140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 1

திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்
140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 1

   
பின்னணி:

தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக கோடிகா, கஞ்சனூர், மாங்குடி, திருமங்கலக்குடி ஆகிய தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர் பின்னர் வியலூர் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருந்துதேவன்குடி தலம் சென்றார் என்பதையும் நாம் கீழ்க்கண்ட பெரிய புராணப் பாடலிலிருந்து தெரிந்து கொள்கின்றோம். இந்த தலத்து பதிகத்தின் ஐந்தாவது பாடலில், திருஞானசம்பந்தர், கண்ணார் தரும் உருவாகிய  கடவுள் என்று கூறியதை ஆதாரமாகக் கொண்டு சேக்கிழார், பெருமான் தனது அருள்வேடம் சம்பந்தருக்கு காட்டினர் என்று கூறியுள்ளார் போலும். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது.   

    வெங்கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
    தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி
    அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது
    செங்கண் மாலுக்கு அரியார் தம் திருந்துதேவன்குடி சேர்ந்தார்

இந்த தலம் கும்பகோணத்திலிருந்து ஏழு கி.மீ தூரத்தில் உள்ளது. இந்நாளில் திருவிசைநல்லூர் என்று அழைக்கப்படுகின்றது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து வசதியும் ஆட்டோ வாகன வசதியும் உள்ளது. வியல் என்றால் அகலம் என்று பொருள். இந்த தலத்தில் ஓடும் காவிரி நதி மிகவும் அகன்று ஓடுவதால் வியலூர் என்ற பெயர் வந்தது போலும். சூரியனார் கோயில் தலத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக கும்பகோணம்  செல்லும் வழியில் இந்த தலம் உள்ளது. இறைவனின் பெயர்; சிவயோகிநாதர், யோகாநந்தேசுவரர்; அம்பிகையின் திருநாமம்: சாந்தநாயகி, சௌந்தரநாயகி. ஸ்ரீதர அய்யாவாள், தனது இல்லத்தில், பெருமானின் அருளினால், கங்கை பொங்கி வரச்செய்த தலம். ஜடாயு, அகத்தியர், சூரியன் மற்றும் பிரமன் வழிபட்டு பயன் பெற்ற தலம். நான்கு யுகங்களையும் கடந்த தலம். க்ருத யுகத்தில் புராதனேசுவரர் என்றும், திரேதா யுகத்தில் வில்வாரண்யேசுவரர் என்றும் துவாபர யுகத்தில் யோகாநந்தேசுவரர் என்றும் கலியுகத்தில் சிவயோகி நாதர் என்றும் அழைக்கப்பட்டதாக தல புராணம் கூறுகின்றது. பிரமன், ஆறு சகோதரர்களுடன் ஒரு அந்தணனாக பிறந்து பெருமானை வழிபட்டார் என்றும், ஒரு சிவராத்திரி நன்னாளில் ஏழு பேருக்கும் பெருமான் தரிசனம் அளித்தார் என்றும், அந்த எழுவரும் சோதி வடிவமாக பெருமானுடன் கலந்தனர் என்றும் கூறுவார்கள். இந்த ஏழு பேரும் இறைவனுடன் கலந்ததை உணர்த்தும் வண்ணம் இலிங்கத்தின் உச்சியில் ஏழு முடிக்கற்றைகள் இருப்பதாக கூறுவார்கள். சித்திரை மாதத்து முதல் மூன்று நாட்களில், சூரியனது கிரணங்கள் நேரே கருவறை சென்று அடைவதை, சூரியன் செய்யும் வழிபாடாக கருதுகின்றனர்.  

நான்கு கால பைரவர்கள் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஞானகால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.  ஒரு மனிதனின் வாழ்நாளில் உள்ள நான்கு பகுதிகளிலும் அவனது தேவைக்கு ஏற்ப அருள் புரியும் பைரவர்கள், அவர்கள் அளிக்கும் பயன்களை குறிப்பிடும் வண்ணம் அவரது பெயர்கள் அமைந்துள்ளன என்று கூறிவார்கள். வாழ்க்கையின் முதல் பகுதியில் ஞானம் பெறுவது மனிதனின் குறிக்கோளாகவும் இரண்டாவது பகுதியில் செல்வம் சேர்ப்பது குறிக்கோளாகவும், மூன்றாவது பகுதியில் விரோதிகள் மற்றும் கடன் தொல்லைகள் இல்லாமல் இருப்பது குறிக்கோளாகவும், நான்காவது பகுதியில் யோகங்கள் பெறுவது குறிக்கோளாகவும் இருப்பதை நாம் உணர்கின்றோம். இந்த பைரவர்களைத் தொழுதால் நான்கு விதமான பேறுகளையும்  பெற்று  இன்பமாக வாழலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பைரவர்களின் சன்னதி அருகே, பைரவரை தனது குருவாக கருதும் சனீசுவரர், வெள்ளை ஆடை அணிந்து பால சனீசுவரராக காட்சி தருகின்றார்.  

பாடல் 1:

    குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை அவள் வெருவப்
    பொரு வெம் கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன்
    அரவும் அலை புனலும் இளமதியும் நகு தலையும்
    விரவும் சடை அடிகட்கு இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

குரவம்=குராமலர்; அரிவை=இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களைக் குறிக்கும் சொல். அம்பிகை என்றும் மூப்பு அடையாமல், இளமையும் அழகும் ஒரு சேர வாய்க்கப் பெற்று இருப்பதால் தேவியை அரிவை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொரு= போருக்கு சென்ற; கயாசுரன் என்ற அரக்கன், யானை உடலைக் கொண்டவனாக இருந்தவன், சிவபெருமானுடன் போருக்குச் சென்றான். சிவபெருமானால் அவனுக்கு மரணம் நேரும் என்பதை பிரமதேவன் எடுத்துச் சொல்லியிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல், தேவர்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்திற்காக பெருமான் மீது சினங்கொண்டு, போருக்கு சென்றதையே, பொருவெங்கரி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பட=இறந்து பட உரிவை=தோல்;  

விரவும்=ஒன்றாக கலந்திருத்தல்; ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களும் தங்களுக்குள்ளே பகையும் கொண்டுள்ள பொருட்கள் தங்களது பகையினை மறந்து, பெருமானின் சடையினில்  இருப்பதை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமேது. இந்த பாடலில் சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவாரூர் பாடல் (4.53.2) ஒன்றினை நினைவூட்டுகின்றது. நங்கை=பார்வதி தேவி: மஞ்ஞை=மயில்: வேழம்=யானை: ஆகம்=உடல்: நிமிர்தல் செய்யா=நிமிர்ந்து நில்லாமல் வளைந்து காணப்படும் பிறை கொண்ட சந்திரன்: உரிவை= தோலாடை:

    நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று
     வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து
    பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி
    ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை  கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்கின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று உமையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார்

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (4.10.8), பெருமானது சடையில் உள்ள பொருட்களின் மீது தனது கற்பனையை ஏற்றி, அந்த காட்சியைக் காணும் தலைமாலை நகைக்கின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைகின்றது: சடையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை அசைகின்றது: அந்த கங்கை நீரினில் தோய்ந்த சந்திரன் ஆடுகின்றது. அவரது தலை மாலையில் உள்ள மண்டையோடு தனது பற்களை இழந்த நிலையில் சிரிப்பது போன்று காட்சி அளிக்கின்றது. இந்த காட்சிகளைக் காணும் அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. அந்த கற்பனைக் காட்சி தான் இந்த பாடலில் விளக்கப் படுகின்றது.

    கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்
    கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுறக்
    கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
    கிடந்தது தான் நகு தலை கெடில வாணரே

சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைவதைக் கண்டு, அருகில் இருக்கும் கங்கை நங்கை அச்சம் அடைகின்றாள். அச்சத்தால் அவள் உடல் நெளியவே, அவளது கரிய கூந்தல் ஆடுவதைக் கண்ட பாம்பு, அவளை மயில் என்று தவறாக நினைத்து பயப்படுகின்றது. தங்களது பகைமையை அடக்கி, தன்னையும் பாம்பையும் தனது சடையில் இறைவன் ஏற்றதால் அந்நாள் வரை அச்சமின்றி சடையில் உலாவிய சந்திரன், தனது பகைவனாகிய பாம்பு அசைவதைக் கண்டு, ஒரு கால் பாம்பு தன்னை விழுங்குவதற்காக வருகின்றதோ என்று பயம் கொள்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொள்வதைக் கண்ட, தலை மாலையில் உள்ள மண்டையோடு சிரிக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சூழ்நிலையை உருவாக்கி, அந்த சூழ்நிலையைக் கண்டு நகைக்கும் மண்டையோட்டினை மாலையாக அணிந்துள்ள கெடில வாணரின் தோற்றம் மிகவும் வியப்புக்கு உரியது என்பதே மேற்கண்ட அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்து.        

பொழிப்புரை:

குரா மலரின் நறுமணம் கலந்து கமழ்வதும், இயற்கையாகவே தனக்குள்ள நறுமணத்துடன் இருப்பதும் ஆகிய கூந்தலை உடைய அழகிய பெண்மணியான உமையன்னை அஞ்சும் வண்ணம், தன்னுடன் சினங்கொண்டு போர் புரிய வந்த கயாசுரனின் தோலை உரித்து தனது உடல் மீது போர்த்துக் கொண்டவன் சிவபெருமான். பாம்பு, அலைகள் வீசும் கங்கை நதி மற்றும் பிறைச் சந்திரன் ஆகியவை ஒன்று சேர்ந்து கலந்து உறையும் நிலையினைக் காணும் சடைமுடியில்  உள்ள தலையும் தனது வாயினை திறந்து கொண்டு நகைக்கின்றது. இத்தகைய  காட்சியினை உடைய சடைமுடி கொண்டுள்ள பெருமான் உறையும் இடம் நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com