150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 9

பிரமனும் பெருமுயற்சி செய்த போதிலும்,
150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 9
Published on
Updated on
1 min read


பாடல் 9:

    வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று
    கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய்க் கிளறியும் பறந்தும் தாம்
    பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி
    கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுதெழ வினை அவை கூடாவே

விளக்கம்:

சென்று அணை=சூழ்ந்து கொண்டு மொய்க்கும்; மாயன்=திருமால்; பலவிதமான மாயங்கள் செய்து அரக்கர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் உடையவர் என்பதால், மாயன் என்று திருமால் அழைக்கப் படுகின்றார். பண்டு கண்டது காண்டல்=புதிதாக ஒன்றையும் காணாமல், தாங்கள் முன்பு கண்டதையே காணுதல்; தங்கள் முன்னே தோன்றிய தீப்பிழம்பின், அடியையோ முடியையோ காண்பதற்கு பிரமனும் பெருமுயற்சி செய்த போதிலும், அவர்களால் புதியதாக ஏதும் காணமுடியவில்லை என்று சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். பரமேட்டி=தனக்கு மேலாக வேறு எவரும் இல்லாதவன்; பசு=உயிர்கள்; பதி=தலைவன்;  தங்களது முயற்சியால் பெருமானின் அடியையோ அல்லது முடியையோ கண்டு விடலாம் என்று அவர்கள் கொண்டிருந்த அகந்தை பின்னரும் தொடர்ந்தது என்பதை குறிப்பிடும் வண்ணம் பண்டு கண்டது காணவே என்ற தொடரினை  சம்பந்தர் கையாண்டுள்ளார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். தங்களது முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர் இருவரும் பெருமானைத் தொழுதனர் என்பதால், இந்த விளக்கம் பொருத்தமாக தோன்றவில்லை. பரமேட்டி என்ற சொல்லுக்கு, உயிர்கள் கொள்ள வேண்டிய மேலான விருப்பமாக உள்ளவன் என்றும் பொருள் கூறப்படுகின்றது.         

பொழிப்புரை:

வண்டுகள் சென்று சேரும் சிறப்பினை உடைய தாமரை மலரில் உறையும் பிரமனும் மாயன் என்று அழைக்கப்படும் திருமாலும், தங்கள் இருவரில் யார் பெரியவன் என்று தங்களுள் வாதம் செய்து கொண்டிருந்த போது, தங்களின் முன்னே எழுந்த நீண்ட நெருப்புப் பிழம்பின் அடியையோ முடியையோ காண்பவர் எவரோ அவரே தங்களில் பெரியவர் என்ற முடிவுடன், முறையே அன்னமாக பறந்தும் பன்றியாக கீழே தோண்டிச் சென்ற போதிலும், முடியையும் அடியையும் காண பெருமுயற்சி செய்த போதிலும், அவர்களால் புதியதாக ஏதும் காண முடியாத வண்ணம், நீண்ட தீப்பிழம்பாக நின்றவன் சிவபெருமான். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக உள்ள எமது பெருமான், தனக்கு மேலாக வேறு எவரும் இல்லாத தன்மையை உடையவன்; அத்தகைய இறைவன் செல்வவளம் நிறைந்த சிரபுரம் நகரத்தில் உறைகின்றான்; அவனைத் தொழுதெழும் அடியார்களை வினைகள் சென்று கூடா.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com