ஜவுளி சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னராக வாழ்ந்த மாமனிதர் ‘சாரதாஸ்’ மணவாளன்

“தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள். வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.” - ஆன்மிக பொன்மொழி.
ஜவுளி சாம்ராஜ்ஜியத்தின்
முடிசூடா மன்னராக
வாழ்ந்த மாமனிதர்
‘சாரதாஸ்’ மணவாளன்
Published on
Updated on
4 min read

இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக, தர்மத்தின் உறைவிடமாக, ஆன்மிக பற்றாளனாக, சமூக தொண்டனாக, வர்த்தக உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ஒரு எளிமையான கிராமத்து மனிதரின் வலிமையான வாழ்க்கை உலகுக்கே பிரமிப்பை தரக்கூடியதாக இருக்கிறது.

ஆம்... இந்தியாவிலேயே மிகப்பெரிய 'ஆடைகளின் சாம்ராஜ்ஜியமான' திருச்சி சாரதாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.மணவாளன் அவர்கள்தான் அந்த உயர்ந்த மனிதர்.

திருச்சி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமங்களில் ஒன்றான ஓமாந்தூரில் அவதரித்து, இலங்கையில் காலூன்றி, திருச்சியில் 'சாரதாஸ்' எனும் விருட்சத்தை வளர்த்தெடுத்து, ஆலமரமென வேரூன்றியவர் திரு.மணவாளன் அவர்கள்.

'அகலமாய் போவதைவிட ஆழமாய் போவதே சிறப்பு',

'பேராசை இருக்கக் கூடாது. ஆனால் பெயர் ஆசை இருக்கணும்' என்ற சொற்றொடர்களை வெறும் வார்த்தைகளாக மட்டுமின்றி, வாழ்க்கையாகவும் கொண்ட திரு.மணவாளன் அவர்களால் தொடங்கப்பட்ட 'திருச்சி சாரதாஸ்' என்ற மாபெரும் நிறுவனம் வேறு எங்கும் கிளைகள் தொடங்கப்படாமல், ஒரே இடத்தில், ஒரே பெயரில், ஒரே நிறுவனமாக, உலகத் தரத்துடன் செயல்பட்டு வருகிறது.

அசுர பாய்ச்சல்

பள்ளி படிப்பையே தாண்டாதவர் திரு.மணவாளன். தனது 13 வயதில் அன்றைய சிலோன், இன்றைய இலங்கையில் ஒரு ஜவுளிக்கடையில் சாதாரண ஊழியனாய் ஊற்றெடுத்த இந்த குளிரோடை, பின்பு நதியாக தவழ்ந்து, காலப்போக்கில் வற்றாத ஜீவநதியாகி அசுர பாய்ச்சல் காட்டியது

இலங்கையில் கடைநிலை ஊழியனாக வாழ்க்கையை தொடங்கிய திரு.மணவாளன் அவர்கள்,  அங்கேயே ஜவுளி நிறுவனங்களை நிறுவி, தன் தொழில் வேட்கையை தொடங்கினார். பின்னர், அங்கிருந்து திருச்சி வந்து கனிமவளங்கள், உருக்காலை, கோழி பண்ணை என வணிகத்தின் பல துறைகளிலும் கோலோச்சினார். ஆனாலும், அவரது மனம் முழு திருப்தியடையாமலேயே இருந்தது.

அதன்பிறகுதான், அவர் சிந்தனையில் உதித்த செந்தூரமாய், திருச்சி மாநகரில் ஆன்மிக அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், ஆண்டு முழுவதும் ஆர்ப்பரிப்புடன் இயங்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில், 'சாரதாஸ்' எனும் மாபெரும் ஜவுளி நிறுவனம் 1969-ம் ஆண்டு மலர்ந்தது.

அப்போதிருந்து, திரு.மணவாளன், ஊழியர்களுடன் தானும் ஓர் ஊழியனாக பணியாற்றி, வாடிக்கையாளர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டங்களை வகுத்து, திருச்சியின் அடையாளமாக ‘சாரதாஸை’யும், தனது அடையாளமாக 'சாரதாஸ் மணவாளன்' என்ற அடைமொழியையும்
உருவாக்கினார்.

வாடிக்கையாளரே முதன்மை

வாடிக்கையாளர்கள் கடைக்கு வரும் வரை உரிமையாளர்களின் கடையாகவும், கடைக்குள் நுழைந்துவிட்டால் அது வாடிக்கையாளர்களின் கடையாகவும் உருமாறும் தனித்துவம் 'சாரதாஸு'க்கு மட்டுமே உரித்தானது.

ஒரு கிராமத்து ஏழையின் குடும்பம் ஒரு வார கூலியில் ஒரு பண்டிகையை கொண்டாட தீர்மானித்து, ஆடைகள் வாங்க வரும்போது, அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்தது 'சாரதாஸ்'.

நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட்டுக்குள் பட்டாடைகள் வாங்க தி்ட்டமிட்டு, 'சாரதாஸு'க்கு படையெடுத்தால், அவர்களுக்கு சிம்மாசனமிட்டு, ராஜாவாக்கி கிரீடம் சூட்டியது 'சாரதாஸ்'.

வசதி படைத்தவர்கள் உயர் ரகங்களை நாடி இங்கு உலா வந்தால், அவர்களுக்கு வியப்பையும் உவப்பையும் பரிசளித்து பரவசப்படுத்தியது 'சாரதாஸ்'.

இப்படி ஆடைகளின் நிறம், தரம், விலை, வடிவமைப்பு என ஒவ்வொன்றிலும் வித்தியாசப்படும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்தையும் வாஞ்சையுடன் நிறைவேற்றியதால், இந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சி, பெரும் புரட்சியாக இருப்பதில் வியப்பில்லையே..!

 

வியாபாரமும், விளம்பரமும்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அனைத்து நிறங்களில், விதவிதமான டிசைன்களில், உயர்ந்த தரத்தில், நியாயமான விலையில், யாரும் நிராகரிக்கவே முடியாத அளவுக்கு ஆடைகளை அள்ளித் தெளிப்பதுதான் ‘சாரதாஸி’ன் வியாபார யுக்தியென்றால், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரு.மணவாளன் அவர்களின் விளம்பர யுக்தி பிரமிப்பானது.

வாடிக்கையாளரே முதல் விளம்பரதாரர் என்பதில் மிக தீர்க்கமாக இருந்த அவர், தனது நிறுவனத்தில் ஜவுளி வாங்குபவரின் கைகளில் நிறுவன பெயர் பொறிக்கப்பட்ட மஞ்சப்பையை கொடுத்தனுப்பி, அவர்களையே விளம்பர தூதுவர்களாக்கினார். அந்த மஞ்சப்பையை பல மங்கலகரமான நிகழ்வுகளுக்கு வாடிக்கையாளர்கள் கொண்டு செல்லத் தொடங்கியதால், இலவசமாகவே நிறுவனத்துக்கு விளம்பர வாய்ப்பை உருவாக்கினார்.

'சாரதாஸ்' நிறுவனத்துக்கான விளம்பர வடிவமைப்பை, தானே அருகில் இருந்து கண்காணித்து, அதை சரியான வகையில் பத்திரிகைகள் வாயிலாக மக்களிடம் கொண்டுசேர்த்தார். அன்று இந்த விளம்பர யுக்தியை கேலி செய்தவர்கள் எல்லாம், தற்போது அதே பாணியைதான் தங்கள் நிறுவன விளம்பரங்களுக்கு பின்பற்றுகிறார்கள் என்பதில் இருந்தே, திரு.மணவாளன் அவர்கள் தீர்க்கதரிசியாக, பலருக்கு முன்னுதாரணமாக இருந்தார் என்பதை அறியலாம்.

சமரசமில்லா தரம்

'கொள்முதல் தரமானதாக இருந்தால், அங்கு போட்டிக்கு வேலையே இல்லை' என்ற வார்த்தைகளை தாரக மந்திரமாக உதிர்த்த திரு.மணவாளன், தன்னை நம்பி வரும் வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில் தரமான ஆடைகளை வழங்க வேண்டும் என்பதில் எப்போதும் சமரசம் செய்துகொண்டதே இல்லை.

“ஒருவரின் வியர்வையில் நனைந்த ரூபாய் நோட்டுகளை பெறும் நாம், அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்” என்று அடிக்கடி கூறுபவர், தரத்தில் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் அதிக அக்கறை கொண்டவர்.

ஒருவரின் பொருளாதார பின்னணியைத் தாண்டி, ஆடைகள் என்பது அவருக்கு தன்னம்பிக்கை அளிப்பது என்பதை உணர்ந்து, அதை கடைக்கோடி கிராமத்து மனிதருக்கும் உரிய தரத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காக, உற்பத்தி செய்கிற இடத்திலேயே நேரடியாக கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்கும் நடைமுறையை செயல்படுத்தினார். 

சிந்தனையும், வெற்றியும்...

இரண்டு உலகப் போர்களைப் பார்த்த திரு.மணவாளன், “சவால் இல்லாத வாழ்க்கையே இல்லை. தினமும் கடைக்கு போகிறோம் என்பதைவிட போருக்கு போகிறோம் என கருத வேண்டும்” என்று தன் பிள்ளைகளிடம் கூறி, அவர்களிடம் பொறுப்புணர்வை வளர்த்தார். பள்ளிப் படிப்பையே தாண்டாதபோதும் அவர் 5 மொழிகளை பேசும் வித்தகர். புத்தகங்களின் காதலர். மிகச்சிறந்த சிந்தனையாளர்.

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனின் வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பது ஆடைகள் என்பதை சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டங்களை வகுத்து வெற்றி கண்டார்.

“உணவையும், உடையையும் சிரித்த முகத்துடன் கொடுக்க வேண்டும்” என தன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி, வாடிக்கையாளரின் முகத்திலும் புன்னகையை கொண்டுவந்தவர்.

மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்பதை உணர்ந்து, அதற்குள் தம்மை பொருத்திக் கொண்டவர். எவ்வளவு உயரத்துக்கு போன பிறகும் எளிமையாகவே காணப்பட்ட இந்த மனிதர், தன் நிறுவனத்தை மட்டும் கால மாற்றத்துக்கு ஏற்ப மேம்படுத்திக்கொண்டே வந்தார்.

“மக்களுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்க வேண்டும். அவர்கள் யோசிப்பதற்கு முன்பே, அதை நம் நிறுவனத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்”என தீராத வேட்கையுடன் உழைத்தார்.

ஊழியர்களின் ஆசான்

'சாரதாஸ்' நிறுவனத்தில் அனைவரும் தொழிலாளிகள், அனைவருமே முதலாளிகள் என்பதே திரு.மணவாளனின் கொள்கை. இங்கு பணியாற்றுபவர்கள் ஒரே வேலையை பார்ப்பதில்லை. அனைவரும் அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.

தொடக்கத்தில் 40 ஊழியர்கள் இருந்தபோதும், பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களாக அதிகரித்தபோதும், அவர்களை கவனித்துக்கொள்வதில் ஒரேமாதிரியான அணுகுமுறையை கடைபிடித்தவர் திரு.மணவாளன். அவர் மட்டுமின்றி, அங்கு வேலை பார்ப்பவர்களையும் கடையையே ஆலயமாக பார்க்கும்படி செய்தவர்.

இந்நிறுவனத்தில் வேலை பார்ப்பது அரசு வேலை பார்ப்பதுபோல என பலரும் கூறும்வகையில், ஊழியர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தார். உணவு, தங்குமிடம், நிறைவான ஊதியம், போனஸ் என யாருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு பார்த்து பார்த்து செய்தவர்.

அவர்களுக்கு நிறுவனத்தில் வழங்கப்படும் உணவை முதலில் தான் சாப்பி்ட்டு பார்த்து, அதன்பிறகே ஊழியர்களுக்கு வழங்கச் செய்வார். இதுவே, கவனமாக சமைக்க வேண்டும் என்ற அக்கறையை சமையலர்களிடம் ஏற்படுத்திவிடும்.

ஒவ்வொரு ஊழியரையும் சிற்பி போல செதுக்குவார். தன் பிள்ளைகளுக்கும், ஊழியர்களுக்கும் கற்றுக்கொடுப்பதில் நல் ஆசானாக திகழ்ந்தார். ஊழியர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், விடைகளை தேடிக் கண்டுபிடிக்க கற்றுக்கொடுத்தார்.

வயதாகிவிட்டது என எந்த ஊழியரையும் வேலையை விட்டு அனுப்பமாட்டார். அந்த ஊழியருக்கு ஏற்றார்போல வேலை கொடுக்கும்படி அறிவுறுத்தி, அங்கேயே வைத்துக்கொள்வார்.

“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?” என அவரிடம் யாராவது கேட்டால், தன் ஊழியர்களின் எண்ணி்க்கையையும் சேர்த்தே பதிலளிப்பார் எனும்போது, அதைவிட தனது ஊழியர்களை அவர் எப்படி கவனித்துக்கொள்வார் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்?

மக்கள் தொண்டு

இப்படி வியாபாரத்திலும், ஊழியர்கள் மீதான அக்கறையிலும் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கிய திரு.மணவாளனின் மறுபக்கம், மக்கள் சேவையிலும், ஆன்மிக தொண்டிலும் நீக்கமற நிறைந்திருந்தது.

மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுக்கு உதவி, முதியோருக்கான உதவி, மரக்கன்று நடுவது, நீர்நிலைகளை பராமரிப்பது, பேரிடர் காலங்களில் தேடிச் சென்று உதவுவது என விளம்பரமே இன்றி அவர் செய்த மக்கள் தொண்டு, மலைச் சிகரத்துக்கு நிகரானதாகும்.

 

ஆன்மிக சேவை

திரு.மணவாளனின் பொழுதுபோக்குகூட வியாபாரமும், அதைத் தொடர்ந்து ஆன்மிகமும்தான். தன் வாழ்நாளில் எந்தவித கேளிக்கைக்கும் நேரம் ஒதுக்காத இந்த மனிதரின் ஆன்மிகப் பணி, ஒருவர் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை பறைசாற்றும் விதமாக பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியது.

ஆன்மிகத்தின் மீது அதீத பற்றுக்கொண்டவராக வாழ்ந்த திரு.மணவாளன், தன் வாழ்நாளின் இறுதிவரை அப்படியே இருந்தார்.

'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்ற கூற்றுக்கு ஒரு படி மேலே சென்று, மக்கள் தொண்டுடன் இறை தொண்டையும் வாழ்நாள் கடமையாக கருதிச் செய்தவர். அவர் புனரமைத்த கோயில்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை. நூற்றுக்கும் அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார். இலங்கையில் உள்ள நாவலபட்டு என்ற ஊரில் உள்ள முருகன் கோயிலில் தினமும் முதல் அர்ச்சனை இவர் பெயருக்குதான் என்பது இவரது ஆன்மிகப் பணிக்கான ஆகச்சிறந்த உதாரணம்.

“பணம் என்பது ஒரு காகிதம். அதற்குரிய மதிப்பையே கொடுக்க வேண்டும். அதைத் தாண்டி அதற்கு மதிப்பளிக்கக் கூடாது” என கருதும் இவர், தனது சொத்துகளையே தன்னுடையதாக கருதாமல், “அனைத்தும் இறைவனின் சொத்துகள், நான் வெறும் மேற்பார்வையாளனே” எனக் கூறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.

வீறுநடை

'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்பதற்கு இலக்கணமாக, வற்றாத ஜீவநதியாய் வாழ்ந்து மறைந்த மாமனிதர் திரு.மணவாளன்.

தொழில், பக்தி, தர்மம், பொதுத் தொண்டு என அனைத்திலும் உச்சம் தொட்ட உன்னத மனிதரான திரு.மணவாளனின் வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்டது.

அவரது மறைவுக்கு பிறகு அவரின் சந்ததியினரும் அவரது வழியிலேயே சாரதாஸ் நிறுவனத்தை வீறுநடை போடச் செய்வதுடன், ஆன்மிக மற்றும் சமூக பணிகளையும் ஒருங்கே தொடர்ந்து வருவது, திரு.மணவாளன் அவர்கள் சிறந்த ஆசான் என்பதையே பறைசாற்றுகிறது.

பொறுப்புத் துறப்பு: வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான செய்தி இது. செய்தியிலுள்ள தகவல்கள் / விஷயங்களில் ‘தினமணி’க்கு எவ்விதப் பொறுப்புமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com