121. அரனை உள்குவீர் - பாடல் 2

திறமையும் வல்லமையும்
121. அரனை உள்குவீர் - பாடல் 2


பாடல் 2:

    காண உள்குவீர்
    வேணு நற்புரத்
    தாணுவின் கழல் 
    பேணி உய்ம்மினே
    

விளக்கம்:

ஸ்தாணு என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் தாணு. நிலையாக நிற்பவர் என்று பொருள். பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் பெருமான் ஒருவன் தானே அழியாமல் நிலைத்து நிற்கின்றார். பிறவியின் நோக்கம், நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு வீடுபேறு நிலை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்து இருப்பது தானே. உயிரும் அதனையே விரும்புகின்றது அல்லவா. பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியுள்ள பிரமன் திருமால் மற்றுமுள்ள தேவர்கள் எவ்வாறு தாங்கள் மீள முடியாத சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை அடுத்தவருக்கு அளிக்க முடியும். எனவே தான் பிறப்பிறப்புச் சுழற்சிக்கு அப்பாற்பட்ட சிவபெருமானை வழிபட வேண்டும் என்று தேவார முதலிகள் உணர்த்துகின்றனர். மேலும் பிரமன் மற்றும் திருமாலின் நிலையற்ற தன்மையும் பல தேவாரப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அப்பர் பிரான் அருளிய பாடலை (5.100.3) இங்கே நினைவு கூர்வது பொருத்தம்.

    நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
    ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
    ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
    ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

நொந்தினார் என்றும் நுங்கினார் எனும் இருவகையான பாட பேதங்கள் உள்ளன. நொந்தினார்=அழிந்தார்கள்: பிரளய காலத்தில் பிரமன், திருமால், குபேரன், யமன் போன்றவர்கள் அழிய, கூட்டம் கூட்டமாக இந்திரர்களும் உடன் அழிந்தாலும், சிவபிரான் அழியாமல் இருப்பதுடன், தனது மனைவியாகிய பார்வதியுடன் விளையாடுவதாக ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியின் இருபத்தாறாவது பாடலில் கூறுகின்றார். விரிஞ்சி=பிரமன்; பஞ்சத்வம்=உடலில் உள்ள ஐந்து பூதங்களும் தனித்தனியாக பிரிந்து போகும் நிலை, அதாவது மரணம்: வ்ரஜதி=அடைதல்; விரதிம்=முடிவு: ஆப்னோதி=அடைதல்; கீனாச=இயமன்; பஜதி=அடைதல்; தனத=செல்வங்களை உடைய குபேரன்; நிதனம்=மரணம்; யாதி=அடைதல்; மாஹேந்த்ரீ விததி அபி=கூட்டம் கூட்டமாக இந்திரர்கள்; ஸம்மீலித=கண்கள் மூடும் பெருந்தூக்கம்; த்ருசா=அழிதல்; ஸம்ஹாரே=பிரளய காலத்தில்; சதி=பார்வதியின் ஒரு பெயர்; விஹரதி=விளையாடுதல்;

    விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
    விநாஸம் கீநாஸோ பஜதி தனதோ யாதி நிதநம்
    விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா
    மஹா ஸம்ஹாரேஸ்மின் விஹரதி சதி த்வத்பதி ரஸௌ

மனித வாழ்க்கையை ஒப்பிடுகையில் தேவர்கள் நீண்ட ஆயுள் பெற்றவர்கள். ஆனாலும் அவர்களுக்கும் முடிவு என்பதுண்டு, அவர்களின் தலைவனாக விளங்கும் இந்திரன், பிரமன், திருமால் ஆகியோரும் பிறப்பு இறப்புச் சுழற்சியில் உழல்பவர்கள் தாம். ஒவ்வொருவரின் வாழ்நாள் தான் வேறுபடும். ஆனால் நிலையாமை என்ற தகுதியின் அடிப்படையில் அனைவரும் சமமே. இதனை விளக்கும் பாடல் தான் அப்பர் பிரான் அருளிய இந்த பாடல். 

இந்த பாடல் கால நியதியை கணக்கிட்டு, அந்த நியதியைக் கடந்து நிற்கும் ஈசனின் மேலான தன்மையை உணர்த்துகின்றது. மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஓர் நாள். தேவர்களின் வாழ்நாளை விட, அவர்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரனின் வாழ்நாளை விடவும், மிகவும் அதிகமானது பிரமனின் வாழ்நாள். நான்கு யுகங்களின் மொத்த ஆண்டுகள் 43,20,000 மனித ஆண்டுகள் (கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள்: திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகள்: துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள்: கலியுகம் 4,32,000 ஆண்டுகள்). இந்த நான்கு யுகங்களை சதுர்யுகம் என்று அழைப்பார்கள். இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்தது பிரமனுக்கு ஒரு பகல். அதாவது இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரமனுக்கு ஒரு நாள். இந்த கணக்கினில் பிரமனின் ஆயுள் நூறு வருடங்கள். பிரமனின் ஒரு நாள் பதினான்கு இந்திரர்களின் மொத்த வாழ்நாள் ஆகும். திருமாலின் வாழ்நாள் பிரமனின் வாழ்நாளை விட ஆறு மடங்கு அதிகம் என்பார்கள். அதாவது ஒரு திருமாலின் வாழ்நாளின் முடிவினில் ஆறாவது பிரமனின் வாழ்நாளும், 14000வது இந்திரனின் வாழ்நாளும் முடிவடையும். எனவே பிரமனும் திருமாலும் இறந்த நாள் என்றால் அனைத்து உயிர்களும் இறந்த நாள் என்று கொள்ளலாம். அதனால் தான் ஆறு கோடி, நூறு கோடி என்று திருமாலையும் பிரமனையும் குறிப்பிடும் அப்பர் பிரான் கங்கைக் கரையின் மணல்களின் எண்ணிக்கையை விட அதிகமான இந்திரர்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கோடி என்ற சொல் கணக்கிலாத எண்ணிக்கையை குறிப்பிடும் விதத்தில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. நூறு கோடி பிரமர்கள் பிறந்து அழிந்த பின்னரும், ஆறு கோடி நாராயணர்கள் பிறந்து அழிந்த பின்னரும், கங்கையாற்றின் இரு கரைகளிலும் உள்ள மணல்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமான இந்திரர்கள் பிறந்து அழிந்த பின்னரும், முடிவற்றவனாகத் திகழ்பவன் சிவபெருமான ஒருவனே என்பது தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்தாகும். 

அரனை உள்குவீர் என்று பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை நினைக்கத் தூண்டும் சம்பந்தர், இந்த பாடலில் பெருமானின் திருவுருவத்தை கண்டு களிக்குமாறு நம்மை தூண்டுகின்றார். பெருமானை நினைத்த பின்னர் அவனை நேரில் சென்று காண்பது தானே அடுத்த படி. வேணு நற்புரம் என்ற தொடரை, நல் வேணுபுரம் என்று மாற்றி அமைத்து பொருள் காண வேண்டும். நன்மைகளைத் தரும் வேணுபுரம் தலம் என்று பொருள். பேணுதல்=பெருமான் விரும்பும் செயல்களை செய்து பெருமானை இடைவிடாது வழிபடுதல்; பெருமானின் புகழினை பாடுவதும் அவனே நிலையான மெய்ப்பொருள் என்பதை உணர்ந்து அவனை வழிபடுவதும் பெருமானுக்கு உகந்த செயல்களாகும். பெருமானைப் புகழ்ந்து சாமகானம் பாடியதால் தானே, கயிலாய மலையின் கீழே அமுக்குண்டு கதறிய இராவணன், அந்த இடரிலிருந்து விடுபட்டதும் அன்றி பல நன்மைகளும் பெற்றான். பெருமானை பேணுவதால் நாம் அடையும் நன்மை யாது என்பதை பெருமானின் வாய்மொழியாக பெரிய புராணத்தில் வரும் இரண்டு பாடல்களை நாம் இங்கே காண்போம்.  

திருவாரூர் திருக்கோயில் தேவாசிரிய மண்டபத்தில் குழுமியிருந்த அடியார்களை கண்ட சுந்தரர் அந்த அடியார்களுக்கு அடியானாக தான் மாறும் நாள் எந்நாளோ என்ற கவலையுடன் திருக்கோயிலின் உள்ளே நுழைந்தார். அப்போது அவரின் எதிரே தோன்றிய தியாகேசர், அடியார்களின் பெருமையினை சுந்தரருக்கு எடுத்துரைத்து அவர்களைச் சென்று அடைவாயாக என்று சுந்தரரை பணித்தார். இறைவனின் வாய்மொழியாக கூறப்பட்ட கருத்து அடங்கிய பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அடியார்களின் பெருமைக்கு அவர்களது பெருமையே ஒப்பாகும் என்றும் இடைவிடாது இறைவனை நினைத்து போற்றுவதால் இறைவனைப் பெற்றவர்கள் என்றும், இறைவனோடு ஒன்றுபட்டு நிற்கும் நிலையினால் உலகையும் வெல்லும் தன்மை உடையவர்கள் என்றும் எத்தகைய துன்பங்களும் இல்லாதவர்களாய் இறைவனிடத்தில் கொண்டுள்ள அன்பினால் இன்பமே உடையவர்களாய், இம்மை மற்றும் மறுமையைக் கடந்தவர்கள் என்றும் அடியார்களின் தன்மையை இறைவன் சுந்தரருக்கு உணர்த்தியதை குறிப்பிடும் பாடல் இது. இறைவனைப் பேணுவதால் நாம் அவரைச் சென்று அடையலாம் என்று நமக்கு உணர்த்தும் பாடல் இது.

    பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்
    ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்று இல்லார் 
    அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார்
    இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று

பெருமான் வீற்றிருந்து அருளும் திருக்கயிலாய மலையின் மீது காலால் நடப்பது தகாது என்று கருதிய காரைக்கால் அம்மையார் தலையினால் நடந்து வந்ததைக் கண்ட உமையன்னை இவ்வாறு தலையினால் நடந்து வரும் அம்மை இறைவன் பால் வைத்திருக்கும் அன்பின் தன்மை மிகவும் வியக்கத்தக்கது என்று, இறைவனிடம் கூறினார். அம்மையின் சொற்களைச் செவியுற்ற இறைவன், அவ்வாறு எலும்புக்கூடாக மலையேறி வரும் பெண்மணி தன்னை (இறைவனை) பேணும் பெண்மணி என்று இறைவன், காரைக்கால் அம்மையாரை பார்வதி தேவியிடம் அறிமுகம் செய்கின்றார். காரைக்கால் அம்மையார் பெற்றிருந்த பேய் வடிவத்தினை பெருமை சேர் வடிவம் என்று இறைவன் குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது. 

    வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்
    பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
    அருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
    ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்

இவ்வாறு பெருமானைப் பேணி போற்றும் அடியார்கள் பெருமானை முழுதும் உணர்ந்து வாழ்வார்கள். அத்தகையோருடன் பெருமான் ஒட்டி வாழ்வான் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பதிகப்பாடல் (6.25.1) நமது நினைவுக்கு வருகின்றது. உயிராவணம்=உயிராத வண்ணம்; உயிர்தல் என்ற சொல் மூச்சு விடுதல் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. உற்று நோக்கி=தியானத்தில் ஆழ்ந்து மனதினில் உருவகப்படுத்திய இறைவனின் உருவத்தினை நினைந்து; கிழி=திரைச்சீலை, துணி; உயிர் ஆவணம் செய்தல்=உயிரினை ஒப்படைத்தல் ஆவணம்=சாசனம்;. ஆவணம் என்பதற்கு ஓலை என்ற பொருள் கொண்டு அடிமை ஓலை எழுதி, தன்னை அடிமையாக இறைவனுக்கு ஒப்படைத்தல் என்றும் கூறுவார்கள். அயிராவணம்=கயிலை மலையில் உள்ள யானை, இரண்டாயிரம் தந்தங்களை உடையது. அயிராவணம் (நான்காவது அடியில் உள்ள சொல்)=ஐ இரா வண்ணம், ஐயம் ஏதும் இல்லாத வண்ணம் உள்ள உண்மையான மெய்ப்பொருள்.

    உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின்
         உரு எழுதி
    உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால் உணரப்படுவாரோடு
         ஒட்டி வாழ்தி  
    அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி அமரர் நாடு ஆளாதே
         ஆரூர் ஆண்ட
    அயிராவணமே என் அம்மானே நின் அருட்கண்ணால்
         நோக்காதார் அல்லாதாரே 

ஒட்டி வாழ்தல்=உடனாகி இருத்தல்; இந்தப் பாடலில், இறைவன் யாரோடு ஒட்டி வாழ்வான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானித்து, அவனது உருவத்தை நமது மனதிலிருந்து நீங்காத வண்ணம் எழுதி வைத்து, நாம் அவனுக்கு பூரண அடிமை என்ற நிலையை அவனுக்கு உணர்த்தினால், அவன் அத்தகைய அடியார்களுடன் இணைந்து வாழ்வான் என்று இங்கே விளக்குகின்றார். அடியார்கள் மண்ணில் வாழ்ந்த போதே அவர்களுடன் ஒட்டி வாழும் சிவபெருமான், அத்தகைய அடியார்கள் தங்களது உடலைத் துறந்த பின்னர், அவர்களுக்கு முக்தி அளித்து அவர்களை விட்டுப் பிரியாது இணைந்து வாழ்வான் என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு ஒட்டிட்ட பண்பினாராய் வாழ்பவர்களை சிவ கணத்தவர்களாக சம்பந்தர் தனது மயிலைப் பதிகத்தின் முதல் பாடலில் கருதுகின்றார்.  

    மட்டிட்ட புன்னை அம் கானல் மட மயிலைக்
    கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு 
    அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

எவரோடு இறைவன் ஒட்டி வாழ்வான் என்று முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், கடைசி அடியில், இறைவனை உணராதவர்கள், அவனது இன்பத்தைப் பெறுவதற்கு உரியவர்கள் அல்லர் என்று கூறுகின்றார். அருட்கண் என்று சிவபெருமான் நமக்கு அருளிய கண் என்று இங்கே கூறப்படுகின்றது. 
 
அயிராவணம் என்று இரண்டாயிரம் தந்தங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த யானை கயிலையில் இருந்தாலும், அதனை வாகனமாகக் கொள்ளாமல், எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு, தேவர்கள் உலகத்தினை ஆளும் திறமையும் வல்லமையும் கொண்டிருந்தாலும், தேவலோகத்தை ஆளாமல், அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரூர் நகரினை ஆளும் இறைவனே; தங்களது உயிர் மூச்சினை அடக்கி, உன்னை தியானித்து, உனது உருவத்தைத் தங்களது உள்ளத்தில் என்றும் அழியாத வண்ணம் பதித்து, உனக்கு அடிமையாகத் தங்களைக் கருதி, அந்த அடிமை சாசனத்தை உனது கையில் ஒப்படைக்கும் அடியார்களுடன், நீ இணைந்து வாழ்கின்றாய். எவருக்கும் எந்த ஐயமும் ஏற்படாமல் உண்மையான மெய்ப்பொருளாக இருப்பவனே, உன்னால் வழங்கப்பட்ட கண்கள் கொண்டு உன்னைக் காணாதவர்கள், உனது அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்லர் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை. இந்த பாடலின் மூலம் பெருமானின் திருவுருவத்தை நேரில் கண்டு வழிபடுவதன் சிறப்பு உணர்த்தப் படுகின்றது. 
.    
பொழிப்புரை:

பெருமானின் திருவுருவத்தினை நேரில் காண வேண்டும் என்று விரும்பும் உலகத்தவரே, நீங்கள் பல நன்மைகளை அடியார்களுக்கு புரியும் வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரம் சென்று, ஆங்குள்ள இறைவனை, என்றும் அழியாமல் நிலையாக இருக்கும் இறைவனின் திருவடிகளை போற்றி, இறைவனுக்கு விருப்பமான செயல்களை செய்து வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com