122. கல்லால் நீழல் - பாடல் 9
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 06th March 2019 12:00 AM | Last Updated : 06th March 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 9:
பூவினானும்
தாவினானும்
நாவினாலும்
நோவினாரே
விளக்கம்:
தாவினான்=மூவுலகங்களையும் தனது இரண்டு அடியால் தாவி அளந்த திருமால்; நோவினார்=வருந்தினார்; நாவினாலும் நோவினார் என்று சிறப்பு உம்மைத் தொகை பயன்படுத்தப் பட்டு, அவர்கள் இருவரும் உடலாலும் வருந்தினார்கள் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. பூவினான்=தாமரைப் பூவின் மேல் அமரும் பிரமன்; நோ என்ற சொல்லுக்கு இன்மை என்று பொருள் கொண்டு, தங்களது முயற்சியால் இறைவனது திருமுடியையும் திருவடியையும் காண இயலாதவர்களாக இருந்ததுமன்றி, தங்களது நாவினால் இறைவனின் புகழினைப் பாடி வழிபடும் தன்மை அற்றவர்களாக இருந்தனர் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த விளக்கம் நமக்கு அப்பர் பிரான் அருளிய இலிங்க புராண குறுந்தொகையின் (5.95) முதல் ஒன்பது பாடல்களை நினைவூட்டுகின்றது. இந்த பாடல்களில் பெருமானை எவ்வாறெல்லாம் வழிபடவேண்டும் என்பதை குறிப்பிடும் அப்பர் பிரான், அவ்வாறு வழிபடத் தவறியவர்கள் பிரமன் மற்றும் திருமால் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் தங்களது குற்றங்களை நீக்கிக் கொண்டு இறைவனைப் புகழ்ந்து வணங்குவதிலிருந்து தவறியவர்கள் என்று அவர்கள் இருவரையும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொக்கம்=வஞ்சகமான சொற்கள்; ஐயன்=தலைவன்; மெய்யன்=உண்மையே வடிவானவன்; வேதங்களும் பல தேவர்களும், தங்களுக்குளே யார் பெரியவன் என்று வாதம் புரிந்து கொண்டிருந்த திருமால் மற்றும் பிரமனிடம், அவர்கள் இருவரை விடவும் பெரியவன் சிவபெருமான் என்று உணர்த்திய போதும், அதனை ஒப்புக்கொள்ளாமல் ஆணவத்துடன் தாங்களே பெரியவர் என்று தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையே பொய்யும் பொக்கமும் போக்கிலர் என்று அப்பர் பெருமானால் இங்கே உணர்த்தப் படுகின்றது.
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்
அய்யன் வெய்ய அழல் நிற வண்ணனை
மெய்யைக் காணல் உற்றார் அங்கு இருவரே
பொழிப்புரை:
தாமரைப் பூவின் மேல் வீற்றிருக்கும் பிரமனும், நெடியவனாக தனது இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்த திருமாலும், பெருமானின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் ஈடுபட்டு தங்களது உடலினை வருத்திக் கொண்ட போதும் அவர்களால் தங்களது முயற்சியில் வெற்றி பெறமுடியவில்லை. பின்னர் பெருமானின் பெருமையினை உணர்ந்தவர்களாக, தங்களது நாவினை வருத்தி பெருமானை இறைஞ்சி அவனது இலிங்க வடிவத்தினை காணும் பேற்றினை பெற்றார்கள்.