(ஓமாம்புலியூர் – திருத்தாண்டகம்)
முன்னுரை
காட்டுமன்னார் கோயிலுக்கு மிகவும் அருகில் உள்ள தலம். சிதம்பரத்திலிருந்தும் காட்டுமன்னார்கோயிலில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. அப்பர் பிரான் இந்த தலம் சென்றதாக, சேக்கிழார் பெரிய புராணத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனாலும் அருகில் உள்ள பல தலங்கள் சென்றதாக ஆங்காங்கே கூறுகின்றார். அத்தகைய தலங்களில் இந்த தலமும் அடங்கியதாகவே நாம் கொள்ள வேண்டும். கயிலாயம் தவிர அனைத்து தலங்களும், அப்பர் பிரான் நேரில் சென்று தரிசித்து பதிகங்கள் பாடியமையால், இந்த தலமும் சென்றிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். கடம்பூர் சென்று கரக்கோயிலானின் கடமை தன்னை காப்பாற்றுவது என்றும், கரக்கோயிலானைத் தொழுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பதிகங்கள் பாடிய அப்பர் பிரானுக்கு, தான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்த காலங்களில் பெருமானைத் தொழாது நாட்களை வீணாக கழித்தமை நினைவுக்கு வந்தது போலும். கடம்பூர் தலத்திற்கு அருகில் உள்ள, இந்த தலம் வந்தபோது, பெருமானைத் தொழாது வீணாகத் தான் பல வருடங்கள் கழித்ததை நினைத்து, தனது வருத்தத்தை வெளிப்படுத்திய பதிகம் இது.
புலிக்கால் முனிவர் வழிபட்ட தலங்கள் புலியூர் என்ற பெயர் பெற்றன. மிகுந்த பற்றுகொண்டு வழிபட்ட தில்லைச் சிற்றம்பலம், பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரைப் பெற்றது. மற்ற தலங்கள், பாதிரிப்புலியூர் (இன்றைய கடலூர்), ஓமாம்புலியூர், பெரும்புலியூர், எருக்கத்தம்புலியூர் என்பன.
பாடல் 1
ஆராரும் மூவிலைவேல் அங்கையானை அலைகடல் நஞ்சு
அயின்றானை அமரர் ஏத்தும்
ஏராரும் மதி பொதியும் சடையினானை எழுபிறப்பும் எனை
ஆளா உடையான் தன்னை
ஊராரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர் தரும்
ஓமாம்புலியூர் மன்னும்
சீராரும் வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து
நாள் செலுத்தினேனே
விளக்கம்
எழு பிறப்பு என்று அப்பர் பிரான் தனக்கு வரவிருக்கும் பிறப்புகளை குறிப்பிடுகின்றார். நமது உயிர் இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகள் எத்தனை என்பது நம்மில் எவருக்கும் தெரியாது, இதுவரை எடுத்த பிறவிகள் எத்தனை என்பதும் நமக்குத் தெரியாது. நாம் அடுத்த பிறவியில் எப்படி பிறப்போம் என்பதும் நமக்குத் தெரியாது. ஏழு பிறப்பு என்றும் எழு பிறப்பு என்றும் தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படும் பிறவிகள். தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர்கள் மற்றும் தேவர்கள் எனப்படும் ஏழு வகையான பிறப்புகள் ஆகும். நமது அடுத்த பிறவி, இந்த ஏழு வகையான பிறப்புகளில் ஒன்றாக, எந்த பிறவியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை உணர்த்தவே எழு பிறவி என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு கச்சூர் ஆலக்கோயில் பதிகத்தின் ஒரு பாடலை (7.41.2) நினைவூட்டுகின்றது.
கச்சேர் அரவு ஒன்று தலையில் அசைத்துக் கழலும் சிலம்பும்
கலிக்கப் பலிக்கென்று
உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை
ஆள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே
பசியால் வாடியிருந்த சுந்தரருக்கு உணவு அளிக்கும் பொருட்டு, சிவபெருமான் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றி கோயிலுக்கு அருகில் இருந்த இல்லங்களில் பிச்சை ஏற்று கிடைத்த உணவினைக் கொண்டு சுந்தரரின் பசியைத் தீர்க்கின்றார். முதியவர் கொடுத்த உணவினை, சுந்தரரும் அவருடன் வந்த அடியார்களும் உண்டுகொண்டிருக்கையில், முதியவர் எவரும் அறியாத வண்ணம் மறைந்து விடுகின்றார். வந்த முதியவர் மறைந்த பின்னரே, வந்தவர் சிவபெருமான் என்பதை உணர்ந்த சுந்தரர் பாடிய பதிகத்தின் ஒரு பாடல் இது. பெருமானின் கருணையை நினைந்து உருகிய சுந்தரர், இந்த பிறவியில் தன்னை ஆட்கொண்டு அருளிய பெருமான் வரவிருக்கும் பிறவிகள் அனைத்திலும் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்றார். இந்த பிறவியில் தனக்குத் தலைவனாக இருந்து தன்னை ஆட்கொண்ட இறைவன், தான் எடுக்க இருக்கும் அனைத்துப் பிறவிகளிலும் தனக்கு தலைவனாக இருப்பார் என்று மற்றொரு பதிகத்தின் (7.63) முதல் ஒன்பது பாடல்களில் எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே என்று ஒவ்வொரு பாடலிலும் சுந்தரர் கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலின் பிற்பகுதி சிதைந்துவிட்டது.
இன்னம்பர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் (6.89) பதிகத்தின் ஐந்தாவது பாடலில் பெருமானை, ஏழு வகையில் ஒன்றாக பிறப்பதை தடுப்பவர் என்று உணர்த்தும் வண்ணம். ஏழு பிறப்பும் அறுப்பார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய்
நின்றார் போலும்
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த
அழகர் போலும்
தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு தன்மை அளித்த
தலைவர் போலும்
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான் தோன்றி
ஈசனாரே
தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய புக்கத் திருத்தாண்டத்தின் பாடல் ஒன்றினில் (6.2.10), தன்னை பக்தியுடன் வழிபடும் தொண்டர்களின் துயரங்களைத் தீர்ப்பது மட்டும் அல்லாமல், வரவிருக்கும் பிறவிகளிலும் அத்தகைய தொண்டர்களை ஆட்கொள்ளும் இறைவன் சிவபெருமான் என்பதை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
பாதங்கள் நல்லார் பரவி ஏத்தப் பத்திமையால் பணி செய்யும்
தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழுபிறப்பும் ஆளுடைய
ஈசனார் தாம்
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி
வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப் புலியூர் சிற்றம்பலமே
புக்கார் தாமே
அற்புதத் திருவந்தாதி பதிகத்தின் மூன்றாவது பாடலில் காரைக்கால் அம்மையார், அவர்க்கே எழு பிறப்பும் ஆளாவோம் என்று சொல்வதன் மூலம், இனிமேல் தான் எடுக்க இருக்கும் பிறவிகள் அனைத்திலும் பெருமானுக்கு ஆளாக இருப்போம் என்று கூறுகின்றார். பவர் சடை = கொடியைப் போன்று சடை. பாகு = பருத்த பாகம். போழ் = பிளவு. ஆகாப்போம் = ஆகாமல் போவோம்.
அவர்க்கே எழு பிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவது அல்லால் - பவர்ச் சடை மேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கு அல்லால் மற்றொருவருக்கு
ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்
ஆர் ஆரும் = கூர்மை பொருந்திய. ஏர் ஆரும் = அழகு நிறைந்த. அங்கை = அம்+கை = அழகிய கை. அயின்றான் = உண்டவன். ஊராரும் = நிலத்தில் ஊர்ந்து செல்லும் இயல்பினை உடைய. தேவர்கள் புகழும் வண்ணம் சந்திரனைத் தனது சடையில் ஏற்று வாழவைத்தவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தக்கனது இருபத்தேழு மகள்களையும் மணந்த சந்திரன், ரோகிணியிடம் அதிகமாக பிரியம் காட்டியதால், மற்ற மனைவியர் தங்களது தகப்பனிடம் முறையிட தக்கன், சந்திரன் ஒவ்வொரு கலைகளாக தேய்ந்து அழியுமாறு சாபம் விடுத்தான். அதன் வண்ணம் ஒவ்வொரு கலைகளாக அழிய, வருந்திய சந்திரனை பிரமன் திருமால் உட்பட அனைத்து தேவர்களும் உதவி செய்ய முடியாமல் சந்திரனைக் கைவிட, இறுதியில் பிரமனது ஆலோசனையின் பேரில் சிவபெருமானிடம் அடைக்கலம் புக, சந்திரன் அழியாமால் காப்பாற்றப்பட்டான். தங்களால் முடியாத செயலை செய்து, சிவபெருமான் சந்திரனை காப்பாற்றியதால், தேவர்கள் அனைவரும் சிவபெருமானின் செயலை புகழ்ந்தார் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
வேல் போன்று கூர்மை பொருந்திய மூன்று இலைகளை உடைய சூலத்தினைத் தனது அழகிய கையில் ஏந்தியவனும், அலைகள் நிறைந்த பாற்கடலில் திரண்டெழுந்த நஞ்சினை உண்டவனும், தேவர்கள் புகழும் வண்ணம் தக்கனின் சாபத்தால் தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரனைத் தனது சடையில் பொருத்தி அவனுக்கு வாழ்வு அளித்தவனும், வரும் நாட்களில் நான் எடுக்கவிருக்கும் ஏழு வகையான பிறப்புகளில் எந்த பிறப்பாக இருந்தாலும் என்னை அடிமையாகக் கொண்டு ஆட்கொள்பவனும், நிலத்தில் ஊர்ந்து செல்லும் தன்மையை உடையதும் படம் எடுத்து ஆடுவதும் ஆகிய பாம்பினைத் தனது கச்சினை இறுக்கமாக கட்டி தனது விருப்பப்படி அதனை ஆட்டுவிப்பானும், உயர்ந்த புகழினை உடைய ஓமாம்புலியூர் எனப்படும் தலத்தில் உள்ள சிறப்பு மிகுந்த வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனுமாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.