46. மண்ணளந்த மணிவண்ணர் -  பாடல் 1

சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான்
Updated on
2 min read

(வலம்புரம் – திருத்தாண்டகம்)

முன்னுரை

சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான், பல சோழ நாட்டுத் திருத்தலங்கள் சென்று பெருமானை தரிசனம் செய்ய ஆவல் கொண்டார். அப்பர் பிரான் வலம்புரம் சென்றதாக, தனியாக பெரியபுராண குறிப்பு ஏதும் காணப்படவில்லை; என்றாலும், நனிபள்ளி முதலா பல தலங்கள் என்ற குறிப்பில் இந்த தலமும் அடங்கும் என்று பெரியபுராண உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

அவற்றில் தெண்டிரை தேங்கி ஓதம் என்று தொடங்கும் நேரிசைப் பதிகமாகும். இந்த பதிகத்தில், தலத்து அடியார்கள் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளும் இறைவனாக பெருமானை சித்தரிக்கும் அப்பர் பிரான், வழிபாட்டின் விவரங்களையும், தலத்தின் இயற்கை அழகினையும் பதிகத்துப் பாடல்களில் கூறுகின்றார். இரண்டாவது பதிகம் திருத்தாண்டக அமைப்பில் அமைந்த பதிகமாகும். இந்த பதிகத்தில் பெருமானின் மீது காதல் கொண்ட அப்பர் நாயகியின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அகத்துறை பதிகமாக அமைத்துள்ளார். தான் காதல் கொண்டுள்ள நாயகன், வலம்புரத்தில் நிலையாக உறைவதாக ஒவ்வொரு பாடலும் முடிகின்றன. அவரைப் பின்தொடர்ந்து தான் சென்றதாகவும், தன்னுடன் வாராமல், வலம்புரத்துக் கோயிலில் தங்கிவிட்டார் என்றும் வருத்தத்துடன் அப்பர் நாயகி கூறுவதை நாம் ஒவ்வொரு பாடலிலும் காணலாம்.


மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும்
                   வானவரும் சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம்
                   கையுடையார் காணீர் அன்றே
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து
             இறைஞ்சிச் தம்முடைய பின்பின் செல்ல
மண் மலிந்த வயல்புடை சூழ் மாடவீதி வலம்புரமே புக்கு
                               அங்கே மன்னினாரே

விளக்கம்

மறையவன் = பிரமன். மண்ணளந்த மணிவண்ணர் என்று நெடுமாலாக நீண்டு வளர்ந்து மூன்று உலகங்களையும் அளந்த திருமாலின் செயல் இங்கே குறிப்பிடப்பட்டு, அத்தகைய திறமை வாய்ந்த திருமாலாலும் வணங்கப்படுபவர் சிவபெருமான் என்று உணர்த்தப்படுகிறது. மணிவண்ணர் = கரிய மணியின் வண்ணத்தினை உடைய திருமால். மலிந்த = சிறந்து விளங்கிய, மிகுந்த. பண் மலிந்த மொழியவர் = சிறந்த இனிய மொழிகளை உடைய பெண்கள்.

அப்பர் நாயகி, தான் மட்டும் பெருமான் மீது காதல் கொள்ளவில்லை, தன்னைப் போன்ற மற்ற பெண்களும் அவர் மீது விருப்பம் கொண்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்று கூறுவது நமக்கு, சீர்காழி தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. தனது உறவாக பேய் கணங்களை உடையவனும், உண்ணும் கலனாக உலர்ந்த மண்டையோட்டினை உடையவனும், காட்டினை இருப்பிடமாகக் கொண்டவனும், தனது உடலில் ஒரு பெண்கொடியை வைத்துள்ளவனும் ஆகிய இறைவனிடத்தில் என்ன சிறப்பினைக் கண்டு எனது பெண் அவன் மீது மயக்கம் கொண்டுள்ளாள் என்று சொல்லும் தாயின் கேள்விக்கு விடை கூறும் முகமாக அமைந்த பாடல் (5.45.8) இது.

மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானும் அவள் புக்கதே புகத்
தோகை சேர் தரு தோணிபுரவர்க்கே
ஆக யானும் அவர்க்கு இனி ஆளதே

கரிய மேகம் போன்ற நிறத்தில் உள்ள யானையின் தந்தங்களை நிறத்தில் ஒத்த முலைகளை உடைய எனது தோழிகள் பலர், சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ளார்கள். அவர்களுடன் சென்ற நானும், அவரது அழகிய தோற்றத்தில் மயங்கி, அவர் மீது காதல் கொண்டுள்ளேன்; தோகை மயில் போன்று அழகான தோணிபுரத்து இறைவரின் அழகில் மயங்கிய யான் அவருக்கு அடிமையாக மாறிவிட்டேன் என்று தாயின் கேள்விக்கு விடை அளிக்கும் பெண், பெருமான் மீது காதல் கொண்டு, அவரை மற்ற பெண்கள் பின்தொடர்ந்து செல்லவே, தானும் அவர்களுடன் சென்று, பெருமானின் அழகினைக் கண்டு மயங்கியதாக கூறுகின்றாள்.

பொழிப்புரை

மூன்று உலகங்களையும் தனது இரண்டு அடிகளால் அளந்த வல்லமை உடைய திருமாலும், எப்போதும் வேதம் ஓதும் மறையவனாகத் திகழும் பிரமனும் மற்றுமுள்ள தேவர்களும் சூழ்ந்து நின்று, சிறந்த முறையில் நெற்றியில் கண் பொதிந்த பெருமானை, தனது கையினில் விடம் பொருந்திய நாகத்தை வைத்துக்கொண்டு அதனை ஆட்டுபவரும் ஆகிய சிவபெருமானை வணங்குகின்றார்கள். இத்தைகைய பெருமை வாய்ந்த பெருமானைப் பணிந்து வணங்கியவாறு, இந்த தலத்தில் உள்ள இனிமையான மொழி பேசும் பெண்மணிகள் பலர் சென்றார்கள்; அவர்களுடன் நானும் பெருமானின் பின் சென்றேன். ஆனால், நாங்கள் அவர் மீது கொண்ட காதலை புறக்கணித்த பெருமான், மண்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட வலம்புரத்து மாட வீதிகளைக் கடந்து சென்று, அங்கே இருந்த திருக்கோயிலில் புகுந்து, நிலையாக ஆங்கே தங்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com