149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 4

மூன்றொடு ஏழும்
149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 4


பாடல் 4:

    ஒன்றொன்றொடொன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும்             உடனாய்
    அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற
    அரனூர்
    குன்று ஒன்றொடொன்று குலை ஒன்றொடொன்று கொடி ஒன்றொடொன்று          குழுமிச்
    சென்றொன்றொடொன்று செறிவால் நிறைந்த திருமுல்லைவாயில் இதுவே

விளக்கம்:

ஒன்றொன்றொடொன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் என்ற தொடர் மூலம் இருபத்தைந்து என்ற எண்ணினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாடலின்  முதல் தொடரில், ஒன்றொன்றொடொன்றும் என்ற தொடரில் ஒன்று என்ற எண் மூன்று முறை வருவதை நாம் உணரலாம். இத்துடன் ஒரு நான்கு, ஒரு ஐந்து, இரு மூன்று (ஆறு) ஏழு ஆகிய எண்களைக் கூட்டினால் வருகின்ற எண் இருபத்தைந்து ஆகும். இருபத்து நான்கு எனப்படும் இந்த எண், ஆன்மாவிற்கு மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டு வினைகளைக் கழித்துக் கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஆன்ம தத்துவங்களை குறிக்கின்றது. இந்த தத்துவங்களுடனும்  ஆன்மாவுடனும் இறைவன் இணைந்திருக்கும் செய்தி பாடலின் முதல் அடியில் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஒன்றி இருக்கும் இறைவன், இவற்றிலிருந்து வேறாக இருக்கும் தன்மையும், மறைமுகமாக, உணர்த்தப் படுகின்றது. ஆகாயம், காற்று, தீ, நீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்கள், கண் மூக்கு, வாய், செவி மெய் ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், வாக்கு, கால், கை, எருவாய் மற்றும் கருவாய் எனப்படும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஒலி ஒளி ஊறு நாற்றம் சுவை ஆகிய தன்மாத்திரைகள் ஐந்தும் சித்தம் புத்தி அகங்காரம் மனம் எனப்படும் நான்கு அந்தக்கரணங்கள் என்பவையே இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள். இந்த ஆன்ம தத்துவங்களுடன் ஆன்மாவையும் சேர்த்து இருபத்தைந்து பொருட்களுடன் உடனாக இருப்பவன் இறைவன் என்று குறிப்பிட்டு, அவற்றிலிருந்து வேறாக இருப்பவன் என்பதை சொல்லாமல் சொல்லி விளக்குகின்றார். புருடன் என்றால் ஆளும் உரிமையுடையவன் என்று பொருள். ஆன்ம தத்துவங்கள் அனைத்தையும் ஆளுமை கொண்டு தனது தேவைக்கு ஏற்ப, ஆன்மா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; ஆனால் ஒரு சில ஆன்மாக்களைத் தவிர்த்து மற்ற ஆன்மாக்கள் அனைத்தும் தத்துவங்களுக்கு அடிமைகளாக செயல்படுவதை நாம் காண்கின்றோம்.  
   
இவ்வாறு இருபத்தைந்து பொருட்களையும் கடந்து நிற்கும் பெருமான், என்று சம்பந்தர் உணர்த்துவது, நமக்கு அப்பர் பிரான் அருளிய திருவாரூர் பதிகத்தின் கடைப் பாடலை (4.4.10) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான் பெருமானை ஐயஞ்சின் அப்புறத்தான் என்று குறிப்பிடுகின்றார். ஐயஞ்சின் அப்புறத்தான் என்பதற்கு இருபத்தைந்தைக் கடந்தவன் என்று பொருள். இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களுடன் புருடன் எனப்படும் வித்தியா தத்துவத்தையும் கடந்தவன் இறைவன் என்று பொருள் பலரால் கூறப்படுகின்றது. பை=நச்சுப்பை: சுடர் விடுதல்=தனது தலையில் வைத்துள்ள மாணிக்கக் கல்லால் ஒளி மிளிரச் செய்யும் பாம்பு: அம் சுடர்=அழகிய மாணிக்கச் சுடர்: நாகப் பள்ளி கொள்வான்=நாகத்தை படுக்கையாக உடைய திருமால்:

    பையம் சுடர் விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத்தானும்
    கையஞ்சு நான்கு உடையானைக் கால் விரலால் அடர்த்தானும்
    பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கு அருள் செய்யும்
    ஐ அஞ்சின் அப்புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே  

ஐயஞ்சின் அப்புறத்தான் என்பதற்கு சுவையான விளக்கம் தருமபுர ஆதீனத்து வலைத்தளத்தில் காணப்படுகின்றது. இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களுக்கு அப்பாற்பட்டவன் திருவாரூர் அம்மான் என்று கூறப்படுகின்றது. திருவாரூர் தியாகேச மூர்த்தம் சோமாஸ்கந்த வடிவம் போல் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த வடிவம் சோமாஸ்கந்த வடிவத்தினினும் மாறுபட்டது என்று அவர் விளக்கம் கூறுகின்றார். இங்கே உள்ள தியாகேச மூர்த்தம், இந்திரனிடமிருந்து முசுகுந்த மன்னன் பெற்றது என்பதை நாம் அறிவோம். இந்திரனுக்கு இந்த மூர்த்தம் எவ்வாறு கிடைத்தது. திருமால் தனது உள்ளத்தில் தியாகேசரின் உருவத்தை நிலைநிறுத்தி வழிபட்டு வந்தார். தியாகேசரும் திருமாலின் மூச்சுக் காற்றின் சலனத்திற்கு ஏற்ப நடமாடினார் என்று கூறுவார்கள். எனவே திருமால் தனது மனதினில் நிலைநிறுத்திய இந்த மூர்த்தம், சிவபெருமானின் முகங்களிலிருந்து தோன்றிய மூர்த்தத்திலிருந்து மாறுபட்டது தானே. ஒருமுறை இந்திரன் தான் வழிபடுவதற்காக இந்த மூர்த்தத்தை திருமாலிடம் வேண்ட, திருமாலும் அவனுக்கு அளித்தார். அன்று முதல் இந்த மூர்த்தம் இந்திரனால் வழிபடப்பட்டு வந்தது.  பின்னர் முசுகுந்த மன்னன் இதனை திருவாரூருக்கு கொண்டு வந்தார். இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களும் சிவபிரானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை. ஈசான முகத்திலிருந்து தோன்றிய மூர்த்தங்கள், சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திருபுராரி (திருபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமை மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜ சம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும்.

அன்றின்றொடென்றும்=அன்றும் இன்றும் என்றும்; மேற்குறிப்பிட்டவாறு இறைவன் இருபத்தைந்து பொருட்களிலிருந்தும் வேறாக இருப்பதை உணராத பலர் ஆன்மாவையே பதி என்று நினைத்து மயங்குகின்றனர் என்று சம்பந்தர் குறிப்பிடுவதாக பெரியோர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் பெருமானின் தன்மையை சரியாக உணராதவர்கள்  என்பதை குறிப்பிடும் வகையில், அவர்கள் அறியாத வண்ணம் நிற்கும் பெருமான் என்று  சம்பந்தர் இரண்டாவது அடியில் குறிப்பிடுவதை நாம் உணரலாம். குன்று ஒன்றொடொன்று= குன்றுகள் ஒன்றுக்கொண்டு இணைவது போன்று உயர்ந்த மாட வீடுகள் ஒன்றுக்கொன்று அருகினில் உள்ள தலம் என்று தலத்தின் செழுமை உணர்த்தப் படுகின்றது. தலத்தின் நீர்வளம் குலைகளும் கொடிகளும் ஒன்றுடன் ஒன்று நெருங்கி இருக்கும் நிலையை உணர்த்துகின்றன.       
      
பொழிப்புரை:

ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கினோடு புருட தத்துவத்துடன் உடனாக இருந்து இயக்கும் பெருமான், இந்த தத்துவங்களிலிருந்து வேறாகவும் விளங்குகின்றான்.  ஆனால்  இந்த உண்மையை அன்றும் இன்றும் என்றும் அறியாமல் பலரும் இருக்கின்றனர்.  இவ்வாறு பலரும் உணர்ந்து கொள்ளமுடியாத தன்மையுடன் இருக்கும் சிவபெருமான் திருமுல்லைவாயில் தலத்தில் உறைகின்றான். குன்றுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தது போன்று உயர்ந்த மாடங்கள் கொண்டுள்ள வீடுகள் நெருக்கமாக இருந்து தலத்தின் செல்வச்செழிப்பினை பறை சாற்ற, குலைகுலையாக காய்கள் தொங்கும் தென்னை மற்றும் கமுகு மரங்களும் கொடிகளும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு தலத்தின் நீர்வளத்தைப் பறை சாற்ற அழகுடன் விளங்கும் தலம் திருமுல்லைவாயிலாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com