பாடல் 4
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
விளக்கம்
குனித்த = வளைந்த. பனித்த = ஈரமுள்ள. குமிண் சிரிப்பு = இதழ்கள் குவிந்து கூடிய புன்சிரிப்பு. மனித்தப் பிறவி = பெரியோர்களால் வேண்டப்படாத பிறவி.
உயிரின் உண்மையான தாகத்தை உணர்ந்தவர் அப்பர் பிரான். அதனால் தான் உலகியல் பொருட்களை வேண்டுவோரை கல்மனவர் என்று மூன்றாவது பாடலில் அழைக்கின்றார். ஆனாலும் நடராஜப் பெருமானின் அழகிய கோலத்தை ரசித்த அவருக்கு, அந்தக் காட்சியினைக் காண்பதற்காக மனிதப் பிறவி மறுபடியும் வேண்டும் என்று தோன்றுகின்றது. புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி வழுவாதிருக்க வரம் வேண்டும் என்று வேண்டியவர் அல்லவா அப்பர் பிரான்?
நடராஜப் பெருமானின், புருவம், வாய், சிரிப்பு, சடை, மேனி, மேனியில் வெண்ணீறு, எடுத்த பொற்பாதம் ஆகியவை இங்கே விவரிக்கப்படுகின்றன. பொன்மலை போல் வெள்ளிக்குன்று என்று முந்தைய பாடலில் கூறிய அப்பர் பிரான், பவள போல் மேனியில் பூசிய வெண்ணீறு என்று அந்த காட்சியை விவரித்து கூறுகின்றார்.
பொழிப்புரை
வளைந்த புருவமும், கோவைப்பழம் போன்று சிவந்து காணப்படும் உதடுகளில் மலரும் புன்சிரிப்பும், கங்கையைத் தாங்கியதால் ஈரம் உடைய சடையும், பவளம் போன்று சிவந்த மேனியில் காணப்படும் திருநீறும், அருளும் தன்மையால் அடியார்களுக்கு என்றும் இனியனவாகத் தோன்றும் எடுத்த பாதமும், கொண்ட சிவபிரானின் கோலத்தைக் காண்பதற்காக மறுபடியும் மனிதப் பிறவி எடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகின்றது.
</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.