

கத்துக்குட்டி அணிகளால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சுவாரசியம் குறைந்துபோவதாக ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேச்சு எழுந்துள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள வங்கதேசம், ஜிம்பாப்வே, கென்யா, கனடா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய 6 அணிகளும் மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் கத்துக்குட்டி அணிகள்தாம்.
இவற்றில் வங்கதேசம், ஜிம்பாப்வே, கென்ய அணிகள் கடந்த கால போட்டிகளில் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தாலும், அந்த அணிகள் சீரான வளர்ச்சியைப் பெறவில்லை என்பதை மறுக்க முடியாது. உலகக் கோப்பை போன்ற மிகப் பெரிய போட்டிகளில் ஆடும் அளவுக்கு அந்த அணிகள் வளரவில்லை என்பதே உண்மை.
இந்த உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கென்யா வெறும் 69 ரன்களில் சுருண்டது. விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து எளிதாக வென்றது. மொத்தமே அந்தப் போட்டியில் 31.5 ஓவர்களே வீசப்பட்டன. சுமார் 8 மணி நேரம் நடைபெறக் கூடிய போட்டி இரண்டரை மணி நேரத்தில் முடிந்தேவிட்டது.
மற்றோர் ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக இலங்கை 332 ரன்களைக் குவித்தது. இலக்கை துரத்திய கனடா 122 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாகத் தோற்றது. ஆவலோடு போட்டியைக் காணக் காத்திருந்த ரசிகர்களுக்கு இதுபோன்ற ஆட்டங்கள் என்ன சுவாரசியத்தை அளித்திருக்க முடியும்?
"பெரிய அணிகளுடன் ஆடும் வாய்ப்பு எங்களுக்கு அதிகமாக கிடைப்பதில்லை. எங்கள் வீரர்கள் பதற்றத்துடன் விளையாடியதால் எளிதில் தோற்றுவிட்டோம்' என கென்யா, கனடா அணிகளின் கேப்டன்கள் தெரிவித்தனர். இந்தக் காரணங்கள் நியாயமாகத் தோன்றினாலும், ஆக்ரோஷமான போட்டியை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்கள் இதனால் எல்லாம் சமாதானம் அடைய மாட்டார்கள்.
இங்கிலாந்துக்கு எதிராக நெதர்லாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றாலும், இதுபோன்ற திறமையை சிறிய அணிகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவதில்லை.
கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் கனடா ஓர் ஆட்டத்தில் 36 ரன்களுக்கும், மற்றோர் ஆட்டத்தில் 45 ரன்களுக்கும், நமீபியா 45 ரன்களுக்கும், ஸ்காட்லாந்து 68 ரன்களுக்கும் சுருண்டது நினைவிருக்கலாம்.
கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக வலுவான அணிகள் முதலில் களமிறங்கினால் மானாவாரியாக ரன்களைக் குவித்து விடுகின்றன. கடந்த முறை பெர்முடாவுக்கு எதிராக இந்தியா 413 ரன்களையும், இந்த முறை வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 370 ரன்களையும் விளாசியது நினைவுகூரத்தக்கது.
இந்த முறை உலகக் கோப்பை போட்டியில் "சூப்பர் 8' சுற்று கிடையாது.
லீக் ஆட்டங்கள் முடிந்ததும் நேரடியாக நாக்-அவுட் சுற்றுகள் (காலிறுதி, அரையிறுதி) தொடங்கிவிடும். மொத்தம் உள்ள 42 லீக் ஆட்டங்களில் 30 ஆட்டங்கள் ஏதாவது ஒரு கத்துக்குட்டி அணி பங்கேற்கும் ஆட்டங்கள்தான். இவற்றின் முடிவு ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதை இப்போதே கூறிவிடலாம். "சூப்பர் 8' சுற்று இருந்தாலாவது, தகுதி வாய்ந்த 8 அணிகள் தங்களுக்குள் மோதும் மிகப் பெரிய கிரிக்கெட் விருந்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், மொத்தமே 4 காலிறுதிகளுடன் ரசிகர்கள் திருப்தி அடைய வேண்டிய நிலையே உள்ளது.
உலகக் கோப்பை என்றால் அத்தனை அணிகளும் (1992 போல) ஒருமுறையாவது தங்களுக்குள் மோதி, அதில் வென்று, படிப்படியாக முன்னேறி கோப்பையை வெல்வதுதான் சிறப்பு. ஆனால் இம்முறை பெரிய அணிகள், தங்களுக்கு சமமான பல எதிரணிகளுடன் மோத முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. இந்தியா-பாகிஸ்தானோ, இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவோ, இலங்கை-மேற்கிந்திய தீவுகளோ மோதும் ஆட்டத்தை ரசிக்கலாம் என்றால் குறைந்தது காலிறுதி ஆட்டம் வரை அத்தகைய ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது.
அப்படியிருக்கையில் லீக் ஆட்டங்களிலும் 30 ஆட்டங்களில் பெரிய சுவாரசியத்தை எதிர்பார்க்க முடியாது என்றால், அது ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான். கடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 அணிகள் விளையாடின. அதில் பெர்முடா, ஸ்காட்லாந்து அணிகள் நீக்கப்பட்டு இந்த முறை 14 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2015-ல் நடைபெறவுள்ள போட்டியில் மொத்தம் 10 அணிகளே பங்கேற்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆனால், ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணிகளைக் குறைப்பதன் மூலம் சிறிய நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சி பெறாது என்பது அவர்களது கருத்து.
உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் கால்பந்து விளையாடினாலும், உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு 32 அணிகளே சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. அதுவும் தகுதிச் சுற்று போட்டிகள் மூலம் அவை தேர்வு செய்யப்படுகின்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கக் காரணமே தகுதி வாய்ந்த முழு பலம் கொண்ட அணிகள் விளையாடுவதால்தான்.
கிரிக்கெட்டை பொறுத்தவரை குறைந்த நாடுகளே விளையாடுகின்றன என்றாலும், உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளிலாவது வியாபார நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் தகுதி வாய்ந்த 8 அணிகளைச் சேர்த்தால் போதுமானது. உலகக் கோப்பைக்கு முன்னதாக ஓராண்டில் ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல்படி முதல் 8 இடங்களைப் பிடிக்கும் நாடுகளை மட்டும் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யலாம். அதிகமான நாடுகள் விளையாடுவதால் கிரிக்கெட் வளர்ந்துவிடாது. போட்டிகள் பரபரப்பாகவும், எந்த அணி வெற்றி பெறுமோ என்ற பரபரப்பை ஏற்படுத்துவதாகவோ இருந்தால்தான் கிரிக்கெட் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு மேலும் அதிகரிக்கும்.
புதிய நாடுகளும் கிரிக்கெட்டில் வளர வேண்டுமென்றால் அதற்கு மாற்று வழிகள் பல உள்ளன. ஆண்டுதோறும் பெரிய அணிகளுடன் சிறிய அணிகள் மோதும் போட்டிகளை நடத்தவோ, சிறிய அணிகளே தங்களுக்குள் அதிகமான போட்டிகளில் மோதவோ ஐ.சி.சி. ஏற்பாடு செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.