43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 8

கங்காளம் என்பதற்கு உயிரற்ற உடல்

நிலையிலா வெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலை விலால் எயில் எய்த கொடியவன்
நிலையினார் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால் தொழுவார் வினை ஓயுமே

விளக்கம்

கங்காளராக ஊழிக் காலத்தில் இருக்கும் நிலை பதிகத்தின் முதல் அடியில் கூறப்படுகின்றது. உயிர்களின் நிலையில்லாத தன்மை, என்றேனும் ஒரு நாள் அழியும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. வெள்ளை மாலையன் என்பதை வெள்ளை நிறத்தில் உள்ள எலும்புகளை மாலையாக அணிந்தவன் என்று பொருள் கொள்ளவேண்டும். உலகில் பெருமானைத் தவிர அனைத்து உயிர்களும் அனைத்துப் பொருட்களும் அழியக்கூடியவை என்பதை உணர்த்தும் தோற்றம்தான் கங்காள வேடம்.

ஞானசம்பந்தர் பல பதிகங்களில் கங்காளர் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். அத்தகைய பாடல் (1.71.1) ஒன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நீலகண்டர், காபாலி, மதிசூடி, புலித்தோலர், நாகத்தை ஆபரணமாக அணிந்தவர், கங்காளர் என்று இறைவின் பல நாமங்களை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பிறைகொள் சடையர் புலியின் உரியர் பேழ்வாய் நாகத்தர்
கறைகொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர்
மறைகொள் கீதம் பாடச் சேடர் மனையின் மகிழ்வு எய்திச்
சிறைகொள் வண்டு தேனார் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே

அப்பர் பிரான் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.112.7) கடல்கள் அனைத்தும் பொங்கி உலகங்களை மூடும் காலத்தில், பிரமன் வாழும் சத்திய லோகமும் கடலினால் முழுவதும் மூடப்பட பிரமனும் அப்போது அழிவான். அவ்வாறு இறந்த பிரமனது உடலினையும், அதே சமயத்தில் இறக்கும், கடல் வண்ணனாகிய திருமாலின் உடலையும், தான் சுமந்துகொண்டு கங்காள வேடத்தில் சிவபெருமான் காட்சி அளிப்பார். ஒடுங்கிய உலகத்தினை மறுபடியும் தோற்றுவித்து, உயிர்கள் தங்களது வினைத் தொகுதிகளைக் கழித்துக் கொள்வதற்கு ஏதுவாக, ஒடுங்கிய உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணத்துடன், சிவபெருமான் வீணை வாசித்தவாறு இருப்பார், என்று கூறுகின்றார்.

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வரும் கடன் மீள நின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே

எலும்புக் கூட்டினை தாங்குகின்ற விரதத்தை ஏற்ற இறைவன் என்று சுந்தரர் வலிவலம் பதிகத்தின் பாடலில் (7.67.10) கூறுகின்றார். ஏன்ற அந்தணன் = தன்னுடன் மாறுபட்ட பிரமன்; பிரமனின் மண்டையோட்டில் திருமாலின் உதிரத்தினை ஏற்ற செய்தியும் இங்கே கூறப்பட்டுள்ளது. மான்று = அறியாமையால் மயங்கி; அறியாமையால் மயங்கி இருக்கும் மனிதர்களின் மனதினை சென்று அடையாதவன் சிவபெருமான் என்று சுந்தரர் உணர்த்துகின்றார்.

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால்  உதிரத்தினை ஏற்றுத்
தோன்று தோள் மிசைக் களேபரம் தன்னைச் சுமந்த மாவிரதத்த கங்காளன்
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன்னிலா  மனத்தார்க்கு
மான்று சென்று அணையாதவன் தன்னை வலிவலம் தன்னில் வந்து கண்டேனே

கங்காளம் என்பதற்கு உயிரற்ற உடல் என்பது பொருள். திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலில், கங்காளத்தை விரும்பி அணிபவராக பெருமான் உள்ளது ஏன் என்ற கேள்விக்கு விடை கூறும் முகமாக அமைந்த பாடல் இது. காலாந்தரம் = கால முடிவு, ஊழிக்காலம். அவர்களின் வாழ்நாள் காலம் முடிவடைந்ததன் காரணமாக, திருமால் பிரமன் ஆகிய இருவரும் இறந்தனர் என்று இங்கே கூறுகின்றார்.

நங்காய் இதென்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து    
கங்காளம் தோள் மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர்
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ

பொழிப்புரை

நிலையில்லாமல் இறந்த உடல்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவனும், நீண்டு உயர்ந்து விளங்கிய மேரு மலையினை கொலைத் தொழில் புரியும் வில்லாக வளைத்து, அதனை பயன்படுத்தி அம்பு எய்தி, பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் அழித்து கொடுமை புரிந்ததன் மூலம், தேவர்களையும் மற்ற உலகத்தவர்களையும் காத்தவனும், நிலையான வளமை பொருந்திய நிலங்களை உடைய நின்றியூர் தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை பாடல்கள் பாடித் துதிப்பவர்களின் வினைகள் ஓய்ந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com