

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது "கத்துக்குட்டி' என கூறப்பட்ட அயர்லாந்து அணி. கிரிக்கெட்டை மிகவும் ரசித்துப் பார்ப்பவர்களுக்கு இந்த ஆட்டம் நல்ல விருந்து என்றே கூறலாம்.
எப்படியும் இங்கிலாந்து அணி வென்றுவிடும்; அதை நேரில் சென்று பார்க்க வேண்டுமா என்று நினைத்திருந்தவர்களுக்கும், கால் இறுதி ஆட்டங்கள் தொடங்கிய பிறகுதானே விறுவிறுப்பு இருக்கும் என்ற எண்ணத்தில் தொலைக்காட்சியிலும் அந்த ஆட்டத்தைப் பார்க்காமல் இருந்தவர்களுக்கும், ஆட்டத்தின் முடிவு நிச்சயம் வியப்பை ஏற்படுத்தியிருக்கும்.
இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை "ஏதோ! குருட்டு அதிர்ஷ்டத்தில்' வென்று விட்டார்கள் என்று மட்டும் அயர்லாந்து அணியைப் பற்றி யாரும் நினைத்துவிட முடியாது. அந்தளவுக்கு, பல சாதனைகளை தனதாக்கியுள்ளது அந்த அணி.
ஆட்டத்தை வென்று கொடுத்த கெவின் ஓ" பிரையன் பாராட்டுதலுக்குரியவர். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கி இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்ததோடு, உலகக் கோப்பை போட்டிகளில் குறைந்த பந்துகளில் (50) சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார் பிரையன்.
328 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திப் பிடிக்க முடியுமா என துவண்டுவிடாமல், இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, உலகக் கோப்பை போட்டித் தொடரில் அதிக ரன்களை "சேஸ்' செய்த பெருமையைப் பெற்றுள்ள அயர்லாந்து அணி வீரர்கள் அனைவருமே பாராட்டுதலுக்கு உரியவர்கள்தான்.
இங்கிலாந்தின் இமாலய ரன் குவிப்புக்குப் பிறகு களமிறங்கிய அயர்லாந்து அணியின் தலைவர் வில்லியம் போர்ட்டர்பீல்டு ரன் எதுவும் எடுக்காமல், முதல் ஓவரின் முதல் பந்திலேயே "கிளீன் போல்டாகி' வெளியேறியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து விடும் என்ற விமர்சகர்களின் கணிப்பு 24.2 ஓவர் வரை மட்டுமே நீடித்தது.
ஆம்! அப்போது அயர்லாந்து அணி 111 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ந்து, களமிறங்கிய கெவின் ஓ' பிரையனும் அவருக்கு இணையாக ஆடிய குசாக்கும் சிறப்பானதொரு இணையாட்டத்தை வெளிப்படுத்தினர்.
இத்தனைக்கும் மேலாக, இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் பல தவறுகள் செய்ததை நாம் மறுப்பதற்கில்லை. குறிப்பாக, உதிரியாக 33 ரன்களை இங்கிலாந்து அணி வழங்கியது ஒருநாள் போட்டிக்கு உகந்தது அல்ல.
ஒருநாள் ஆட்டத்தைப் பொறுத்தவரை, குறிஞ்சிப் பூ பூத்த மாதிரி எப்போதாவது அதிசயங்கள் நிகழ்வது வாடிக்கையே! முதல் இரண்டு உலகக் கோப்பையையும் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை 1983-ம் ஆண்டு லீக் சுற்றில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இந்திய அணி. தொடர்ந்து சிறப்பாக ஆடியதாலேயே நாம் அப்போது கோப்பையையும் வென்றோம்.
இதேபோல, கடந்த உலகக் கோப்பைத் தொடரில் நாம் வங்கதேசத்திடம் தோற்றதால் சூப்பர் 6 சுற்றுக்கு கூடத் தகுதி பெறாமல் நாடு திரும்பினோம். இந்தத் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி அயர்லாந்து அதிர்ச்சி கொடுத்தது போல, "கத்துக்குட்டி' அணியாக கருதப்பட்ட கென்ய அணி, இதற்கு முன்னர் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆனால், முந்தைய போட்டிகளில் கத்துக்குட்டி அணிகள் தந்த அதிர்ச்சியைவிட இப்போது இங்கிலாந்துக்கு அயர்லாந்து அணி கொடுத்திருப்பதே உண்மையான அதிர்ச்சி வைத்தியம்.
ஏனென்றால், 2-வதாக ஆடும்போது பிரதான அணிகளே 300 ரன்களுக்கு மேலான இலக்கை எட்ட முடியாமல் தடுமாறும்போது, அயர்லாந்து அணி வீரர்கள் அந்த இலக்கை எட்ட ஆடிய விதம் உண்மையில் வியப்புக்குரியதே.
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன் நடந்த ஜிம்பாப்வேயுடனான பயிற்சி ஆட்டத்தில் 244 என்ற வெற்றி இலக்கை 6 விக்கெட்டுகளை இழந்து எட்டிப்பிடித்து வென்றது அயர்லாந்து அணி. அப்போதே, தாங்கள் ஒன்றும் சாதாரண அணி அல்ல என எச்சரிப்பது போன்று இருந்தது அந்த அணியின் ஆட்டம்.
உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக நடத்தப்பட்ட தகுதிச் சுற்றுப் போட்டிகள் 2009-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. 12 அணிகள் பங்கேற்ற இந்தச் சுற்றில் சிறப்பாக விளையாடி முதலிடத்தைப் பிடித்தது அயர்லாந்து அணி.
இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள அயர்லாந்து அணியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க இருக்கிறது இந்திய அணி. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால்...
உலகக் கோப்பையைக் கைப்பற்றும் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ள நமது தோனி படை தொடர்ந்து வரும் ஆட்டங்களில் வெற்றி பெறுமா என்பதும், அயர்லாந்து அணியின் வெற்றியைத் தடுக்குமா என்பதும்தான் இப்போது எழுந்துள்ள கேள்வி?
வங்கதேசத்திடம் தோற்றதால் கடந்த முறை வெளியேறிய நமது அணிக்கு இந்த முறை அப்படியொரு நிலை வராது; வரக்கூடாது என்பதுதான் நமது எண்ணம். ஆனால், இங்கிலாந்துடனான ஆட்டத்தில் கிட்டத்தட்ட தோல்வியிலிருந்து தப்பியது என்றே கூறும் அளவுக்கு இந்திய அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது.
நடு வரிசை ஆட்டக்காரர்களின் நிதானமற்ற ஆட்டம், மோசமான பீல்டிங் என அயர்லாந்து அணியுடனான ஆட்டத்தில் செயல்பட்டால் இங்கிலாந்தை போல இந்தியாவுக்கும் அதிர்ச்சி ஏற்படலாம்.
கத்துக்குட்டி அணி என கருதாமல் முழுவீச்சுடன் செயல்பட்டு அயர்லாந்து அணியின் வேகத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் என்பது முடிந்து போன விஷயம். அடுத்து அயர்லாந்து அணியை சந்திக்க இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது தோனி படைதான். சமாளிப்பார்களா, சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.