145. பரசு பாணியர் பாடல் - பாடல் 3
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 18th November 2019 12:00 AM | Last Updated : 18th November 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 3:
பவள மேனியர் திகழு நீற்றினர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அழகரா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
விளக்கம்:
பவள மேனியில் வெண்ணீறு பூசியவராக பெருமான் காணப்படுகின்றார் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் என்று அப்பர் பிரான் கூறும் தில்லைப் பதிகத்தின் பாடலை (4.81.4) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. கூத்தபிரானின் திருக்கோலத்தை நமது கண் முன்னே கொண்டுவரும் பாடல். குனித்த=வளைந்த, பனித்த=ஈரமுள்ள, குமிண் சிரிப்பு=இதழ்கள் குவிந்து கூடிய புன்சிரிப்பு, மனித்தப் பிறவி=பெரியோர்களால் வேண்டப்படாத பிறவி; நடராஜப் பெருமானின் அழகிய கோலத்தை ரசித்த அப்பர் பெருமானுக்கு, அந்தக் காட்சியினைக் காண்பதற்காக மனிதப் பிறவி மறுபடியும் வேண்டும் என்று தோன்றுகின்றது போலும்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் பெருமானின் திருக்கோலத்தைக் குறிப்பிடும் அப்பர் பிரான் அந்த திருக்கோலம் எவ்வாறு தனது மனதினில் பதிந்துள்ளது என்றும் கூறுகின்றார். இத்தகைய அழகுடைய சிவபிரானை, கருணை கொண்டு தனது உள்ளத்தில் புகுந்துள்ள சிவபிரானை, நினையாமல் சமண சமயத்தில் பல வருடங்கள் கழித்ததற்கு வருந்தி, தன்னை பாவியேன் என்று அழைப்பதையும் நாம் இங்கே உணரலாம். பாவியாகிய தனது நெஞ்சினில் இவ்வாறு சிவபிரானது திருவுருவம் பதிந்தது ஒரு அதிசயமாக அப்பர் பிரானால் கருதப் படுகின்றது.
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்க முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்கூத்தன் குரைகழலே
பவள நிறத்து மேனியையும் வெண்மை நிறத்து திருநீற்றினையும் இணைத்து இந்த பாடலில் சம்பந்தர் குறிப்பிடுவது போன்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் ஒரு பொது பதிகத்தின் முதல் பாடலாக (4.112.1) அமைந்துள்ளது. வெள்ளி வெண்மை நிறம் கொண்டது. வெண்மை நிறம், புகழ் மற்றும் தூய்மையை குறிப்பிடுகின்றது. தூய்மையே வடிவமாக அமைந்துள்ள இறைவனுடன் இணைந்த பொருட்களை வெள்ளி என்ற சொல்லுடன் இணைத்து அப்பர் பிரான் இந்த பாடலில் இன்பம் காண்கின்றார். குழை=சங்கு: துண்டு=துண்டிக்கப்பட்டது, ஒரு பகுதி. பிரமனின் கபாலம் தசைகள் உலர்ந்ததால் வெண்மை நிறத்துடன் காட்சியளிக்கின்றது.
வெள்ளிக் குழைத் துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு
வெள்ளிப்புரி அன்ன வெண்புரி நூலன் விரிசடை மேல்
வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி வெள்ளென்பு அணிந்து
வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே
தசைகள் உலர்ந்து வெண்மை நிறத்தில் வெண்சங்கின் ஒரு பகுதி போன்று காணப்படும், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியுள்ள சிவபெருமான், முறுக்கின வெள்ளிக் கம்பி போன்று காணப்படும் வெண்மை நிறத்து பூணூலை அணிந்துள்ளான். அவனது விரிந்த சடை மேல், வெள்ளித் தகடு போன்று பிறைச் சந்திரன் அழகாக காட்சி அளிக்கின்றது. வெள்ளை நிறத்தில் உள்ள எலும்புகளை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான் பவளம் போன்று சிவந்த தனது உடலின் மேல் வெண்ணீற்றைப் பூசிய வேதியனாக விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் கருவூர்த்தேவர், பவள மேனியில் தவளம் பூசிய நிலையினை குறிப்பிடுகின்றார். தவளம்=திருநீற்றுப் பொடி மற்றும் வெண்மை நிறம் ஆகிய இரண்டு பொருளைத் தரும் சொல். களபம் என்றால் சந்தனம் என்று பொருள். திருநீற்றினையே சந்தனமாக பெருமான் பூசிக் கொண்டுள்ளார் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. துவளும்=நெளியும்; கலை என்பது இங்கே தோலாடையை குறிக்கும். ஒருபுறம் தோலாடையும் மறுபுறம் நல்ல துகில் ஆடையும் அணிந்துள்ள மாதொரு பாகனின் திருக்கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது.
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடரவம்
துவளுமே கலையும் துகிலுமே ஒரு பால் துடியிடை இடமருங்கு ஒருத்தி
அவளுமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே
பொழிப்புரை:
பவளம் போன்ற சிவந்த மேனியையும் அதன் மேல் வெண்மை நிறத்துடன் திகழும் திருநீற்றினை பூசியவர் பெருமான். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் அழகராக காட்சி கொடுத்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.