள் சுற்றிவருவதும் பெரும் விசையின் முடுக்கத்தால்தான் என்று கெப்லர் கூறினார். அதன் பின்னர் நியூட்டனின் இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவு மூன்று விதிகளாக உருவெடுத்தன.
ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம் ஒளியின் வேகத்தைவிட எந்தப் பொருளும் அதிக வேகத்தில் போக முடியாது என்று கூறியது. ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னரும் நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றங்களையும் இந்நூல் விளக்குகிறது. அறிவியல்பூர்வமாக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தரும் நூலாகவும் இது இருக்கிறது.