31. ஊனுடுத்தி ஒன்பது வாசல் - பாடல் 1

தில்லை நகரில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்து மகிழ்ந்து பதிகங்கள் பல பாடிய அப்பர் பிரான்,
Updated on
1 min read

(கழிப்பாலை – திருத்தாண்டகம்)

முன்னுரை

தில்லை நகரில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்து மகிழ்ந்து பதிகங்கள் பல பாடிய அப்பர் பிரான், அருகிலிருந்த வேட்களம், கழிப்பாலை ஆகிய தலங்களுக்கும் சென்று பதிகங்கள் பாடி அருளினார். கழிப்பாலையில் பாடிய ஐந்து பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. இந்தப் பதிகத்தின் பாடல்தோறும், பிறவிப் பெருங்கடலைக் கடந்து செல்வதற்கு வழி வைத்த பெருமான் என்று இறைவனைப் புகழ்ந்து பாடி, அந்த வழியே சென்று உய்வினை அடையுமாறு நம்மைத் தூண்டுகின்றார். இவ்வாறு நாம் உய்வதற்கு வழி வகுத்த பெருமானுக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு, அந்த வழியில் செல்வதுதான் என்றும் குறிப்பிடுகின்றார்.

பாடல் 1

ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து வொள்ளெலும்பு தூணா
உரோமம் மேய்ந்து
தாம் எடுத்த கூரை தவிரப் போவார் தயக்கம் பல
படைத்தார் தாமரையினார்
கான் எடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை
மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க்கு
அவ்வழியே போதும் நாமே

விளக்கம்

ஊன் = தசைப்பகுதி. உடுத்தி = வளைத்து. ஒன்பது வாசல் = இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், வாய், எருவாய் மற்றும் கருவாய் ஆகிய ஒன்பது துவாரங்கள். தாம் எடுத்த கூரை = உயிர் தான் உறைவதற்காக அமைக்கப்பட்ட வீடு, அதாவது உடல். கபாலப்பனார் = கபாலத்தைக் கையில் ஏந்தியவர். தாமரையினார் = தா+மரையினார் = தாவும் மான் கன்றினை ஏந்தியவர். கான் = காடு. இங்கே காடு போன்று அடர்ந்து காணப்படும் மயில் தோகையினை உணர்த்துகின்றது. தயக்கம் = வேடங்கள்.

பொழிப்புரை

தசைப்பகுதியை பலவிதமாக வளைத்து, அதனைச் சுவர் போல் அமைத்து, அந்த சுவரினைத் தாங்கும் தூண்களாக வெண்மை நிறம் கொண்ட எலும்புகளை வைத்து, சுவரின் மேல் உரோமங்களைப் பரப்பி, தாம் படைத்த குடிசைக்கு ஒன்பது வாயில்களை வைத்தவர் சிவபெருமான். பலவிதமான உருவங்களை எடுக்கக்கூடிய பெருமான், பக்குவம் அடைந்த ஆன்மாக்கள், தாம் அடைபட்டிருக்கும் கூரையிலிருந்து விடுதலை பெறுவதற்கு அருள்புரிவார். அவர் தன்னைத் தாக்க வந்த மானின் இயல்பினை மாற்றி, தாவி விளையாடும் கன்றாக தனது கையில் ஏந்தியவர் ஆவார். அடர்ந்த தோகையினை விரித்து ஆடும் மயில்கள் பல உடைய சோலைகளைக் கொண்ட கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய சிவபெருமான், வானில் உள்ள உலகங்களைத் தாண்டி, மிகவும் விரைவாக, வீடுபேறு எனப்படும் முக்தி உலகத்திற்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com