பாடல் 7
போர்த்து ஆனையின் உரிதோல் பொங்கப் பொங்கப் புலி அதளே
உடையாகத் திரிவான் தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை
கழலால் காய்ந்தான் தன்னை
மாத்தாடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேரறும்
வண்ணம் மருந்துமாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன்
அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

ஐம்புலனும் காத்தான் = ஐந்து புலன்களும் சேட்டைகள் செய்து அடியார்களின் சிந்தனையை திசை திருப்பாத வண்ணம் காப்பவன். பொங்க = செழிக்க, சிறந்து விளங்க. மாத்து = பெருமை. மகத் என்ற வடமொழி சொல்லின் திரிபு. மாத்தாடி = பெருமை உடைய நடனம். வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.67.4) சுந்தரர் பிரமனும் திருமாலும் அறிய முடியாத பெருமை உடையவன் என்ற பொருள்பட, இறைவனை மால் பிரமன் அறியாத மாத்தான் என்று கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். மாத்து எனக்கு வைத்தான் என்று தனக்கு உள்ள பெருமைகள் அனைத்தும் சிவபெருமானின் கருணையால் விளைந்தவை என்று சுந்தரர் கூறுவதை நாம் இங்கே உணரலாம். ஆத்தான் = ஆப்தன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. சிவபெருமானின் புகழினைத் தொடர்ந்து தனது நாக்கு சொல்வதற்கும், சிவபெருமானின் அருளே காரணம் என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார்.

நாத் தான் தன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும்
ஆத்தானை அடியேன் தனக்கு என்றும் அளவிறந்த பல் தேவர்கள் போற்றும்
சோத்தானைச் சுடர் மூன்றிலும் ஒன்றித் துருவி மால் பிரமன் அறியாத
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம் தன்னில் வந்து கண்டேனே

யானையின் தோலை உரித்தபோது சிவபெருமானின் திருமேனி மிகுந்த ஒளியுடன் விளங்கியது என்றும், அந்த ஒளியினைக் காணமுடியாமல் தேவர்களின் கண்கள் கூசியது என்றும், தேவர்களின் துயரத்தைத் தீர்ப்பதற்காக இறைவன், யானையின் தோலைத் தனது உடல் மீது போர்த்துக்கொண்டான் என்றும் புராணம் கூறுகின்றது. இவ்வாறு ஒளி மிகுந்து இறைவனின் திருமேனி விளங்கிய செய்தியை அப்பர் பிரான் இங்கே பொங்கப் பொங்க என்று கூறுகின்றார். குரைகழல் என்பதற்கு தூக்கிய திருவடி என்றும் பொருள் கூறுவார்கள் நடராஜப் பெருமான் தனது இடது காலினைத் தூக்கி நடனம் ஆடுவதை நாம் காணலாம். அந்த இடது கால்தானே காலனை உதைத்து கீழே வீழ்த்திய காலாக கருதப்படுகின்றது. எனவே தூக்கிய திருவடி என்று குரை கழலுக்கு பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. .

பொழிப்புரை

தாருகவனத்து முனிவர்கள் தன் மீது ஏவிய மதம் கொண்ட யானையின் தோலை உரித்த தருணத்தில் தனது திருமேனி, பார்ப்பவர்களின் கண்களை கூசும் வண்ணம் ஒளி மிகுந்து விளங்க, அந்த கோலத்தைக் கண்ட தேவர்களின் கண்களை பாதுகாக்கும் பொருட்டு யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்தவனும், கொல்லவந்த புலியின் தோலினை உரித்துத் தனது ஆடையாக அணிந்து எங்கும் திரிபவனும், அடியார்களின் இறைச் சிந்தனையை ஐந்து பொறிகளும் திசை திருப்பாதவண்ணம் பாதுகாப்பவனும், பறக்கும் மூன்று கோட்டைகளையும் வெகுண்டு எரித்தவனும், கழல் அணிந்த தனது காலினால் இயமனை கோபித்து உதைத்தவனும், பெருமை மிகுந்த நடனத்தை ஆடுபவனும், பக்தி கொண்டு தன்னை வணங்கும் அடியார்களின் வலிமையான வினைகளை வேருடன் களைபவனும், அடியார்களை வருத்தும் பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்ந்து அதனை போக்குவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.