96. கண் காட்டு நுதலானும் - பாடல் 2

குருவாகிய அருணந்தி
96. கண் காட்டு நுதலானும் - பாடல் 2
Updated on
3 min read


பாடல் 2:

    பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
    ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
    வேயன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்
    தோய்வினையார் அவர் தம்மை தோயாவாம் தீவினையே

விளக்கம்:

பெண்ணாகடத்தில் வாழ்ந்து வந்த அச்சுதக் களப்பாளர் எனும் சைவ வேளாளர்க்கும் அவரது மனைவியர்க்கும் நீண்ட காலமாக குழந்தை இல்லை என்ற குறை இருந்து வந்தது. அவர்கள் தங்கள் குருவாகிய அருணந்தி சிவாச்சாரியாரிடம் விண்ணப்பித்தனர். திருமுறையில் நம்பிக்கை உடைய அவர், திருமுறை ஏட்டை எடுத்து அதற்கு பூசை செய்து அதில் கயிறு சாத்தினார். கயிறு சாத்துதல் என்றால், ஏட்டினை இணைத்துள்ள கயிற்றினை அவிழ்த்து இறைவனை நினைத்து ஏட்டின் கயிற்றை ஏதாவது ஒரு பக்கம் வரும்படி இழுப்பது; பின்னர் அப்படி இழுத்த பக்கத்தில் இருக்கும் பாடலை எடுத்து படிப்பது; எதனை வேண்டி ஏடு சாத்துகிறோமோ அந்த வேண்டுகோளுக்கு ஊன்று கோலாக ஏதேனும் பொருள் இருக்கும் பதிகம் அந்த  பக்கத்தில் இருந்து, அந்த பதிகத்தை படித்தால் வேண்டுகோள் நிறைவேறும் என்ற நம்பிக்கை பண்டைய நாளிலும் இருந்த வந்தமை இந்த நிகழ்ச்சி மூலம் நமக்கு தெரியவருகின்றது. இப்போதும் தென் மாவட்டங்களில் ஏடு சாத்தி பார்க்கும் முறை வழக்கத்தில் உள்ளது. மேலும் திருஞான சம்பந்தர் வாழ்க்கையில் மதுரையில் புனல் வாதம் மேற்கொண்ட போது, ஏடு சாத்தி பார்த்த நிகழ்ச்சியை இங்கே நினவு கூர்வது  பொருத்தமே.  

மேலே கூறிய முறையில் ஏடு சாத்திப் பார்த்ததில் வெண்காடு மீது சம்பந்தப் பெருமான் பாடிய இந்த பதிகத்தின் இரண்டாவது பாடல் வந்தது. இந்த பாடலில் பிள்ளை நினைவு இருந்தால் வரம் பெறுவார்; இதில் ஐயம் ஏதும் இல்லை எனும் பொருள் படும் சொற்கள் உள்ளன. இதனைக் கண்ட களப்பாளர், இறைவன் தனக்கு பிள்ளைப் பேற்றினை அளிக்கும் திருக்குறிப்பினை இந்த பாடல் மூலம் உணர்த்தியுள்ளான் என்று பேரின்பம் கொண்டார்; மிகவும் மகிழ்ச்சி அடைந்த அச்சுதக் களப்பாளர், தனது மனைவியுடன் வெண்காடு சென்று அடைந்து அங்கு இருந்த மூன்று குளங்களிலும் நீராடி, இந்த பாடலையும் படித்து பெருமானை வழிபடுகின்றார். ஒரு மண்டலம் இவ்வாறு நோன்பு இருந்து வழிபட்ட பின் ஒரு நாள் அவரது கனவில் இறைவன் தோன்றி, பழவினை காரணமாக இந்தப் பிறவியில் மகப்பேறு அடையும் பேறு அவருக்கு இல்லை என கூறுகிறார். அதனைக் கேட்ட களப்பாளர் தனது பழவினையை நினைத்து தன்னை தேற்றிக் கொள்கிறார். இந்தப் பாடலில் பிள்ளை வரம் உண்டு என்று உறுதிப் படுத்துவதுடன் பழவினையின் தீய தன்மைகள் அணுகாது என்றும் கூறப்பட்டுள்ளது. முக்குள நீரின் சிறப்பும் இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. பேய் போன்ற தீய சக்திகள் அணுகாது என்றும் ஒரு சமயம் அத்தகைய சக்திகள் உடலைப் பிடித்து இருந்தாலும் விலகி விடும் என்றும் சம்பந்தர் இந்தப் பாடலில் கூறுகிறார்.

அவ்வாறு தன்னைத் தேற்றிக் கொண்டாலும் அவருக்கு ஒரு சிறிய வருத்தம் இருந்தது. தனக்கு மகப்பேறு இந்தப் பிறவியில் இல்லை என்பதனை கூட பெரிய வருத்தமாக அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அம்மையின் ஞானப் பாலை உண்டு அருள் ஞானம் பெற்ற சம்பந்தரின் வாக்கு பொய்த்துப் போவதற்கு தனது பழவினை காரணமாகி விட்டதை நினைத்து மிகவும் வருந்துகிறார். இவ்வாறு அவர் கருதியதில் இருந்து நாம் சம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்களின் பலன்களை குறித்து அந்த காலத்தில் இருந்த நம்பிக்கையையும், சம்பந்தர் மீது களப்பாளருக்கு இருந்த மதிப்பையும் நாம் அறிந்து கொள்ளலாம். தனது வருத்தத்தின் காரணத்தை சொல்லி இறைவனிடம் முறையிட, சம்பந்தரின் வாக்கு மகிமையை காப்பற்ற இறைவன், களப்பாளரின் பழவினையை களைகின்றார். இதன் விளைவாக அந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மகன் பிறக்கிறான். அந்த மகன் தான் பின்னாளில் மெய்கண்டார் என்ற பெயருடன் விளங்கியவரும் சிவஞான போதம் எனும் சைவ சித்தாந்தத்தின் தலையான நூலை எழுதியவரும் ஆவார். சோம குண்டத்திற்கு அருகில் மெய்கண்டார் சன்னதி உள்ளது. இந்த நிகழ்ச்சி, பெருமான் தனது அடியாரின் புகழுக்கு பங்கம் வருவதை பொறுக்க முடியாதவராக இருப்பதை நாம் உணர்கின்றோம். 

இந்த தலத்தில் உள்ள மூன்று குளங்களிலும் நீராடி இறைவனைத் தொழும் அடியார்களின் தொல்வினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் கூறுவது, அவர் வெண்காடு தலத்தின் மீது அருளிய வேறொரு பதிகத்தின் கடைக் காப்பு பாடலில் (3.15.11) கூறுவதை நமக்கு நினைவூட்டுகின்றது. கடைக்காப்பில் ஐயனை தொழுபவர்களின் அல்லலும் அருவினையும் அறுதல் திண்ணம் என உறுதி கூறுகிறார். சம்பந்தரின் இந்த உறுதி தான் சிவபிரானின் மனத்தை மாற்றி அச்சுதக் களப்பாளரின் பழவினையின் தீப்பயனை கருகச் செய்ததோ? அருவினையை, வெண்காட்டனை நோக்கி செய்யும் தொழுகை அறுத்துவிடும் என ஆணையிடும் சம்பந்தரின் வாக்கு எந்நாளும் பொய்க்காது என்பதனை மெய்கண்டாரின் பிறப்பு நிரூபித்துவிட்டது. மேலும் தேவாரப் பாடல்கள், அவை பாடப்பெற்ற காலத்தில் அதிசயங்கள் நிகழ்த்தியது மட்டுமன்றி என்றும் அதிசயங்கள் நிகழ்த்த வல்லவை என்பதையும் நமக்கு, இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது என்று சொன்னால் மிகையாகாது.   

    நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
    செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்
    சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர்
    அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே 

.    
வேய்=மூங்கில்; தோய்வினையார்=மூழ்கி குளிக்கும் செயலை செய்யும் அடியார்கள்; ஒன்றும்=சிறிதும்; தோய்தல்=பீடித்தல். வெண்காட்டு பெருமானை தியானம் செய்து இந்த பாடலை பாடும் அடியார்கள், பிள்ளை வரம் மட்டுமன்றி, தாங்கள் நினைக்கும் வேறு பல கோரிக்கைகளும் நிறைவேற்றப் பெறுவார்கள் என்பதை உள்ள நினவு என்ற தொடர் மூலம் சம்பந்தர் உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்களை தீய சக்திகள் அணுகாது என்றும் ஒருகால் ஏற்கனவே அணுகியிருந்தால் அவை விலகிவிடும் என்பதும் இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.   

பொழிப்புரை:

திருவெண்காடு தலத்தில் உள்ள மூன்று குளங்களிலும் நீராடி வெண்காட்டு பெருமானை தியானிக்கும் அடியார்களை பேய்கள் அணுகாது; ஒருகால் ஏற்கனவே அணுகியிருந்தால் அவை அந்த அடியார்களை விட்டு நீங்கி விடும்; மேலும் அத்தகைய அடியார்கள் பிள்ளை வரம் பெறுவது மட்டுமன்றி, தங்களது விருப்பங்கள் ஈடேறப் பெறுவார்கள். இதற்கு எந்த விதமான ஐயமும் எவரும் கொள்ள வேண்டாம்; மூங்கில் போன்று அழகான தோள்களை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள இறைவன் உறையும் திருவெண்காடு தலத்தில் உள்ள மூன்று குளங்களிலும் தோய்ந்து நீராடும் அடியார்களை தீவினைகள் பீடிக்காமல் விட்டுவிலகும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com