128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 4
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 05th May 2019 12:00 AM | Last Updated : 05th May 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 4:
கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடமாடி குலவும்
பட்ட நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதி தான்
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார்
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே
விளக்கம்:
மட்டு=நறுமணம், தேன் என்று இரண்டு பொருட்களும் இங்கே பொருந்தும்; இட்ட=வைக்கப் பட்ட; தத்தை=கிளி; வட்டணை=வட்ட வடிவமாக ஆடப்படும் ஒருவகை நடனம்; சீர்காழி நகரத்தில் வளரும் கிளிகள் பயில்வது யாது என்பதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சீர்காழி நகரினில் வாழும் சான்றோர்கள் அறுபத்து நான்கு கலைகளையும் நன்கு கற்று தேர்ந்தவர்களாக விளங்குவதால், அத்தகைய சான்றோர்கள் தொடர்ந்து பயில்வதைக் கேட்கும் கிளிகளும் அந்த கலைகளை பயில்வதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம் சீர்காழி நகரில் பண்டைய நாளில் அறுபத்து நான்கு கலைகளைக் கற்று தேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர் என்று உணர்த்துகின்றார். அத்தகைய சான்றோர்கள் கலைகள் பயில்வதை காணும் கிளிகள் அந்த கலைகளைத் தாங்களும் கற்று பயிலும் பெருமையை உடைய சண்பை நகரமே, பெருமான் உறையும் நகரமாகும்.
பொழிப்புரை:
முழவு போன்று வாத்தியங்கள் ஒலிக்க வட்டணை என்று அழைக்கப்படும் நடனத்தை ஆடியபடியே பெருமான், பட்டம் கட்டியது போன்று நெற்றியினில் நறுமணம் வீசும் மலர் மாலைகளை அணிந்துள்ள பார்வதி தேவியுடன் பொருந்தி உறையும் பதி சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். வட்டமான வடிவில் விளங்கும் சந்திரனைத் தொடும் வண்ணம் உயர்ந்த மாட மாளிகைகளை உடைய சீர்காழி நகரத்தில், எப்போதும் உண்மையே பேசுபவர்களாகவும் அறுபத்து நான்கு கலைகளை கற்றவர்களாகவும் சான்றோர்கள் விளங்கினார்கள். அவர்கள் கலைகளை பயில்வதை கவனிக்கும் கிளிகள் தாங்களும் தொடர்ந்து அந்த கலைகளைப் பயிலும் நிலையினை சண்பை நகரில் காணலாம்.