

பாடல் 4:
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓருகம்
போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கிய சீர்த் தலையான வானோர் செய்த தக்கன்
தன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கிய நீர்த் தாமரையான் நெடுமாலோடு
நில்லாய் எம் பெருமானே என்று அங்கு ஏத்தி
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
விளக்கம்:
தாங்கிய வானோர்கள் என்று, சிவபெருமானை புறக்கணித்து செய்யப்பட்ட தக்கனது வேள்வி முயற்சியினை ஆதரித்து அவனுடன் ஒத்துழைத்த தேவர்கள் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நீங்கிய நீர்த் தாமரையான் என்பதற்கு இரண்டு விதமாக விளக்கங்கள் கூறப்படுகின்றன. நீங்கிய நீர்த் தாமரை என்ற தொடரினை பிரமனுடன் இணைத்து பொருள் கூறுவது ஒருவிதம். பொதுவாக தாமரை நீரினில் பூக்கும். ஆனால் பிரமன் தோன்றிய தாமரை மலரோ நீரினில் பூக்காமல். திருமாலின் உந்தியிலிருந்து எழுந்தது. இவ்வாறு நீரிலிருந்து நீங்கிய தாமரையில் தோன்றிய பிரமன் என்பதே இந்த பொருள்.
நீங்கிய நீர் என்ற தொடரினை நெடுமாலொடு இணைத்து பொருள் காணவேண்டும் என்று பெரியபுராண விளக்கத்தில் சிவக்கவிமணி திரு சி.கே. சுப்ரமணியம் அவர்கள் கூறுகின்றார். செருக்கு மிகுந்து தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த இருவரின் முன்னே தழற்பிழம்பாக பெருமான் தோன்றிய போது. அடியைத் தேடிச் சென்ற திருமால், தனது தோல்வியையும் பெருமானது உயர்வினையும், தனது செருக்கு குணம் நீங்கியவராக உடனே ஒப்புக்கொண்டார். பிரமன் அவ்வாறு முதலில் செய்யவில்லை. இருவரும் தங்களது செருக்கு நீங்கிய நிலையில், பெருமானை வணங்கி, பெருமானே எங்களது உள்ளத்தினில் நீ நீங்காது நிற்பீராக என்று கோரினார்கள். இவ்வாறு வேண்டியதே, நின்றாய் எம் பெருமானே என்று அங்கே ஏத்தி என்ற தொடரால் விளக்கப்படுகின்றது. முதலில் செருக்கு நீங்கிய திருமால் என்று நீங்கிய நீர் நெடுமால் என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
மண்ணுக்கும் விண்ணுக்குமாக உயர்ந்த தழற்பிழம்பாக நின்றவனே; ஒரு யுகத்தின் முடிவினில் அழியாமல் இருப்பது போன்று பல யுகங்களிலும் நிலைபெற்று இருப்பவனே; சிறப்பு வாய்ந்த தேவர்களின் ஒத்துழைப்புடன் தக்கன், பிரம்மண்டமாக முன்மாதிரி வேள்வி செய்ய முயற்சித்த போது. அந்த வேள்வி வேதநெறிகளுக்கு புறம்பாக இருந்ததால் அந்த வேள்வி முற்றப் பெறாத வண்ணம் அழித்தவனே: நீரிலிருந்து நீங்கி திருமாலின் உந்தியில் உதித்த தாமரை மலரில் தோன்றிய பிரமனும், நெடிய உருவம் கொண்டு மூன்று உலகங்களையும் அளந்த திருமாலும் அடியையும் முடியையும் காண முடியாமல் துவண்டு நின்ற பின்னர், பெருமானின் உயர்ந்த நிலையை உணர்ந்தவர்களாக, பெருமானே நீ எங்களது உள்ளத்தில் நிலையாக உறைய வேண்டும் என்று வேண்டியபோது அவர்களின் வேண்டுகோளை ஏற்றவனே, தக்கனது சாபத்தால் தேய்ந்து அழிந்த நிலையில் சரணடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனை தனது சடையில் ஏற்றுக்கொண்டு மறுவாழ்வு அளித்தவனே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.