

பாடல் 8:
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய
பத்து முடி அடர்த்தீரே
பத்து முடி அடர்த்தீர் உமைப் பாடுவார்
சித்த நல் அடியாரே
விளக்கம்:
இந்த தலம் முக்தி தரும் தலங்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது. முக்தி தலங்கள் எவையெவை என்பதை தருமபுரம் ஆதீன முதல்வர் குருஞான சம்பந்தர் அருளியுள்ள பாடல் குறிக்கின்றது.
தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர்
காஞ்சி கழுக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி
வாஞ்சியம் என முக்தி வரும்
இந்த தலத்தில் இறக்கும் மனிதர்களுக்கு உமையன்னை தனது முந்தானையின் ஒரு பகுதியால் வீசி இளைப்பாற்றுவார் என்றும் பெருமான் அவர்களது வலது காதினில் திரு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவார் என்றும் நம்பப்படுவதால், காசியினும் சிறந்த தலமாக கருதப் படுகின்றது. இந்த தகவல் கந்தபுராணம் வழிநடைப் படலத்தில் கூறப் படுகின்றது. இந்த தலத்தின் முக்தி அளிக்கும் தன்மை சம்பந்தரால் இங்கே குறிப்பிடப் படுகின்றது
பெருமானைப் பாடும் அடியார்களின் சித்தம் அழகாக இருக்கும் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு திருவெம்பாவை பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது.
முத்தன்ன வெண் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து
ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்
நேற்றைய தினம் பெருமானை குறித்து வாய் தித்திக்க பேசிய பெண்ணே, இன்று இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை போலும் என்று இல்லத்திற்கு வெளியே உள்ள பெண்கள் கூற, உள்ளே இருக்கும் பெண்மணி பழ அடியார்களாகிய நீங்கள் புதியதாக உங்களுடன் சேர்ந்த எனது குறைகளை பொருட்படுத்துதல் முறையோ என்று கேட்கின்றாள். புதியவள் தனது தவறினை உணர்ந்ததை அறிந்த மற்ற பெண்கள், நமக்குள் புதிய அடியார் பழைய அடியார் என்ற வகையில் பேதம் ஏதுமில்லை என்று கூறியதுடன், சித்தம் அழகாக இருந்தால் அந்த அடியார்கள் சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவார்கள் என்றும் கூறுகின்றனர். பெருமானைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் சித்தம் அழகாக, குற்றங்கள் ஏதும் இன்றி இருக்கும் என்று இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.
இந்த பாடலில் பத்துடையீர் என்று அடியார்களை அடிகளார் குறிக்கின்றார். பத்து என்ற சொல் பற்று என்ற சொல்லின் திரிபாக கருதப்பட்டு ஈசன் பால் பற்று உடைய அடியார்கள் என்று விளக்கம் சிலர் அளிக்கின்றனர். பத்து கொலாம் அடியார் செய்கை தானே என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது போல், பத்து செயல்களை உடைய அடியார்களை மணிவாசகர் பத்துடையீர் என்று அழைக்கின்றார் என்ற விளக்கம் மிகவும் பொருத்தமானது.
சிவனடியார்களிடம் இருக்கவேண்டிய அக குணங்கள் பத்தும் புற குணங்கள் பத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை செய்தல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களைக் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் உணவு உட்கொள்ளாது இருத்தல் ஆகியவை. பத்து அக குணங்கள் கீழ்க்கண்டவை ஆகும். சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல் மற்றும் மெய்ம்மறத்தல்.
ஐந்து பொறிகளின் வாயிலாக அறிந்து கொண்ட செய்திகளை பயன்படுத்தி உயிர் செயல்பட இறைவன் நமக்கு நான்கு அந்தக்கரணங்களை அளித்துள்ளார். மனம் புத்தி ஆங்காரம் சித்தம் ஆகியவை இந்த நான்கு அந்தக்கரணங்கள். ஐந்து பொறிகள் மூலம் அறிந்து கொள்ளும் அறிவு மனதினை சென்று அடைகின்றது. அவ்வாறு வந்த தகவல்களை புத்தி பாகுபடுத்தி, பொருளின் தன்மையை உணர்கின்றது. இவ்வாறு உணரப்பட்ட பொருளினை மேலும் ஆராய்ந்து ஆங்காரம் உயிர் செய்யவேண்டிய செயலை நிர்ணயம் செய்கின்றது. இந்த முடிவினை செயல்படுத்தும் விதமாக, மேலே குறிப்பிட்ட மூன்று அந்தக்கரணங்களின் வாயிலாக அறிந்து கொண்ட உண்மைகளை நிலையாக நிலைநிறுத்துவது சித்தம். இதுவே சிந்தனை என்றும் அறியப்படுகின்றது. எனவே உயிர் செயல்படுவதற்கு ஆதாரமாக சித்தம் அமைந்துள்ளது என்பதை நாம் உணரலாம். அத்தகைய சித்தம் அழகாக இருந்தால் தானே, உயிர் இறைவனை சிந்திக்கும். எனவே தான் சித்தம் அழகாக இருக்கவேண்டும் என்று மணிவாசகர் கூறுகின்றார். சித்தத்தை பெருமான் பால் வைத்த அடியார்களை, சித்தத்தை சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிட்டு, தொகை அடியார்களில் ஒருவராக குறிப்பிட்டு சிறப்பிப்பதை நாம் உணரலாம். நான்கு அந்தக்கரணங்களின் செயல்களை குறிப்பிடும் உண்மை விளக்கம் (சைவ சித்தாந்த நூல்களில் ஒன்று) பாடலை நாம் இங்கே காணலாம்,
அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள்
அந்த மனம் புத்தியுடன் ஆங்காரம் -- சிந்தை இவை
பற்றி அது நிச்சயித்து பல்கால் எழுந்திருந்து அங்கு
உற்ற சிந்திக்கும் உணர்
பொழிப்புரை:
முத்தியைத் தருகின்ற சிறப்பினை உடைய முதுகுன்றம் தலத்தில் பொருந்தி உறைகின்ற இறைவனே நீர் பத்து முடிகளை உடைய அரக்கன் இராவணனின் தலைகளை கயிலாய மலையின் கீழே அழுத்தி நெருக்கினீர். இவ்வாறு அரக்கனின் பத்து தலைகளையும் நெருக்கிய உம்மை பாடும் அடியார்களின் சித்தம் மிகவும் அழகியதாக விளங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.