51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 3

சிவபெருமான் தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்
Updated on
5 min read

வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழிஊழி உலகமது ஏத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியார் கள்ளம் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளியாரே
 

விளக்கம்

தேவாரப் பாடல்கள் பாடப்படும் பண்களின் ஒன்றான பஞ்சமம் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. புருடோத்தம நம்பியும் தான் அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (ஒன்பதாம் திருமுறை) பஞ்சமப் பண்ணினை குறிப்பிடுகின்றார். வண்டு பஞ்சமப் பண்ணில் இசைப்பதாக அவர் இங்கே கூறுகின்றார். சிவபிரானை தலைவனாக நினைத்து காதல் கொண்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை விளக்கும்விதமாக அமைந்த பாடல் இது. வண்டுகள் முரலும் பஞ்சமப் பண், மாலை நேரம், செண்பக மாலை ஆகியவை காதலனின் பிரிவால் ஏற்பட்ட வருத்ததை மேலும் பெருக்குவதால் தனது உடல் மெலிவதாக கூறும் நாயகி, சிவபிரானின் வரவு மட்டுமே, தனது வருத்தத்தை நீக்கும் என்றும், அவன் அதுவரை வராத காரணத்தால், தனது ஏக்கம் தனது உயிரை நீக்கும் அளவுக்கு கொடியதாக உள்ளது என்றும் தலைவி கூறுவதாக அமைந்த பாடல். தனது காதலன் சிவபெருமான் ஒருவன் தான் தன்னை அஞ்சேல் என்று தேற்றத் தகுதி வாய்ந்தவர் என்றும் தலைவி இங்கே கூறுகின்றாள்.

வாரணி நறுமலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக
                                  மாலை மாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம் வந்துவந்திவை
                           நம்மை மயக்குமாலோ
சீரணி மணி திகழ் மாடமோங்கு தில்லையம்பத்து எங்கள்
                செல்வன் வாரான்
ஆரெனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம்
                                 என்றன் ஆதரவே

சீகாமரம் பண் காமரம் என்று ஆறு தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. சீ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு சீகாமரம் என்று தற்போது அழைக்கப்படுகின்றது. அத்தகைய பாடல்களில் மூன்று பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சிரபுரம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பாடலில் (1.47.3) சோலைகளில் வண்டுகள் இசைக்கும் பண் காமரப் பண்ணாக உள்ளது என்று சம்பந்தர் கூறுகின்றார். கார் = மேகங்கள். மேகங்கள் தவழும் சோலைகள் என்று தலத்தின் நீர்வளமும் நிலவளமும் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

நீரடைந்த சடையின் மேலோர் நிகழ்மதி அன்றியும் போய்
ஊரடைந்த ஏறது ஏறி உண்பலி கொள்வதென்னே
காரடந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே

ஒரு பொது பதிகத்தின் (4.79) ஐந்தாவது பாடலில், அப்பர் பிரான் கறையணி கண்டனாகிய சிவபிரானை காமரம் இசையில் பாடல்கள் பாடி மகிழ்விக்கும் திறமை இல்லாதவனாகத் தான் இருப்பதை நினைத்து வருந்துகின்றார். திருக்கோயில் அலகிட்டு, மெழுக்கிட்டு பணி செய்யும் மகளிருக்கு உதவும் நிலையில் தான் இல்லாததையும், வேதங்கள் நவின்ற நாவினை உடைய சிவபிரானை சிறிதேனும் புகழ்ந்து பாடும் பண்பில்லாதவனாக இருப்பதையும் நினைத்து வருந்தி, தான் பிறந்து ஏதும் சாதிக்கவில்லை என்று வருந்துகின்றார். இந்த பாடலில் காமரம் என்று சீகாமரம் பண் குறிப்பிடப்படுகின்றது.

கறையணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன்
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தொன்றினேனே

நள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.68.3) பாடலில், சுந்தரர் சிவபெருமானை புகழ்ந்து காமரத்து இசை பாட, தனது நாவில் அமுதம் ஊறுகின்றது என்று கூறி மகிழ்கின்றார். நினைத்தாலே தேன் போன்று இனிக்கும் சிவபெருமானைப் புகழ்ந்து பாடினால் அமுதம் போன்று இனிப்பதால், அவனை மறந்து நாம் வேறு நினைவுகளில் ஆழ்ந்துவிடக் கூடாது என்று இங்கே சுந்தரர் உணர்த்துகின்றார்.

பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப் புவியைக்
        காற்றினைப் புனல் அனல் வெளியைச்
சேவின் மேல் வரும் செல்வனைச் சிவனை தேவதேவனைத்
                தித்திக்கும் தேனைக்
காவியங்கண்ணி பங்கனைக் கங்கை சடையனைக் காமரத்து
                    இசை பாட
நாவில் ஊறு நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என்
                    நினைக்கேனே

தேவாரப் பாடல்களில் இடம் பெறும் மற்றொரு பண் கொல்லியாகும். குறுக்கை வீரட்டம் தலத்திற்கு சென்ற அப்பர் பிரானுக்கு, மற்றொரு வீரட்டத் தலமாகிய அதிகை வீரட்டம் நினைவுக்கு வந்தது போலும். அவருக்கு, அதிகை வீரட்டத்து இறைவன் தனது பதிகத்தை மிகவும் ரசித்து, நாவுக்கரசு என்று அழைத்ததும் நினைவுக்கு வந்தது போலும். தான் பாடிய கூற்றாயினாவாறு என்று தொடங்கும் பதிகத்தை, கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகத்தை விரும்பிய இறைவனை குறிப்பிடும் முகமாக கொல்லியாம் பண் உகந்தார் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். அந்த பாடல் இங்கே (4.49.4) கொடுக்கப்பட்டுள்ளது.. சாக்கிய நாயனாரின் பிறவிப்பிணியை நீக்கி, அவருக்கு முக்தி தந்ததை, உணர்த்தும் வகையில், சோறு வேண்டாத நிலைக்கு அவரை உயர்த்தினார் என்று இங்கே அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார். உணவு உண்ணச் சென்ற சாக்கிய நாயனார், தான் அன்று சிவபெருமானுக்கு கல்லினால் அர்ச்சனை செய்யாமல்விட்டதை நினைவுகூர்ந்து, உணவு உண்பதை நிறுத்திவிட்டு பெருமானுக்கு கல்லினால் அர்ச்சனை செய்தபோது, சிவபெருமான் தோன்றி அவருக்கு முக்தி அளித்தார் என்று பெரியபுராணத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இம்மையிலும் மற்றும் மறுமையிலும் உணவு வேண்டாத நிலைக்கு சாக்கிய நாயனார் உயர்த்தப்பட்டார்.

கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார்
நெல்லினால் சோறு உணாமே நீள்விசும்பு ஆள வைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டமாடி
கொல்லியாம் பண் உகந்தார் குறுக்கை வீரட்டானாரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.130.6) சம்பந்தர் காந்தாரப் பண்ணில் இசையமைத்து பெண்கள் பாடல்கள் பாட, அந்த பாடலுக்கு ஏற்ப இளம்பெண்கள் நடனம் ஆடியதாக குறிப்பிடுகின்றார். தாமம் = மாலை.

வேந்தாகி விண்ணவர்க்கு மன்னவர்க்கு நெறி காட்டும்
                                    விகிர்தனாகிப்
பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார்
                நண்ணும் கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண்பாடக்
                                   கவினார் வீதித்
தேந்தாம் என்று அரங்கேறிச் சேயிழையார் நடம்மாடும்

திருவையாறே
 ஒன்பதாவது திருமுறையில் கருவூர்த் தேவர் திரைலோக்கிய சுந்தரம் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் காந்தாரப் பண்ணுடன் பாடப்படுகின்றது. இந்த பதிகத்தின் கடைப் பாடலில் கருவூர்த் தேவர், இந்த பதிகத்தின் பாடல்களை காந்தாரப் பண்ணில் இசைத்து பாடும் அடியார்கள் வாழ்வில் நிறைவுபெற்று விளங்குவார்கள் என்று கூறுகின்றார்.

ஆரணத் தேன் பருகி அருந்தமிழ் மாலை கமழ வரும்
காரணத்தின் நிலை பெற்ற கருவூரன் தமிழ் மாலை
பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம்
சீரணத்த பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே

குறிஞ்சிப் பண் முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த பண் என்று சங்க இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது. குறிஞ்சிப் பண்ணில் பாடல்கள் பாடி முருகனது புகழினை பெண்கள் பாடியதாக சம்பந்தர் கீழ்க்கண்ட பாடலில் (1.12.10) கூறுகின்றார்.

அருகரொடு புத்தர் அறியா அரன் மலையான்
மருகன் வரும் இடபக்கொடி உடையான் இடம் மலரார்
கருகு குழல் மடவார் கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய ஒரு பாடலில் (1.132.7) சம்பந்தர் செவ்வழிப் பண்ணில் வண்டுகள் பாடுவதாக கூறுகின்றார். செங்கழுநீர் மலர்களில் உள்ள தேனை அளவுக்கு அதிகமாக பருகிய வண்டுகள் தங்களது இயல்பான நிறம் மாறி, சிவந்த நிறம் பெற்று, களிப்பு மிகுதியில் செவ்வழிப் பண்ணில் பாடுகின்றன என்று இங்கே கூறுகின்றார்.

ஆறாடு சடை முடியன் அனலாடு மலர்க் கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடும் குணம் உடையோன் குளிரும்                                                 கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு
வேறாய உருவாகிச் செவ்வழி நற்பண் பாடும் மிழலையாமே

செங்கழுநீர் மலர்களில் உள்ள மதுவினை உண்ட மகிழ்ச்சியில் செவ்வழிப் பண்ணில் வண்டுகள் பாடுவதை மேற்கண்ட பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், குற்றாலம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.99.10) தனது துணையுடன் கூடிய மகிழ்ச்சியில் திளைக்கும் ஒரு வண்டு, குருந்த மரத்தின் மீது அமர்ந்து செவ்வழிப் பண்ணில் பாடல் பாடுவதாக கூறுகின்றார். தேரர் = புத்தர்கள்.

பெருந்தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கிக்
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம்
இருந்துண் தேரும் நின்றுண் சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்

இந்த செவ்வழிப் பண் மாலை நேரத்தில் பாடுவதற்கு உரியது. இந்த செய்தியை அப்பர் பிரான் கீழ்க்கண்ட பாடலில் (5.12.10) உணர்த்துவதை நாம் காணலாம்

பாலை யாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை ஆரழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழி மிழலையே

பஞ்சுரம் என்று பழம்பஞ்சுரம் குறிக்கப்படுவதை நாம் சம்பந்தர் அருளிய திருப்பைஞ்ஞீலி பதிகத்தின் ஒரு பாடலில் (3.14.3) காணலாம். அஞ்சுரும்பு = அம்+சுரும்பு, அழகிய வண்டு. தேனை உண்ட மகிழ்ச்சியில் வண்டு பஞ்சுரப் பண்ணில் பாடுவதாக இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.

அஞ்சுரும்பு அணிமலர் அமுதம் மாந்தித் தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்
வெஞ்சுரம் தனில் உமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே

பழம்பஞ்சுரம் பண்ணில் அமைக்கப்பட்ட, பரிதிநியமம் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.104.4) சம்பந்தர், பஞ்சுரம் என்று இந்த பண்ணினை குறிப்பிடுகின்றார். சிவபெருமான் பால் காதல் கொண்டு, அவர் வலம் வரும் கோலத்தினைக் கண்ட ஏக்கத்தினால், தனது கட்டிய கூந்தல் அவிழ்ந்து சரிந்ததாகவும், சிவபெருமான் தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டார் என்றும் இந்த பாடலில் தலைவி கூறுவதை நாம் உணரலாம்.

வெஞ்சுரம் சேர் விளையாடல் பேணி விரிபுன் சடை தாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து
அஞ்சுரும்பு ஆர்குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம்                                                                                                     போலும்
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிந் நியமமே'

இந்த பாடலில் வெள்ளியர், கரியர், செய்யர் என்று சிவபெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் செம்மை நிறம் கொண்டவர் என்பதை உணர்த்தும் முகமாக பல தேவாரப் பாடல்களில் செய்யர் என்று அவரை மூவர் முதலிகள் குறிப்பிடுகின்றார்கள். கரியர் என்பது திருமாலையும், வெள்ளியர் என்பது பிரமனையும் குறிக்கும். பிரமனாகவும், திருமாலாகவும், மும்மூர்த்திகளாக சிவபெருமான் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. தெள்ளியார் = தெளிந்த உள்ளம் கொண்ட ஞானியர்கள். பள்ளியார் = பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால்.

முத்தொழில் புரிபவராக சிவபெருமானை பல தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன. வேணுபுரத்தின் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அருளப்பட்ட பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.9.2) சம்பந்தர், படைப்பவனாகவும், காப்பனாகவும், அழிப்பவனாகவும் விளங்குவதுடன், இந்த தொழில்களின் முடிந்த பயனாகிய முக்தி நிலையாகவும் சிவபெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். கிடை = வேதம் ஓதும் கூட்டம்.

படைப்புந் நிலை இறுதிப் பயன் பருமையொடு நேர்மை
கிடைப் பல்கணம் உடையான் கிறி பூதப்படை உடையான் ஊர்
புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே

பொழிப்புரை

சிவபெருமான், திருமாலாகவும், பிரமனாகவும் நின்று செயல்படுகின்றார். அவர் தன்னை வணங்கி வழிபடும் தேவர்கள் உள்ளத்தில் ஒளியாகத் திகழ்கின்றார். அனைத்து ஊழிகளிலும் எல்லா உலகங்களும் போற்றும், பள்ளிகொண்ட பெருமானின் (திருமால்) நெஞ்சத்திலும் உறைகின்றார். தெளிந்த உள்ளம் கொண்டவர்களாய், பஞ்சமம் என்ற பண்ணினைப் பாடி ஆடும் ஞானியர்களின் உள்ளத்து இருளினைப் போக்குகின்றார். அவர்தான் திருச்செம்பொன்பள்ளியில் உறையும் இறைவன் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com