43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 7

கறுத்த மேகங்கள் வானில் மெதுவாக

கன்றியூர் முகில் போலும் கருங்களிறு
இன்றி ஏறலான் இது என் கொலோ
நின்றியூர் பதியாக நிலாயவன்
வென்றி ஏறுடை எங்கள் விகிர்தனே

விளக்கம்

விகிர்தன் = மாறுபட்ட குணம் உடையவன். யானை போன்ற வாகனங்களை ஏற்றுக்கொள்ளாமல் எருதினை வாகனமாக ஏற்றது ஏன் என்ற கேள்வியை இங்கே அப்பர் பிரான் எழுப்புகின்றார். இந்த கேள்வி நமக்கு திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. கடகரி = மதமுடைய யானை. ஆண் யானைகளுக்கு மதநீர் வழிவது இயற்கை. கட்டுப்படுத்த முடியாத மதயானையை எவரும் வாகனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே மதயானை என்று இங்கே, மதம் கொண்ட யானையை குறிப்பிடாமல், ஆண் யானையை குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். இந்த பாடலில், ஆண் யானை, குதிரை, தேர் ஆகியவற்றை வாகனமாகக் கொள்ளாமல் எருதினை வாகனமாக ஏற்றுக் கொண்டது ஏன் என்று ஒரு பெண் வினவ, அடுத்தவள் விடை கூறுவதாக அமைந்த பாடல். திரிபுரத்தவருடன் போருக்குச் சென்றபோது, தேரின் அச்சு முறிந்து தேர்த்தட்டு உடைந்த போது திருமால் இடபமாக மாறி பெருமானை ஏற்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டு, எருதின் பெருமை இங்கே உணர்த்தப்படுகின்றது.

கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பேடீ
தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ

பொழிப்புரை
கறுத்த மேகங்கள் வானில் மெதுவாக ஊர்வது போன்று, மெதுவாக அசைந்து கம்பீரமாக செல்லும் யானையினைத் தனது வாகனமாகக் கொள்ளாமல், வெற்றித் தன்மை வாய்ந்த எருதின் மேல் ஏறும் பெருமானின் செய்கையின் காரணம் யாதோ, அடியேன் அறியேன். இவ்வாறு தனது செய்கையால், மற்றவரிடமிருந்து வேறுபட்டு இருக்கும் விகிர்தனாகிய பெருமான், நிலையான வளமை வாய்ந்த நிலங்களை உடைய நின்றியூர் தலத்தில் நிலையாக உறைகின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com