150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 4

அனைவரிலும் உயர்ந்தவன்
150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 4
Published on
Updated on
1 min read

பாடல் 4:

மாணி தன்னுயிர் மதித்து உண வந்த அக்காலனை உதை செய்தார்
பேணி உள்கு மெய்யடியவர் பெருந்துயர்ப் பிணக்கு அறுத்து அருள் செய்வார்
வேணி வெண்பிறை உடையவர் வியன் புகழ்ச் சிரபுரத்து அமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே   

விளக்கம்:

மாணி=பிரும்மச்சாரி சிறுவன் மார்க்கண்டேயர்; இயமன் மார்க்கண்டேயரின் உயிரினை மதித்ததாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சிறுவயதிலிருந்தே சிவபெருமானை தவறாது வழிபாடு செய்து வந்த சிறுவன் என்பதால், அவனது உயிரினைக் கவர்வதற்கு தனது தூதர்களை அனுப்பாமல், இயமன் தானே நேராக சென்றான் என்று இங்கே உணர்த்துகின்றார் போலும். உயிரினைக் கவர்வதை உயிரினை உண்பது என்று நயமாக கூறுகின்றார். பேணி=போற்றி, விரும்பி; வேணி=சடைமுடி; வியன்=அகன்ற, இங்கே விரிந்த புகழ் என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானை ஆணிப்பொன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆணிப்பொன் என்றால் மாற்று குறையாத பொன் என்று பொருள்.  மற்ற  பொன்னின் தன்மையை அறிந்து கொள்ள பொற்கொல்லர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஆணிப் பொன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதன் தரத்தினை அளப்பார்கள். தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமான், அனைவரிலும் உயர்ந்தவன் என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை ஆணிப்பொன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் மற்ற தெய்வங்களின் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கும் வண்ணம் குறையேதும் இல்லாத தெய்வமாக சிவபெருமானை ஞானசம்பந்தர் காண்கின்றார். தன்னை தியானித்து வழிபடும் அடியார்களின் பெருந்துயரங்களையும் களையும் வல்லமை பெற்றவர் சிவபெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், அதற்கு இரண்டு உதாரணங்களை கூறுகின்றார். சிறுவன் மார்க்கண்டேயன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரே அந்த உதாரணங்கள். இருவரையுமே அழிவு நிச்சயம் என்ற நிலையிலிருந்து காப்பாற்றிய இறைவனின் கருணை, அவர்கள் இருவரும் இன்றும் வாழ வகை செய்துள்ளது.

பொழிப்புரை:

மார்க்கண்டேயர் பெருமான் பால் கொண்டிருந்த அன்பினால், அவரை மிகவும் உயர்வாக மதித்த இயமன், முன்னமே குறிப்பிட்டிருந்த நாளில் அவரது உயிரினைக் கவர்ந்து உண்ணும் பொருட்டு தானே நேரில் சென்ற போதிலும், தனது அடியான் செய்து கொண்டிருந்த வழிபாட்டிற்கு இடையூறாக வந்த காலன் என்று அவன் மீது மிகுந்த கோபம் கொண்டு அவனை உதைத்து வீழ்த்தியவர் சிவபெருமான். தன்னை தியானித்து போற்றி வழிபடும் அடியார்களின் கொடிய துன்பங்களையும் விலக்கி அருள் புரியும் தன்மை உடைய சிவபெருமான், தனது சடைமுடியில் பிறைச் சந்திரனை அணிந்துள்ளார். ஆணிப் பொன் போன்று சிறந்த குணங்களை உடையவராக, புகழ் மிகுந்த சிரபுரம் தலத்தில் அமர்ந்துறையும் பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்களை கொடிய துன்பங்கள் தரும் வினைகள் சென்று சாரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com