139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 2

இறைவன் சிவபிரானிடம்
139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 2

பாடல் 2:

    பணம் கொள் ஆடரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே
    மணம் கொள் மாமயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
    இணங்கிலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட
    அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே

விளக்கம்:

பணம்=பாம்பின் படம்; பயின்று=இடைவிடாது; ஆலும்=நடமாடும்; அணங்கு=தெய்வத்தன்மை  வாய்ந்த பெண், பார்வதி தேவி; இணங்கிலா=ஒன்றுக்கொன்று மாறுபட்டு, மாறுபட்ட இரண்டு குணங்கள் எந்த பொருளிலும் காணப்படுவதில்லை. ஆனால் இறைவன் சிவபிரானிடம் ஒன்றுக்கொன்று மறுதலையாய் விளங்கும் பல குணங்கள் இருப்பதை நாம் காண்கின்றோம். அத்தகைய குணங்களில் ஒன்று தான் சோதியுமாய் இருளுமாய் இருக்கும் நிலை. இந்த நிலையைத் தான் சோதியனே துன்னிருளே என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு இறைவனின் மாறுபட்ட குணங்கள் அனைத்தும் குறிப்பிடப்படுவதால், ஒன்றுக்கொன்று மாறுபட்ட வேதங்கள் என்று குறிப்பிட்டார் போலும்,

இவ்வாறு இரண்டு மாறுபட்ட தன்மைகளை உடையவன் சிவபெருமான் என்று கூறுவது  நமக்கு மணிவாசகரின் பொற்சுண்ணம் பதிகத்தின் கடைப் பாடலை நினைவூட்டும். இன்பம்-துன்பம், மெய்ம்மை-பொய்ம்மை, சோதி-இருள், பாதி-முற்றும், ஆதி-அந்தம், என்று பிரிக்க முடியாத இரட்டைப் பொருட்களாக இறைவன் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது. எனவே வேதம்-பொருள், பந்தம்-வீடு என்பவையும் இரட்டையாக உள்ள மறுதலைப் பொருட்களாக நாம் கொள்ளவேண்டும். வேதம் என்பது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள மெய்ப்பொருளையும் வேள்வி என்பது யாகங்கள் செய்யப் பட வேண்டிய முறைகளையும் குறிக்கும். பந்தம் என்பது உலகப் பொருட்களுடன் நம்மை பிணிக்கும் மலங்கள்; வீடு என்பது நம்மைப் பிணிக்கும் மும்மலங்களின் கட்டிலிருந்து நாம் விடுபட்டு உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்தால் அடையக்கூடியது. எனவே உலகப் பொருட்களுடன் நம்மை பிணைக்கும் பந்தமும், உலகப் பொருட்களிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் நாம் அடையும் வீடுபேறும் மறுதலைப் பொருட்கள் என்பதை நாம் உணர வேண்டும். பந்தங்களிலிருந்து விடுபட்டால் நாம் அடைவது வீடு.  

 வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும்               ஆயினார்க்கு
 சோதியுமாய் இருள் ஆயினார்க்குத் துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு
  பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப் பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு
  ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே

தீர்க்கபாகு முனிவர் வணங்கி வழிபட மகிழ்ந்திருந்த இறைவன் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், பதிகத்தின் இரண்டாவது பாடலில், தலத்து பெண்களும் மறையோர்களும் வழிபட இறைவன் உறைகின்ற நிலையை குறிப்பிட்டு, அவனது திருப்பாதங்களில் நாம் சரணடைய வேண்டும் என்று நம்மை தூண்டுகின்றார்.

பொழிப்புரை:

படமெடுத்து ஆடும் பாம்பின் படம் போன்று புடைத்து அழகாக காணப்படும் மார்பகங்களை உடைய பெண்கள், தொடர்ந்து இறைவனின் புகழினைப் பாட, மயில்கள் அழகாக நடமாடுவதும் நறுமணம் வீசுவதும் ஆகிய சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தில் இறைவன் உறைகின்றான். தம்முள் மாறுபடும் பல செய்திகளை குறிப்பிடும் வேதங்களில் வல்லவர்களும், தேவர்களும் வணங்கித் தொழும் வண்ணம், தெய்வத்தன்மை பொருந்திய பார்வதி அன்னையுடன் இறைவன் மகிழ்ந்து திருமங்கலக்குடி தலத்தில் உறைகின்றான். அவனது திருவடிகளே நாம் சரணடையத் தகுந்த புகலிடமாகும்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com