119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 2

அஞ்சிய இந்திரன்
119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 2
Published on
Updated on
2 min read


பாடல் 2: 

    தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணும் மது காணும் அளவில்
    கோணு நுதல் நீள் நயனி கோணில் பிடி மாணி மது நாணும் வகையே
    ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர் கோன்
    வேணு வினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே

விளக்கம்:

இந்த பாடலில் உணர்த்தப்படும் பெயராகிய வேணுபுரத்தின் இரண்டாவது எழுத்து ணு, அல்லது அந்த வகையினைச் சார்ந்த உயிர்மெய் எழுத்து பாடலின் ஒவ்வொரு எழுத்திலும் இரண்டாவது சீராக வருவதை நாம் காணலாம். சூரபதுமனுக்கு அஞ்சிய இந்திரன், இந்த தலத்தில் இருந்த மூங்கில் (வேணு=மூங்கில்) மறைந்திருந்து இறைவனை வழிபாடு செய்த தலம் என்பதால் வேணுபுரம் என்ற பெயர் வந்தது. இந்த பாடலில் விநாயகர் தோற்றமும் உணர்த்தப் படுகின்றது.  

தாணுமிகு வாணிசைகொ டாணுவியர் பேணுமது காணுமளவிற்
கோணுநுத னீணயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொண் மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே

தாணு மிகு ஆண் இசை கொடு என்ற தொடரை முதல் அடியில் கடையில் மாற்றி வைத்து பொருத்தி பொருள் காண வேண்டும்; ஆணு=அன்பு கொண்டு பெருமானை வழிபட்ட தேவர்கள்; ஸ்தாணு என்றால் நிலையாக உயர்ந்த கம்பம் என்று பொருள். ஸ்தாணு என்ற வடமொழிச் சொல் இங்கே தாணு என்று மாற்றப்பட்டுள்ளது. கஜமுகாசுரனின் தொல்லைக்கு ஆளான தேவர்கள் நிலையான தூணாக நின்ற பெருமானை பற்றுக்கோடாக கருதினார்கள் என்ற நயம் வெளிப்படும் வண்ணம் தாணு என்றார் பெயரினை, சம்பந்தர் பயன்படுத்தி உள்ளது உணர்ந்து ரசிக்கத் தக்கது. வியர்=சினம்; மது=கஜமுகாசுரன்; மாகதர் எனப்படும் முனிவருக்கும் ஒரு அசுரப் பெண்ணுக்கும் பிறந்தைமையால் மது என்ற பெயர் இந்த அசுரனுக்கு வந்தது .காணும் அளவில்=கண்டு, அறிந்து; மிகு=வலிமை மிகுந்து; ஆண் இசை கொடு=ஆண் யானையின் வடிவத்தைக் கண்டு, அந்த உருவத்துடன் இசைந்து நின்ற; கோணு நுதல்=வளைந்த நெற்றி; நீள் நயனி=நீண்ட கண்களை உடைய உமை அன்னை;  கோணில்=குற்றம் இல்லாத வண்ணம்; பிடி=பெண் யானை; மாண்பு=பெருமை, மாண்பினை உடையவள் மாணி; மாணி என்ற சொல் பெருமானை குறிப்பதற்கும் இந்த பாடலின் மூன்றாவது அடியில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.           

ஒரு முறை தேவியுடன் நந்தவனம் சென்ற பரமசிவன் ஆங்கிருந்த சித்திர மண்டபத்தில் பொறிக்கப்பட்டிருந்த பிரணவ எழுத்தினைக் கண்டார். அவர் கண்ட மாத்திரத்தில் அந்த எழுத்திலிருந்து ஒரு ஆண் யானையும் ஒரு பெண் யானையும் தோன்றின. நல்ல வலிமையுடன் திகழ்ந்த அந்த இரண்டு யானைகளும் ஒன்றுடன் ஒன்று அன்புடன் விளையாடியதை இறைவனும் இறைவியும் காண, விநாயக கடவுள் தோன்றினார் என்று புராணம் கூறுகின்றது. இந்த நிகழ்ச்சியை, சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். கஜமுக அசுரனுக்கு பயந்து தேவர்கள் அனைவரும் தினமும் காலையில் அந்த அரக்கனை ,வணங்கி அவனது கட்டளைகளை நிறைவேற்றினர். அவ்வாறு வணங்கிய தேவர்கள், தங்களது கைவிரல்களை மடக்கிக் கொண்டு தங்களது முன் நெற்றியில் குட்டிக் கொண்டும், தோப்புக் கரணம் இட்டும் அரக்கனை தினமும் வணங்கினார்கள் என்றும் கந்த புராணம் கூறுகின்றது. அவ்வாறு பேடிகளாகத் திகழ்ந்த தேவர்களின் நடுவே ஆணின் இயல்பு கொண்டவனாக விநாயகர் திகழ்ந்தார் என்று நயத்துடன் சம்பந்தர் கூறுகின்றார். ஏண்=வலிமை; கரி=யானை; பூண்=தீய செயல்கள்; சேண்= புகழ் மிகுந்த, உயரத்தில் இருந்த வானுலகம் என்றும் பொருள் கொள்ளலாம்;

பொதுவாக, மலங்களுக்கு உவமையாக கருமை நிறம் கொண்ட யானையை திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுவதால், அத்தகைய யானையின் இயல்புக்கு மாறுபட்ட யானை உருவங்கள், பெருமானும் பிராட்டியும் இணைந்த உருவங்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு, இந்த பாடலில் முற்றமற்ற பெண் யானை என்பதை குறிப்பிடும் கோணில் பிடி என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.    ,    

பொழிப்புரை:

தன்னிடம் மிகுந்த அன்பு கொண்டு தேவர்கள் வழிபட்டதைக் கண்ட பெருமான், தாணு என்று அழைக்கப்படும் பெருமான், கஜமுகன் என்ற அரக்கன் தேவர்கள் மீது கொண்டிருந்த சினத்தின் விளைவாக தேவர்கள் அடைந்த துன்பத்தினைக் கொண்டு அவர்கள் பால் கருணை கொண்டு அவர்களது துன்பத்தினை தீர்க்க திருவுள்ளம் கொண்டார். பிரணவ வடிவம் பொறிக்கப்பட்டிருந்த சித்திரத்தில் இருந்து எழுந்த வலிமை மிகுந்த ஆண் யானையைக் கண்ட பெருமான், அதன் உருவத்துடன் இணைந்து நிற்க, வளைந்த நெற்றியும் நீண்ட கண்களும் கொண்டு பெருமை உடையவளாகத் திகழும்  உமையன்னை குற்றமிலாத வகையில் தோன்றிய பெண் யானையைக் கண்டு அந்த உருவத்துடன் இணைய, விநாயக பெருமான் தோன்றினார்; போரில் தோற்று கஜமுகாசுரன் நாணம் அடையும் வண்ணமும், வல்லமை மிகுந்த கஜமுகன் செய்து வந்த தீய செயல்கள் அழியும் வண்ணமும், கஜமுகனை அழித்தவனும் ஆண்மை இயல்பு கொண்டவனும் ஆகிய விநாயகப் பெருமானை தோற்றுவித்த பெருமையை உடைய சிவபெருமானது பதி சீர்காழியாகும். இந்த தலம், புகழ் மிகுந்த தேவர்களின் தலைவனாகிய இந்திரன், தான் ஒளிந்து கொண்டிருந்த மூங்கிலின் உச்சியில் ஏறி, தனது நகரமாகிய அமராவதியை காணும் பொருட்டு நட்ட மூங்கில் மரத்தினை உடையதால் வேணுபுரம் என்ற பெயர் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com