122. கல்லால் நீழல் - பாடல் 7

சிவபெருமானின் அடியார்
122. கல்லால் நீழல் - பாடல் 7

பாடல் 7:

    பெண் ஆணாய
    விண்ணோர் கோவை
    நண்ணாதாரை
    எண்ணோம் நாமே

விளக்கம்:

கோ=தலைவன்; நண்ணுதல்=நெருங்குதல்; மாதொருபாகனாக விளங்கும் தன்மை பெண் ஆணாய என்ற தொடரால் படுகின்றது. பெருமானை நினைக்காத மாந்தரை நாம் மனதினாலும் கருத மாட்டோம், அதவாது பொருட்படுத்த மாட்டோம் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுவது சான்றோர்கள் எவரை மதிப்பார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றது. இந்த பாடலில் சொல்லப்பட்டுள்ள கருத்தினை உடன்பாட்டுத் தொடராக மாற்றினால், பெருமானை மதித்து வழிபடும் அடியார்களை நாம் மதிப்போம் என்பது சம்பந்தரின் கூற்றாக உள்ள நிலையை  நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இந்த கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில் விடையளிக்கும் அப்பர் பிரானின் பாடலை நாம் இங்கே காண்போம். பெருமானைப் போற்றும் அடியார்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மட்டுமே தான் போற்றும் கடவுளர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் (6.95.10) கூறுகின்றார். சங்க நிதி, பதுமநிதி=குபேரனிடம் இருக்கும் நவநிதிகளில் சிறந்த இரண்டு நிதிக் குவியல்கள் 

    சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத்
        தருவரேனும்
    மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு
        ஏகாந்தர் அல்லார் ஆகில்
    அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்று
         உழலும்   புலையரேனும்
    கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம்
         வணங்கும்  கடவுளாரே

இந்த பாடலில், மனிதர்களை சிவபெருமானின் அடியார், சிவபெருமானின் அடியார் அல்லாதார் என்றிரு வகையாக பிரித்து, அவர்களைத் தான் எவ்வாறு நடத்துவேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். உலகத்தவரின் மதிப்பீட்டிற்கு மிகவும் வேறுபாடான நிலையினை அப்பர் பிரான் கொண்டுள்ள தன்மையை நாம் இங்கே காணலாம். இறைவன் விருப்பமுடன் நீராடுவதற்கு ஐந்து வகையான பொருட்களை அளிக்கும் பசு, தெய்வத் தன்மை வாய்ந்ததாக இந்து மதத்தைச் சார்ந்தவர்களால் கருதப்படுகின்றது. எனவே, பசுவின் தோலை உரிப்பது விட கொடிய செயல் ஏதும் இல்லை என்று கருதப்பட்டு, அவர்களை புலையர் என்று அழைத்தனர். ஆனால் அப்பர் பெருமானோ, பிறப்பாலும், செய்யும் தொழிலாலும் ஒருவர் இழிந்தவராக மற்றவர்களால் கருதப்பட்டாலும், அவர் சிவபிரானிடம் அன்பு பாராட்டுகின்றார் என்றால், அவரைத் தான் மிகவும் உயர்வாக கருதுவேன் என்று கூறுவது, சிவபிரானிடத்தில், அவரது அடியார்கள் மேல், அப்பர் பிரான் வைத்திருந்த அன்பின் தன்மை புலப்படுகின்றது.

சிவபிரானிடம் அன்பு பாராட்டாத ஒருவர், சங்கநிதி பதுமநிதி எனப்படும் உயர்ந்த செல்வங்களைத் தந்து, அந்த செல்வத்துடன் இந்த நிலவுலகத்தையும் வானுலகத்தையும் ஆளும் உரிமையையும் கொடுத்தாலும், அவரது செல்வத்தையும், மங்கும் புகழினை உடைய அவரையும் நாம் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டோம். உடல் உறுப்புகள் எல்லாம் அழுகி குறையும் தன்மையை விளைவிக்கக் கூடிய தொழுநோயராக இருந்தாலும், பசுவினை உரித்துத் தின்னும் புலையராக இருந்தாலும், அவர் கங்கை நதியைத் தனது தலையில் தரித்து மறைத்த கடவுள் சிவபெருமானுக்கு அன்பராக இருந்தால், அவரை நான் வணங்கும் கடவுளாக மதிப்பேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல் இது., .   

பொழிப்புரை:

பெண்ணாகவும் ஆணாகவும் திகழும் மாதொருபாகனை, தேவர்களின் தலைவனாகிய பெருமானை, தங்களது மனம் மொழி மெய்களால் நெருங்கி வழிபடாத மனிதர்களை நாம் மனதாலும் கருதுவதில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com