43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 10

ஆறாவது பாடலில் பிச்சைப் பெருமானாக

எளியனா மொழியா இலங்கைக்கு இறை
களியினால் கயிலாயம் எடுத்தவன்
நெளிய ஊன்ற வல்லான் அமர் நின்றியூர்
அளியினால் தொழுவார் வினை அல்குமே

விளக்கம்

அளி = அன்பு. அல்கும் = உறையும். எளியனா மொழியாத = எளிய சொற்களைப் பேசாமல் எப்போதும் கடும் சொற்களைப் பேசும்; பிறர் எவரும் எளியவன் என்று சொல்லாத வகையில் வலிமை உடையவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. களியினால் = தனது வலிமையின் மீது கொண்டுள்ள செருக்கு மற்றும் மகிழ்ச்சியால் ஏற்படும் மயக்கம்; நெளிய = துன்பமுற்று உடலினை வளைத்தல்; எளியனா மொழியா என்ற தொடருக்கு, ஈசனை எளியனாக அணுகாத அரக்கன் என்றும் பொருள் கொண்டு, ஈசன் பால் எளியனாக நாம் கசிந்துருக வேண்டும் என்பதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார் என்றும் விளக்கம் கொள்ளலாம்.

பொழிப்புரை

எப்போதும் கடும் சொற்களைப் பேசும் பழக்கம் உடையவனும் இலங்கைத் தீவுக்கு மன்னனும் ஆகிய அரக்கன் ராவணன், தனது வல்லமை மீது கொண்டிருந்த செருக்கு மற்றும் மகிழ்ச்சி தந்த மயக்கத்தினால் தான் செய்யும் செயலின் தன்மையை உணராது கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தான். இவ்வாறு முயற்சி செய்த அரக்கனின் வலிமை குன்றி, உடல் நெளிய வருந்துமாறு, தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றிய சிவபெருமான் உறையும் தலம் நின்றியூர். இந்த தலத்து இறைவனை, அன்புள்ளம் கொண்டு தொழும் அடியார்களின் வினைகள் சுருங்கி அறவே நீங்கிவிடும்.

முடிவுரை

பதிகத்தின் முதல் பாடலில் மிகவும் பொருத்தமாக பிச்சைப் பெருமான் வேடம் ஏற்றதைக் குறிப்பிடும் அப்பர் பிரான், அவ்வாறு வேடமிட்டு சென்றபோது தாருகவனத்து பெண்களின் உள்ளங்களையும், சங்கு வளையல்களையும் கவர்ந்த கள்வராக திகழ்ந்ததை, இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமானைப் பற்றுகோடாகக் கொண்டவரின் வினைகளும் பாவங்களும் நீங்கும் என்றும், பெருமானைத் தொழும் அடியார்களின் வினைகள் ஓயும் என்று எட்டாவது பாடலிலும், பெருமானை விருப்பத்துடன் தொழும் அடியார்களின் வினைகள் அழிந்துவிடும் என்றும் பத்தாவது பாடலிலும் உணர்த்தும் அப்பர் பிரான், பெருமானிடம் அச்சம் கொண்டோ, அல்லது பக்தி கொண்டோ அவரை நினைத்து உய்யுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். தனது உள்ளத்தில் இறைவன் இருக்கும் நிலையை பதிகத்தின் நான்காவது பாடலில் நமக்கு உணர்த்தும் அப்பர் பிரான், ஏழாவது பாடல் மூலம், வலிமைமிக்க யானையை விடுத்து எருதினை வாகனமாகக் கொண்டது ஏன் ஏன்று வினவுகின்றார்.

பதிகத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பாடலகள் அகத்துறை அமைப்பில் அமைந்தனவாக உள்ளன. ஐந்தாவது பாடலில், பெருமானால் கைவிடப்பட்ட அப்பர் நாயகி அவரை ஏசுவதும், ஆறாவது பாடலில் பிச்சைப் பெருமானாக எங்கும் திரிந்து, தன் மீது காதல் கொண்ட பெண்களை அலக்கழிக்கும் செயலும் குறிப்பிடப்படுகின்றன. அப்பர் பிரானின் அறிவுரையை ஏற்று பெருமானின் கருணைத் திறத்தினை உணர்ந்து அவரிடம் அன்பு கொண்டு, அல்லது அவரது வலிமையை உணர்ந்து அவரிடம் அச்சம் கொண்டு, அவரைப் பற்றுக்கோடாக நினைத்து வணங்கி நாம் வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com